இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2013

சாதிகள் ஒழித்திடடி பாப்பா!


'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார் பாரதி. 
பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர். நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர். 
நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வேரறுக்க வேண்டும் என்று பலரும் இடையறாது பாடுபடுவதை நாம் கண்டு வருகிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற பழம்பெரும் தலைவர்களும் தங்கள் வாழ்நாளையே இதற்காக தியாகம் செய்து போராடிச் சென்றதையும் நாம் கண்டோம்.
 இன்றும் அவர்களைத் தொடர்ந்து அவர்களின் தொண்டர்களும் சீடர்களும் பல இயக்கங்களை உருவாக்கி அவையும் பல குழுக்களாக நாடெங்கும் செயல்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இந்த ஜாதிக் கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதிச்சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. காரணம் என்ன? நாட்டின் நலன் கருதி நாம் இதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளையில் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் தலைமுறையினரும் ஒருகாலத்தில் தங்களை பீடித்திருந்த ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்தும் தங்களைத் தாங்களே எளிதாக விடுவித்துக்கொண்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து இது நடந்துகொண்டே இருக்கிறது. இதற்காக இவர்கள் யாரிடமும் முறையிடுவதும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைப்பதும் இல்லை. எந்தப் பொருட்செலவும் இல்லை! இதற்காக இவர்கள் செய்வதெல்லாம் என்னவெனில், ஒரு சில அடிப்படை உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்வதுதான்! அது என்ன?

அதை அறியும் முன் கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் அதைப்பற்றிக் கூறுவதைக் கேட்போம்:
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒருகுடிஅரசுஎப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.

டாக்டர் அம்பேத்கர் இது பற்றி என்ன கூறினார்? இதோ,
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.”
இது பற்றி தந்தை பெரியாரின் கூற்றும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே:
“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து!”
இவர்களெல்லாம் கூறுவதில் உண்மை உள்ளதா?.... ஆராய்வோம் வாருங்கள்.
தொடரும் இப்புரட்சியின் துவக்க கட்டத்திற்குச் செல்வோம்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னர் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள். அங்கே இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள். ஒன்றே மனித குலம், அனைத்துலகுக்கும் ஒருவன் மட்டுமே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன். அனைவரும் அந்த இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், மறுமை வாழ்வே உண்மையானது, அங்கு நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் செல்லவேண்டுமானால் இங்கு நன்மைகளை செய்யவேண்டும், தீமைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து இஸ்லாத்தை வளர்த்தார்கள்
பகுத்தறிவை முறையாக பயன்படுத்தி அதன்மூலம் நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இஸ்லாம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். வெறும் போதனைகளோடு நின்றுவிடாமல் தொழுகை ஜக்காத் போன்ற அன்றாட நடைமுறைகள் மூலம் சமூக இணைப்பை உறுதிப் படுத்தினார்கள்.
= படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனை நேரடியாக அணுகலாம்  என்ற கோட்பாட்டை ஏற்ற மாத்திரத்திலேயே அவர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்தும் இடைத் தரகர்களின் சுரண்டல்களில் இருந்தும் ஆதிக்கசக்திகளின் கொடுமைகளில் இருந்தும் விடுதலை பெற்றார்கள்.
= மனிதகுலம் அனைத்தும் ஒரே தாய் ஒரே தந்தையில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களின் சந்ததிகளே என்ற உண்மையை உணர்ந்த மாத்திரத்தில் தங்களை இதுகாறும் கட்டிப்போட்டு வைத்திருந்த குலம், கோத்திரம், நிறம், இனம் போன்ற மாயைகளையும் ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமை உணர்வுகளையும் மறந்தார்கள். தன் அருகில் இருப்பவன் தன் சகோதரனே, தன் குடும்பத்தைச் சார்ந்தவனே என்ற உணர்வு மேலீட்டால் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
= இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது, ஒரு பரீட்சை போன்றது மறுமையே நிலையானது என்பதை ஆராய்ந்து அறிந்த மாத்திரத்திலேயே தங்களின் இம்மை நலனை விட மறுமை நலனே பெரிதென உணர்ந்தார்கள். அது அவர்களை சுயநலத்தை விட பொது நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வைத்தது. இறைபொருத்தத்திற்காக எந்த விதமான தியாகங்களையும்  மேற்கொள்ளவும் இலட்சியத்தை அடையும் வழியில் ஏற்படும் இன்னல்களை தாங்கிக்கொள்ளவும் முன்வந்தார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக இறைநம்பிக்கை அடிப்படையிலான சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். ஐவேளைத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்த்து அணிவகுத்து நின்றார்கள். தங்களிடம் இருந்த செல்வத்தை சகோதர அடிப்படையில் பகிர்ந்து கொண்டார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!
இன்று அந்த மாமனிதர் நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் கற்றுக் கொடுத்த அந்த கல்வியின் புரட்சியின் தாக்கம் காலங்களைக் கடந்து எல்லைகளைக் கடந்து தொடர்கிறது. உலகெங்கும் மக்களை சீர்படுத்தும் புரட்சியை அது தொய்வின்றி செய்து வருகிறது. இஸ்லாம் என்பது ஒரு சுய சீர்திருத்தத் திட்டம். இதை யாரும் ஏற்றுக்கொண்டு எளிமையாக செயல்படலாம். இதை ஏற்பதன் மூலம் இன இழிவு, தீண்டாமை, நிறபேதம், இனபேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மறைவதோடு தனிநபர் ஒழுக்கம், சகோதரத்துவம், குடும்ப மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகள் நிறைந்த ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக