இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்!

அராபியர்கள்  தம்மை இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடப்பவர்களென்றும், தம்முடன் அரபு தீபகற்பத்தில் வசிப்பவர்களான வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சமுதாயத்தவர்களைவிடத் தாமே நேர்வழியில் நடப்பவர்களென்றும் நம்பிக் கொண்டிருந்தனர். யூதர்கள் உஸைர் (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும், கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (பார்க்க: 9:30 வசனம்) இவர்களுக்கு மத்தியில், இறைவனுக்கு ஈஸா, உஸைர் (அலை) ஆகியோரைவிட மிக நெருக்கமாவர்களாக அவர்கள் நம்பிக் கொண்டிருந்த வானவர்களையும் - தேவதைகளையும் அவர்கள் வணங்கி வந்ததால் தம்மை யூத, கிறிஸ்தவர்களைவிட அதிக நேர் வழியில் இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அவர்கள் தம்மை வேறெந்த சமூகத்தையும் விட மிக்க நேரான வழியில் இருக்கும் சிறந்த சமுதாயமாகவே கருதி வந்தனர்.

இதற்கிடையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்கள்.   இஸ்லாத்தின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை எடுத்துரைத்தார்.  ''இப்றாஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கம் இதுதான்'' எனக் கூறினார்கள்.

 'இல்லை! நாங்கள் இருப்பதுதான் இப்றாஹீம் நபியின் மார்க்கம், எனவே நாங்கள் அதை விட்டுவிட்டு முஹம்மதைப் பினபற்றத் தேவையில்லை!' என அவர்கள் கூறினார்கள். எனினும் முஹம்மது கூறும் இறைவனுக்குத் தாம் தலைவணங்குவதாகவும், அதற்காக தங்கள் தெய்வங்களுக்கு முஹம்மது தலைவணங்க வேண்டுமென்றும், அவர்களின் தெய்வங்களைப் பற்றியும் - அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றியும் முஹம்மது எவ்விதக் குறையும் கூறக்கூடாது என்றும், முஹம்மதும் இதுபற்றி எந்த நிபந்தனையும் விதிக்கலாம் என்றும் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு முயற்சி செய்தார்கள்.

அவர்களின் சித்தாந்தங்களிலும், சிந்தனைப் போக்குகளிலும் ஒரு தெளிவில்லாத குழப்பநிலை இருந்ததும், பல தெய்வ வழிபாடுகளுடன் இறைவனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததும், முஹம்மதுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள தூரம் அதிகமில்லை என அவர்களை நினைக்க வைத்தது. ஒரு நகரத்தை இருபகுதிகளாகப் பிரிப்பதைப் போலவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக் கொள்வது போலவும் இந்தப் பிரச்சினையை அவர்கள் கருதியதற்கு இதுவே காரணமாக இருந்தது.

இந்த ஐயத்தைப் போக்கவும், போலிச் சாக்குப் போக்குகள் கூறித் தட்டிக் கழிப்பதற்கு அறவே வழியில்லாமல் ஆக்கவும் இரு வணக்கங்களுக்கும், இரு நெறிகளுக்கும், இரு வழிகளுக்கும், இரு சித்ததாந்தங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது என்பதைத் தெளிவுப்படுத்திடவே உறுதியான வார்த்தைகளுடனும், வலியுறுத்தல்களுடனும், மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லும் தோரணையில் திருக்குர்ஆனின் 109 -வது  அத்தியாயம் அருளப்பட்டது. இவ்வுலகைப் படைத்த இறைவன் குறைகளற்ற ஒரு தெளிவான உண்மையான மார்க்கத்தை அருளியிருக்க அதைப் பொய்யான மூடநம்பிக்கைகளும் முட்டாள்த்தனங்களும் நிறைந்த ஒரு வழிகேட்டோடு சமரசம் செய்து கொள்வதா? எப்படி முடியும்?

இது அத்தனை சச்சரவுகளுக்கும் ஒரு முடிவுகட்டி விடுகிறது. அத்தனைப் பேச்சுக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. ஏகத்துவத்திற்கும், ஏகத்துவ மறுப்புக்குமிடையிலுள்ள வேறுபாட்டை நன்கு தெளிவுபடுத்தி விடுகிறது. சிறிய, பெரிய எல்லாப் பிரச்சினைகளுக்கும், விவாதத்திற்கும் அறவே இடமில்லாதவாறு எல்லைக் கற்களை மிகத் தெளிவாகப் பதித்து விடுகிறது.

109:1. (நபியே!) நீர் சொல்வீராக: சத்திய மறுப்பாளர்களே!'!

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.''


இந்த அத்தியாயம் முழுவதும் மறுப்புக்கு மேல் மறுப்பு, உறுதிக்கு மேல் உறுதி, வலியுறுத்துலுக்கு மேல் அழுத்தமான வலியுறுத்தல் என்று மறுப்பது, உறுதிப்படுத்துவது, வலியுறுத்துவது ஆகியவற்றுக்கான அனைத்து முறைகளும் கையாளப்பட்டுள்ளன.

109:2 'நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.''

எனது வணக்கம் உங்கள் வணக்கமாகாது! எனது வணக்கத்திற்குரியவன் உங்களால் வணங்கப்படுபவையாய் ஆகமாட்டான்!

109:3. ''இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.''

உங்கள் வணக்கம் எனது வணக்கமாகாது! உங்களால் வணங்கப்படுபவை எனது வணக்கத்திற்குரியவனாகமாட்டா!

109:4. ''அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.''
அத்தியாயத்தின் முதல் வாக்கியமான வினைச்சொல் வாக்கியத்தின் கருத்தே பெயர்ச்சொல் வாக்கியத்தால் இங்கே மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இறைவனைத் தவிர உள்ள ஏனையவற்றை வணங்காத பண்பு என்னில் ஊறிப்போய் விட்ட, நீடித்த நிலைத்த பண்பாகி விட்டிருக்கிறது என்பதை இந்த வாக்கியம் மிகச் சிறப்பாக உணர்த்துகிறது.

109:5. ''மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்''.
எவ்வித ஐயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு அத்தியாயத்தின் இரண்டாவது வாக்கியத்தையே மீண்டும் வலியுறுத்துவதற்காக இந்த வாக்கியம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் தெரிவிப்பது, வலியுறுத்திச் சொல்வது ஆகியவற்றின் அனைத்து வகைகளையும் கையாண்டு இந்தக் கருத்து இங்கே தெரிவிக்கப்பட்டப் பிறகு எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாது போய் விடுகிறது.

இறுதியாக, சந்திக்கவே முடியாத அந்தப் பிரிவு, ஒப்புவமையே இல்லாத அந்தக் கருத்து வேறுபாடு, இணையவே முடியாத அந்த இடைவெளி, கலக்கவே முடியாத அந்தப் பாகுபாடு பின்வருமாறு சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

109:6. ''உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.''

நான் இங்கேயும் நீங்கள் அங்கேயுமாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளியைக் கடப்பதற்கு எந்த வழியுமில்லை, எந்தப் பாலமுமில்லை. முழுமையானப் பொதுவான இடைவெளி, தெளிவான நுட்பமான பாகுபாடு ''கொள்கைகளே'' நம்மிருவருக்குமிடையில் இருக்கின்றன.

அடிப்படைக் கொள்கையில் வேறுபாடு, அடிப்படைச் சிந்தனையில் வேறுபாடு, வழிப்பாதையின் இயல்பில் வேறுபாடு, சன்மார்க்கத்தின் ஏதார்த்தத்தில் வேறுபாடு இத்தனை வேறுபாடுகளுடன் எந்தப் பிரச்சனையிலும் நடுவழியில் இணைவது என்பது இயலாத ஒன்றாகும். எனவே இத்தகைய அடிப்படையானக் கருத்து வேறுபாட்டின் எல்லைக் கற்கள் தெளிவுப்படுத்துவதற்கு இது போன்ற தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம் இன்றியமையாததாகும்.

நன்றி:- திருக்குர்ஆனின் நிழலில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக