இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!

இன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், மதம், நிறம், மொழி, இனம், நாடு போன்ற பல காரணிகள் நம்மைப் பிரித்தாலும் மனிதர்கள் நாம் யாவரும் ஒருவகையில் இணைந்து இரண்டறக் கலந்துதான் வாழ்கிறோம். இந்ந்நிலை இவ்வாறே தொடருமா அல்லது முடியக் கூடியதா?

இதற்கோர் முடிவுண்டு என்கிறான் நம்மைப் படைத்தவன். ஆம், இவ்வுலகு ஒருநாள் அழியும். அதைத் தொடர்ந்து மீண்டும் நாம் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்கிறான் அவன். இதோ தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
30:14. மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
30:15. ஆகவே, எவர்கள் விசுவாசம் கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவனப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
30:16. இன்னும், எவர்கள் சத்தியத்தை மறுத்து (அதாவது காஃபிராகி)  நம்முடைய வசனங்களையும் , மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ  அ(த்தகைய)வர்கள் வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
இன்று நாம் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும், நமது இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது வினைகளின் அடிப்படையிலும் நாம் பிரிக்கப்படுவோம். அந்த நாள் யாராலும் தவிர்க்கமுடியாத நாள்! அது நிகழ்வதை தடுத்துவிடவோ அல்லது அந்நிகழ்வில் இருந்து யாரும் தப்பி ஓடவோ இயலாத நாள்! காலாகாலமாக இறைத்தூதர்களாலும் இறைவேதங்களாலும் எச்சரிக்கை செய்யப்பட்ட நாள்தான் அது! யார் இறைவனுக்காக தங்களைக்  கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்களோ அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கத் துடங்கும் நாள் அதுவே! யார் இறைகட்டளைகளை புறக்கணித்தும் அலட்சியப்படுத்தியும் ஏளனம் செய்தும் வாழ்ந்தார்களோ அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் துடங்கும்  நாளும் அதுவே!
ஆக, அந்நாளில் மனிதனுக்கு அவனது குலப்பெருமையோ, செல்வமோ, ஆதிக்க பலமோ எதுவுமே துணை வராது. எவர் துணையும் இன்றி வெட்டவெளியில் விடப்படுவது போன்ற ஓர் நிலை அது! ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் சம்பாதித்த வினைகளின் பட்டியலை மட்டுமே சுமந்தவர்களாக நிற்கும் நாள் அது! அந்நாளின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு இதோ இறைவன் தொடர்ந்து கூறுகிறான்:
30:17. ஆகவே, (இறைவிசுவாசிகளே!) நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும்  , நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்.
30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் நண்பகலின் போதும் (இறைவனைத் துதியுங்கள்).
ஆம், இவ்வுலகம் என்ற பரீட்சைக் களத்தில் நம் வாழ்வின் உண்மை நோக்கத்தை நாம் மறந்து விடாமல் இருக்கவும் நேர்மையாக வாழவும் ஷைத்தான் நம்மை தீய சஞ்சலங்களுக்கு உட்படுத்தி வழிகெடுக்காமல் இருக்கவும் இறைநினைவு அடிக்கடி புதுப்பிக்கப் பட வேண்டும். அதற்காக ஏவப்படுவதே இறைவனை துதித்தல் என்ற கடமை.  அந்த துதித்தலுக்கு தகுதியானவனும் படைத்தவன் ஒருவன் மட்டுமே. அவனது ஆற்றல்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறியத் தூண்டுகிறான். அதற்காக பூமியெங்கும் பரவி நிற்கின்றன அவனது அத்தாட்சிகள்! இவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைவனின் எச்சரிக்கைகள் அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள் என்பதும் அவை வெற்றுப் பூச்சாண்டிகள் அல்ல என்பதும் புலனாகும்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
30:20. மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
இல்லாமையில் இருந்து நாம் படைக்கப்பட்டு இன்று நடமாடிக்கொண்டு இருப்பதும்  நாம் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவையும் என  அனைத்தும் அந்த இறைவனின் ஏற்பாடுகளே! இதில் எங்குமே மனித கரங்களுக்கோ அறிவுக்கோ எவ்விதப் பங்கும் இல்லை அதிகாரமும் இல்லை என்பது தெளிவு!
30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:23. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன் நிச்சயமாகஅதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.
30:25. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளதாகும். பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
ஆம், மேற்கூறப்பட்ட அற்புதங்களில் உங்களுக்கு எவ்வாறு எந்த பங்கும் ஆற்றலும் இல்லையோ அதேபோல அதைத் தொடரும் நிகழ்விலும் உங்களுக்குப் பங்கு கிடையாது. அவன் மீண்டும் அழைக்கும் போது பூமியில் இருந்து வெளிப்பட்டு வருவதைத் தவிர வேறு வழியுண்டா சொல்லுங்கள்!
30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.
30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

எனவே அந்த எல்லாம்வல்ல இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பதுவே அறிவுடைமை. அந்த கீழ்படிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக