இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

விண்வெளியில் ஒரு பரீட்சைக்கூடம்!


விமானத்தில் பறந்து செல்ல ஆசை நம் அனைவருக்கும் உண்டுதானே..
 நீங்கள் ஒரு கம்பெனியில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்து இருந்தீர்கள்... அதற்கு பதிலாக அந்த கம்பெனி உங்களை ஒரு தேர்வுக்காக அழைக்கிறது... அது ஒரு வித்தியாசமான அழைப்பு... அந்த தேர்வு இம்முறை விண்வெளியில் என்கிறது அந்த அழைப்பு! ... ஒரு விண்கலத்தில் அமர்ந்து அந்த தேர்வை எழுதி வர வேண்டும்... போவீர்களா, மாட்டீர்களா?
விண்வெளியில் பறக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவவிடுவோமா? அதுவும் இலவசமாக கிடைப்பது என்றால்...?

நீங்கள் நழுவவிட்டாலும் உங்களைப் படைத்தவன் விடுவதாக இல்லை. ஆம்... உங்களைப் படைத்த பின் உங்களை ஒரு விண்கலத்தின் மீது தான் விட்டுள்ளான்.  ஆம் அதுவே பூமி என்ற பிரமாண்டமான விண்கலம்!
ஆம் அன்பர்களே, நம்மில் பலரும் வாழ்க்கைக்காக உழைப்பதிலும் உழைத்து சம்பாதித்ததை செலவு செய்வதிலும் ரொம்பவும் பிசியாக இருப்பதால் இந்த உண்மைகளின் பக்கம் கவனம் செலுத்த நேரம் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்...
உங்கள் முகவரி என்ன என்று கேட்டால், கதவு எண், தெருப்பெயர், ஊர், மாவட்டம், மாநிலம், நாடு இவற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் அதற்கப்பாலும் உள்ள முகவரியை நாம் அறிந்து கொள்ளவேண்டாமா?
வாருங்கள்.... அவற்றைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வோம்...
இதோ நம்மைப் படைத்த இறைவனே நம்மை இவற்றைப்பற்றி ஆராயுமாறு அழைக்கிறான்....
= பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88: 20)

= வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

இரவும் பகலும் நம் மீது மாறி மாறி வருவதைப் பற்றியும் வானில் கண்சிமிட்டும் விண்மீன்களைப் பற்றியும் நமக்கு அருகாமையில் உள்ள சந்திரன் மற்றும் சூரியன் இவற்றின் சலனங்களையும் பற்றி கவனமாக சிந்தித்தாலே நாம் ஓரிடத்தில் நிற்கவில்லை என்பதை அறியலாம். நாம் நமது அறைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் நம்மை சுமக்கும் பூமி என்ற விண்கலம் தன் பயணத்தை நிறுத்துவதில்லை. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. அறிவியல் நமக்கு இன்று கற்றுத்தரும் உண்மைகள் இவை:
=. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
=. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
=  பூமி தன்னைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
=. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
= பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)
=  சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
=  பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
=  பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறது.
ஆக,  நாம் செய்து கொண்டிருக்கும் விண்வெளிப்பயணம் எப்படிப்பட்டது? எத்தனை விதமான பயணங்கள் பாருங்கள்...
= தன்னைத்தானே சுற்றும் பயணம்!
= சூரியனை சுற்றும் பயணம்!
=  சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பயணம்.! இங்கேயும் முடியவில்லை.
= பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளையமடித்துக்கொண்டு போகும் பயணம்!

இவ்வாறு நான்கு விதமான பயணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அத்தனையும் இலவசம்! அதே நேரம் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறோம்.

36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40.சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

இவையெல்லாம் எதற்காக? இப்பயணங்கள் எதை இலக்காகக்கொண்டு நடைபெறுகின்றன? நாம் கண்டும் காணாமல் இப்படியே இருந்துவிட்டால் இதை நடத்திக்கொண்டு இருப்பவன் சும்மா விடுவானா? அவன் வீணுக்காக இதை செய்கிறானா? நாம் சிந்திக்க வேண்டாமா அன்பர்களே?
23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''
இறைவனின் இக்கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போதுதான் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதெ!.

ஆம், இந்த பூமியென்ற விண்கலத்தின் மீதமர்ந்து நாம் செய்யும் இந்த குறுகிய சவாரியின் நோக்கம் மறுமை வாழ்வில் நம் இருப்பிடத்தை முடிவு செய்வதற்காகவே! இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்வோர் இப்பயணத்தின் இறுதியில் சொர்க்கத்தை சென்றடைகிறார்கள். அல்லாதோர் நரகத்தை சென்றடைகிறார்கள்.

2 கருத்துகள்:

  1. அறிவார்ந்த படிப்பினைக்குறிய சிந்தனைத்துளிகள்

    பதிலளிநீக்கு
  2. அறிவார்ந்த படிப்பினைக்குறிய சிந்தனைத்துளிகள்

    பதிலளிநீக்கு