இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 மே, 2017

கடனாளியாக மரணித்த மாமன்னர்!

              Related image                                                  
சமீபத்தில் 113 க்கு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துக்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து அனைத்தையும் கைவிட்டு கல்லறையை அடைந்துள்ள ஒரு ஆட்சியாளரைப் பற்றி அறிவோம். அவர் வகித்து அனுபவித்த அதே பதவியை அடைய இரவுபகலாக பாடுபட்டு வரும் இன்னும் பலரையும் நாம் அறிவோம். ஆம், ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் முழு அதிகாரமும் தன் கைக்கு வருகிறது என்றால் சும்மாவா?
ஒரு ஜனநாயக நாட்டின் நிலையே இதுவென்றால் மன்னராட்சி நடைபெறும் நாடுகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம். தான் ஆதிக்கம் பெற்ற நாட்டின் முழு வளங்களுக்கும் தான்தான் அதிபதி என்ற மனோநிலை ஆட்சிப் பொறுப்பில் வருபவர்களுக்கு வந்து விடுவதை நாம் காண்கிறோம். நாட்டு வளங்களுக்கு உண்மை அதிபதி இவ்வுலகைப் படைத்த இறைவனே. அவன் தற்காலிகமாக தந்திருப்பதே இந்த ஆட்சியதிகாரம், இதுபற்றி இறைவன் என்னை விசாரிக்க உள்ளான் என்ற பொறுப்புணர்வு இருந்தால் இவர்கள் நாட்டின் சொத்துக்களை தனதாக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள்.
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
= உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்.... “ 
அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி, முஸ்லிம்)


தனது வாழ்நாளில் ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெற்றிருந்தார் நபிகள் நாயகம். அன்றைய உலகில் இருந்த வல்லரசுகளில் மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

= 'முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096
அவரது ஆட்சிக்காலத்தில் வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திருந்து வாரி வழங்கிய அந்த மாமன்னர் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது நபிகளார் விட்டுச் சென்ற சொத்துக்கள்:

= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். (நூல் : புகாரி 2739)

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவைதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக