இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 மார்ச், 2014

பூமியென்ற வாழ்விடம்!


இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில
= பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
= பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
=  பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்
= எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
= பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
= இப்போது நாம் காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
= அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
= அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
= இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
= இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை மட்டுமே தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
= பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.

இவ்வளவையும் இன்னும் நாம் அறியாத பலவற்றையும் சுமந்து கொண்டிருக்கும் பூமிப்பந்தின் மீது நம்மை அமர்த்தியவன் இந்த பூமி நம்மோடு இன்று பகிர்ந்து கொள்ளும் செய்திகளையும் செவிமடுக்க அழைக்கிறான்...
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34.மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

= பூமியைப் படைத்தவன் அதன் நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்....
18:7. (மனிதர்களில்)அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
= அதே பூமி ஒருநாள் உருமாற்றப்படும் என்றும் எச்சரிக்கிறான்...
18:8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூணில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
ஆக, நம்மையும் இந்த பூமியையும் படைத்து பரிபாலித்துவரும் கருணையாளனாம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள் என்பது நாம் பெறவேண்டிய பாடமாகும். ஆனால் இறைவன் நமக்கு அயராது வழங்கும் அருட்கொடைகளை அனுபவித்துவிட்டு இறைவன் அல்லாதவற்றை வணங்குவதும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று பாவிப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். அவனை இழிவுபடுத்துவதும் செய்நன்றி கொல்லும் செயலுமாகும். இச்செயலையே திருக்குர்ஆன் இணைவைத்தல் என்றும் இது இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் என்றும் குறிப்பிடுகிறது.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரிய இறைவன் என்று பொருள்)
= இதே பூமி அதன்மீது நடைபெறும் அனைத்து செய்திகளையும் பதிவு செய்கிறது என்றும் அவற்றை இறுதித் தீர்ப்பு நாளன்று வெளிப்படுத்தும் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்:
99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3. ''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-
99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக