இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

பெண்குழந்தைகளைக் காப்போம்


குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று தரம்தாழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட தான் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது! அச்செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது.
 நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.
அழகிய சொல்லாடல்களைக் கையாண்டனர். நாளும் பொழுதும் ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்தனர். “நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர். இன்னும் சில சமூகப் பொறுப்பில்லாத கயவர்கள் “நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்?” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே! ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே  மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன!  இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலைகள் நாடு எங்கும் நிறைவேறின. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகின்றன. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை! என்ன ஆச்சரியம்!
சமூகத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, பாச நேசங்களை சமநிலைப்படுத்த  இறைவன் வழங்கிய பெண்மை என்ற ஒரு மாபெரும் பொக்கிஷத்தை அறியாமையின் காரணமாக தொலைத்துகொண்டு நிற்கிறது மனித இனம்!
அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடர்ந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன.
பெண்ணுரிமைவாதிகள் எங்கே?
பெண்களை ஒருபுறம் கொன்றோதுக்கி விட்டு  மறுபுறம் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்! அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள்? தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன? பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை! இதைப் பாதுகாக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் அவர்கள்?
இறைநம்பிக்கையாளர்களின் கடமை:
யார் எப்படி செயல்பட்டாலும் சரி, செயல்படாவிடினும் சரி, இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நன்மக்கள் இத்தீமை இனியும் சமூகத்தில் பரவாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். இன்று வாழ்வோரையும் இனி வரும் தலைமுறகளையும் இக்கொடுமையின் ஆபத்து பற்றி உரிய முறையில் எச்சரிப்பது நமது கடமை.
உலகை சீரமைப்போம் வாரீர்!
இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.
= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே! மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்
17:31  .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
இன்று பெண்குழந்தைகள் என்றால் ஸ்கேன் செய்து பார்த்து கொல்லும் பெற்றோர்கள் நாளை மறுமை நாளில் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே அவர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள்
81:7-9 .உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-
இறைவன் கற்பிக்கும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவோரிடம் இத்தீமை நடைபெறுவதில்லை! இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம் என்று அரபி மொழியில் அறியப்படுகிறது. பெண் சிசுக்கொலையை மட்டுமல்ல, அதற்கு இட்டுச்செல்லும் அனைத்து விடயங்களையும் உரியமுறையில் தடை செய்கிறது இஸ்லாம். பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் வரதட்சணை. திருமணத்தின்போது  வரதட்சணைக்கு நேர் எதிராக மஹர் என்னும் மணக்கொடையை மணமகன் மணமகளுக்கு வழங்குவதை கட்டாய கடமை ஆக்கியுள்ளது இஸ்லாம். பெண் என்பவள் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம், அவளை அடைய வேண்டுமானால் அதற்காக ஆண் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, திருமணத்தின் மூலம் உண்டாகும் அனைத்து செலவினங்களையும் குடும்பத்தின் பராமரிப்பையும் ஏற்பதை ஆணின்மீது சுமத்துகிறது. பெண்ணுக்கு ஆணுக்கு சமமான உரிமைகளை வழங்கும் அதேவேளையில் அவளை காட்சிப் பொருளாக்கியும் கடைசரக்காக்கியும் இளமையிலேயே அவளது கற்ப்பை சூறையாட நினைக்கும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க உரிய உடை ஒழுக்கத்தையும் ஆண் பெண் உறவு வரம்புகளையும் கற்ப்பிக்கிறது. இவ்வாறு பெண்ணைப் பெற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்கி அவர்களைப் பெருமை மிக்கவர்களாக சமூகத்தில் உயர்த்துகிறது இஸ்லாம்!  
இறைவிசுவாசிகளே வாருங்கள், நாத்திகர்களை நம்பி உங்கள் இனங்களை நீங்களே அழித்து விடாதீர்கள். இறைவனின் வாக்குகளை நம்புங்கள். குழந்தைகளை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை அரிய பொக்கிஷமாக கருதி போற்றி வளருங்கள். இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன்  வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" அறிவிப்பாளர்:  நபித்இப்னு ஷுரைத் (ரலி)  ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243
எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டதுஎன்றார் நபிகளார் (ஆதாரம்:அஹ்மத்)

பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்!

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக