இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கவர்ணர் மாளிகையில் கலீபா!

அரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள்! ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள்! ..... அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றார்கள்:
= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)
இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு  முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் இன்ன பிற ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நன்மக்களிடமும் அதே வறுமையைக் கண்டது வரலாறு...... 

எளிமையானவர் என்று பெயரெடுத்தவர் நபித்தோழர் அபுதர்தா (ரலி). நபிகளாரின் மறைவுக்குப் பின் உமர் ரலி அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது சிரியாவுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப் பட்டு இருந்தார். சிரியாவை மேற்பார்வை இட வந்திருந்தார் ஜனாதிபதி உமர். அபுதர்தாவை அவரது விட்டில் சந்திக்கப் போனபோது அவரது வீட்டில் விளக்கு இல்லை. ஒரே இருட்டு. வந்தவரை வரவேற்று அமரச்செய்தார் அபுதர்தா. இருவரும் இருட்டில் அமர்ந்து கொண்டு உரையாடினார்கள்.
உரையாடலின் போது அபுதர்தா தலையணையாக பயன்படுத்திய பொருள் கைக்கு தட்டுப்பட்டது. அது குதிரையின் சேணம் என்பதை புரிந்து கொண்டார் உமர். அவர் படுக்கும் இடத்தை தடவிப்பார்த்த பொது அங்கு எங்கும் பொடிக்கற்களாக இருந்தது. அவர் பயன்படுத்திய போர்வை டமாஸ்கஸின் குளிரை தாங்கக்கூடியதாகவும் இருக்கவில்லை.
ஜனாதிபதி உமர் கவலை கொண்டவராக ஆளுனரை விசாரித்தார்... “நான் உங்களுக்கு சற்று வசதியை செய்து தரலாமா? உங்களுக்கு எதையாவது அனுப்பட்டுமா?”
உடனே அபுதர்தா(ரலி) நபிகளாரின் கூற்றை நினைவு படுத்தினார்... “ஒரு வழி யாத்திரைக்காரனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே இவ்வுலகில் உங்கள் தேவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள்”. இதைக் கேட்ட மாத்திரத்திலேயே இருவரும் அழு ஆரம்பித்தார்கள். இந்த சோகமான நினைவிலேயே இரவைக் கழித்தனர் அந்த சரித்திரம் படைத்த ஆட்சியாளர்கள்.
மறுமையில் வாய்க்க இருக்கும் சொர்க்கப்பெற்றிற்காக தன்னலங்களை பொதுநலத்திற்காக தியாகம் செய்த உத்தமர்கள் அவர்கள்.

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?  (திருக்குர்ஆன் 6:32)

ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!


Related image
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.'
ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகையால் அவர்கள் இறைவனால் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின் குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே. இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.
இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு  முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அரசுக் கருவூலத்தின் ஜகாத் எனப்படும் செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல பின்வரும் தன் தலைமுறையினர் அனைவருக்கும் சட்டவிரோதமாக்கி அறிவித்தார். அந்த கட்டளை இன்றும் பின்பற்றப்படுகிறது.
= ஒருமுறை அரசாங்கக் கருவூலத்தை சேர்ந்த பேரீத்தப்பழக் குவியலில் இருந்து தன் சிறுவயதுப் பேரன் ஹசன் எடுத்து வாயிலிட்ட ஒரு பேரீத்தம்பழத்தையும்கூட  ‘இது நமக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல, துப்பு துப்பு’ என்று கூறி துப்ப வைத்தார் அந்த மாமனிதர்! சிறுவன்தானே அல்லது ஒரு பேரீச்சம்பழம்தானே என்று கூறி அலட்சியம் காட்டவில்லை. அந்த அளவுக்கு அரசுப் பொருள் என்பது நெருப்பாக சுட்டது அந்த ஆட்சியாளருக்கு!
இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அம்மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.
= ‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)
= ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் அதே வறுமையைக் கண்டது வரலாறு!
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்

நபிகள் நாயகமும் சரி, அவருக்குப்பின் வந்த கலீபாக்களும் சரி, சொந்தத் தேவைக்காக அரசுப் பணத்தில் கை வைப்பது இஸ்லாமியச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதனால்தான் அரசுக்கருவூலம் நிரம்பி வழிந்தபோதும் சொந்த வாழ்வை வறுமையிலேயே கழித்தனர்.
நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் கலீபா அபூபக்கர்(ரலி). (கலீபா என்றால் ஜனாதிபதி அல்லது மக்களின் தலைவர் என்று பொருள்.)
= ஆட்சியாளராக பதவி ஏற்ற பின் ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
 ’மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.’  –(ஹூகூகல் இன்சான், பக்கம் 160)
= அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அரசு அலுவல்கள் காரணமாக அதுவரை செய்துகொண்டிருந்த வியாபாரத்தை தொடர முடியாததால் அவர் அரசுக் கருவூலத்தில் இருந்து ஒரு ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார். ஒரு சிறு தொகையை ஊதியமாகப் பெற அவரும் ஒப்புக்கொண்டார். எளிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒருநாள் தன் மனைவி உணவோடு ஒரு இனிப்புப் பதார்த்தத்தையும் பரிமாறினார். ஆச்சரியப்பட்ட அபூபக்கர் ‘இது எங்கிருந்து உனக்கு?’ என்று மனைவியை வினவினார்.  
“நீங்கள் தினமும் செலவுக்குத் தரும் பணத்தில் இருந்து சிறுகச்சிறுக சேமித்து வைத்தேன். அதில் இருந்து செய்ததுதான் இந்த இனிப்பு”
“சேமிக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெற்று வந்துள்ளேனா? இது கூடாது!” என்றார் அபூபக்கர்.
தன் அடுத்தமாதம் முதல் ஊதியத்தின் அளவைக் குறைக்க ஆணையிட்டார் அபூபக்கர்!
ஊதிய உயர்வு கோரி போராட்டங்கள் நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊதியக் குறைவு கோரிப் போராடியவர் பற்றி எங்காவது கேட்டிருக்கிறோமா?
= அபூபக்கர் அவர்களுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் உமர்(ரலி) அவர்கள். இவரது ஆட்சியில் மதீனாவில் தோன்றிய சிற்றரசு சில ஆண்டுகளில் மாபெரிய பேரரசானது. அன்றைய வல்லரசுகள் உமரின் காலடியில் வீழ்ந்தன். பாரசீகம், இராக், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, எகிப்து, ஆர்மீனியா, இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிந்தது. அவ்வளவு பெரிய வல்லரசுகளை ஆட்டிப்படைத்த கலீபா உமரின் வாழ்வு எவ்வாறு இருந்தது? இதோ . 18 ம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்:

 “தொலிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது. பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”
 ( Gibbon – தனது  In The Decline and Fall of the Roman Empire என்ற நூலில்)

உமர் என்ற பெயரைக்கொண்ட இன்னொரு கலீபாவை பிற்காலத்தில் சரித்திரம் கண்டது. அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் என்பார். ஒரு சமயம் அவருக்குத் தனிப்பட்ட செலவுக்காக ஒரு திர்ஹம் தேவைப்பட்டது. தம் மனைவி பாத்திமாவிடம் வந்து, “கைச் செலவுக்குப் பணம் வேண்டும். ஒரு திர்ஹம் இருந்தால் தா” என்று கேட்டார் கலீஃபா.

மனைவிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. “இவ்வளவு பெரிய ஆட்சியாளராக இருந்தும் ஒரு திர்ஹம்கூட உங்களிடம் இல்லையே?” என்றார். கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அமைதியாகக் கூறினார்: “நரகத்தின் நெருப்பு விலங்குகளைவிட இந்த நிலைமை மேலானது.” பாத்திமா பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டார். இறையச்சத்துடனும் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடனும் ஒரு நாடு ஆளப்பட்டால் இந்த உலகமே சுவனமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சனி, 19 ஏப்ரல், 2014

எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே!


ஏதேனும் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, ஒவ்வொரு வெள்ளியும் நல்ல வெள்ளியே! நாட்களிலே சிறந்த நாள் இறைவனின் பார்வையில் வெள்ளிக்கிழமையே என்று தனது இறுதித் தூதர் வாயிலாக மனிதகுலத்துக்கு இறைவன் அறிவிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (புகாரி 1548 )
ஆம், மனிதகுலம் சிறப்பாக கொண்டாடவேண்டிய நாள் இதுவே.. ஏனெனில் இன்றுதான் மனிதகுலம் பிறந்த நாள்! மனித சரித்திரத்தின் முதல் நாள்! நம்மை அளவில்லாத அன்போடும் கருணையோடும் அரவணைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பொழிந்துகொண்டு இருக்கும் இறைவனோடு தொடர்பு ஏற்பட்ட நாள் இதுவே. எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் நாம்!

அவனது கருணைக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அருட்கொடைகளுக்கும் நன்றி கூறும் வண்ணம் இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பதையும் நமக்கு தன் திருத்தூதர் மூலம் கற்றுத் தருகிறான்:
= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.”
அறிவிப்பு: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
(புகாரி 1535)

=   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிறரை கடந்து செல்லாமல்  பள்ளியினுள்  நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

பல சம்பவங்கள் அந்நாளிலே நடந்ததாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். பின்வரும் நபிமொழியில் இருந்து அதை அறியலாம்:

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசாரணைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்து (நபிகளாருக்காக இறைவனிடம் கோரும் பிரார்த்தனை) சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  இறைவன் தடுத்துள்ளான்”  (ஆதாரம்: அஹ்மத்)

கிருஸ்துவ அன்பர்கள் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நாள் என்று அவர்கள் நம்பும் நாளை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது குட் பிரைடே என்றும் கூறி அனுஷ்டிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவ்வாறு அறையப்படுவதில் இருந்தும் இறைவனால் காப்பற்றப்பட்டு அவனளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
4:157.இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (யூதர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ்விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158.ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)


அவ்வாறு அந்த சம்பவம் நடந்த நாள் வெள்ளிக்கிழமையே என்றாலும் அது துக்கத்துக்கு உரியதல்ல, மாறாக அவர் யூதர்களின் சதியில் இருந்து அற்புதமான முறையில் காப்பாற்றப்பட்டார் என்பதால் அதுவும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்பது இஸ்லாமிய நம்பிக்கை!

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

திருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!

திருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!: ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நம் மீழுதல் என்ற இந்த உண்மைகளை  ஆழமாக விதைத்து மனிதன் இறைவனிடம் தன் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்ட...

அரசியல்வாதிகளுக்கு இறையச்சம் வேண்டும்!

ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நம் மீழுதல் என்ற இந்த உண்மைகளை  ஆழமாக விதைத்து மனிதன் இறைவனிடம் தன் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுக்கு இறையச்சம் என்று வழங்கப்படும். 
அப்படிப்பட்ட நம்பிக்கையோடு இறைவனை நேரடியாக வணங்கவும் துதிக்கவும் மக்களைப் பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறை உணர்வு பாவச் செயல்களில் இருந்து அவர்களைத் தடுக்கும். அப்போது அவர்கள் இணையம், செல்பேசிகள், தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். பிறர் உரிமைகளையும் உடமைகளையும் மதிப்பார்கள். துன்பங்கள் நேரும்போது சகிப்புத்தன்மையும் பிறருக்காக தன உடமைகளையும் தியாகம் செய்யும் மனப்பான்மை அங்கு வளரும்.
= கல்வித்திட்டத்தில் இவற்றை உட்படுத்தினால் மாணவ மாணவிகள் கற்கும் கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவார்கள். சுயநலத்தை விட பொதுநலமே மிஞ்சும். கல்விப் பருவத்தில் குறுக்கிடும் காதல், பாலியல் வக்கிரங்கள், போதைப்பொருட்கள் போன்ற தீய சக்திகளின் தாக்கங்களில் இருந்து விடுபட்டு கருமமே கண்ணாக இருக்க இளைஞர்களுக்கு உதவும். தன் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்த விழிப்புணர்வோடு மாணவர்கள் வளர்வார்கள். தன்னம்பிக்கையும் ஆளுமையும் மேலிடுவதால் தோல்விகள் ஏற்படும்போது விரக்திக்கும் தற்கொலைகளுக்கும் ஆளாகமாட்டார்கள்.  
= வணிகர்கள், முதலாளிகள், தொழிலாளிகள் உள்ளங்களில் இவை விதைக்கப்பட்டால் வணிகமும் தொழிலும் சீர்பெறும், நியாயமும் நேர்மையும் அங்கு கோலோச்சும். மனித உரிமைகள் பரஸ்பரம் மதிக்கப்படும்.
= குடும்ப அங்கத்தினர்களிடம் இவை விதைக்கப்பட்டால் பரஸ்பர நம்பிக்கை, உரிமைகள் பேணுதல், விட்டுக்கொடுத்தல், ஆதரவற்றோரை அரவணைத்தல், தியாக உணர்வு போன்ற பண்புகள் மிளிரும். குடும்ப உறவுகள் பலப்படும்.
= குற்றவாளிகளிடமும் கைதிகளிடமும் இவை விதைக்கப்பட்டால் எந்த தண்டனைகளாலும் செய்யமுடியாத அற்புத சீர்திருத்தங்களை அங்கு செய்ய முடியும். அவர்கள் தன்னலம் மறந்த சமூக சீர்த்திருத்தவாதிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு.
= காவல் துறையினரிடமும் நீதித்துறையினரிடமும் அரசு அதிகாரங்களில் உள்ளோரிடமும் இவ்வுண்மைகள் விதைக்கப்பட்டால் அவரவர் கடமைகளை சரிவரப் பேணவும் மாற்றாரின் உரிமைகள் பேணவும் தூண்டும் பொறுப்புணர்வு அவர்களில் வளரும். அதிகார துஷ்பிரயோகங்கள் இலஞ்ச ஊழல்கள், அரசு இயந்திரங்களை சுயநலத்துக்கு பயன்படுத்துதல் போன்றவை முடிவுக்கு வரும்.

இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் ஈடுபடும் மக்களிடம் இந்த மறுக்க முடியாத உண்மைகளை உரிய முறையில் விதைத்தால் அங்கே நிகழும் புரட்சிகளை யாரும் அனுமானிக்க முடியும்.
அதேபோல.....
= இன்றுள்ள அரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள்! ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள்! ..... அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)


= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
ஆம், மறுமை நாளில் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாதோருக்கு நரக நெருப்பின் வேதனையல்லவா காத்திருக்கிறது!
ஆட்சிப் பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம். ஆகையால் அவர்கள் இறைவனால் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். குடிமக்களின் குறைகள் நியாயமானதாக இருக்கும்பட்சம் அவை நிவர்த்தி செய்யப் படாமல் இருந்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் இறைவன் முன் குற்றவாளிகளே. இந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். காந்தியடிகள் கலீபா உமரின் ஆட்சி போன்று இந்தியாவில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது இதனால்தான்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு  முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அரசுக் கருவூலத்தின் செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமல்ல பின்வரும் தன் தலைமுறையினர் அனைவருக்கும் சட்டவிரோதமாக்கினார்.

அரசாங்கக் கருவூலத்தை சேர்ந்த பேரீத்தப்பழக் குவியலில் இருந்து தன் சிறுவயதுப் பேரன் ஹசன் எடுத்து வாயிலிட்ட ஒரு பேரீத்தம்பழத்தையும் ‘இது நமக்கு அனுமதிக்கப்பட்டது அல்ல, துப்பு துப்பு’ என்று கூறி துப்ப வைத்தார் அந்த மாமனிதர்! 

திங்கள், 7 ஏப்ரல், 2014

பகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்!

பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார்.
டாக்டர் அம்பேத்கருடைய அனைத்து நூல்களையும் தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அவற்றில் அவர் பெற்ற பாண்டித்தியத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. பெரியாரின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்று திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர். தனது வாதத் திறமை காரணமாக பல ஆன்மீகத் தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன்  அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல் தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு  உலகெங்கும் பரப்பப்பட்டன.
ஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார்தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் காட்டு மிராண்டி’என்ற பெரியாரின் வாசகங்களை நாடு முழுக்க நாற்பது வருடங்களாக முழங்கி வந்தவர் அவர். அவரை திசை மாற்றியது எது?
ஆம் தனிமையில் ஒருநாள் இருக்கும்போது அந்த அக்கேள்விதான் அவரது மனதை துளைத்து எடுத்தது.....
“கடவுள் இருக்கிறானா? இல்லையா? இருந்துவிட்டால்....? மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன...? நாம் பிரச்சாரம் செய்து வருவதுபோல் கடவுள் இல்லை என்றால், எந்த விபரீதமும் எனக்கு ஏற்படாது. நான் தப்பித்துக் கொள்வேன்,  என் பிரச்சாரத்தினால் திசை திருப்பப் பட்டவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் கடவுள் இருந்துவிட்டால்... ஆத்திகர்கள் சொல்வதுபோல் மரணத்துக்குப் பின் விசாரணை உண்டாகும்  தீர்ப்புநாள் உண்டாகும், சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கும் ,.......நம் நிலை....?” இவ்வாறு சிந்திக்க ஆரபித்தார் பெரியார்தாசன்.

இச்சிந்தனை பல மத நூல்களையும் ஏற்கனவே கற்றறிந்திருந்த அவரை இறுதியாக திருக்குர்ஆனின் பக்கம் கொண்டு சேர்த்தது.    திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கப் படிக்க அவருக்கு படைத்தவனைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் சரியான தெளிவு  ஏற்பட்டது. இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்று முழுமையாக புரிந்து கொண்ட பின் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.  ஆம், உண்மையான பகுத்தறிவுத் தேடல் அவரை சத்தியத்தின்பால் கொண்டு சென்றிருக்கிறது!
குறிப்பாக மரணத்துக்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள் எந்த ஒரு உண்மையான பகுத்தறிவு சிந்தனையாளனையும் சத்தியத்தை உணர வைத்துவிடும்...
இதோ உறுதிமிக்க வார்த்தைகளில் இவ்வுலகைப் படைத்தவன் பறைசாற்றுகிறான் பாருங்கள்:
3:185  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;  இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
பகுத்தறிவு என்றால் என்ன?
கண்களால் நேரடியாகக் கண்டு ஒரு விடயத்தை நம்புவதற்குப் பெயரல்ல பகுத்தறிவு என்பது. அவ்வாறு நம்புவது உணவை மோப்பம் பிடித்து கண்டுகொள்ளும் ஜீவிகளை விட தாழ்ந்த நிலை! உண்மையில் நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறுதான் பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான் இறைவன்:  
= மனிதன் தான் கடந்து வந்த கட்டங்களைப் பற்றி சற்று சிந்தித்தாலே இறைவன் கூறுவது உண்மையே என்பது புலப்பட்டுவிடும்.
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறைக்கும் போது அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
= மறுமையை நம்பமுடியவில்லை என்போருக்கு உண்மை எதுவென்பதைப் பகுத்தறியச் சொல்கிறான் இறைவன்:
 36:77 .மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான்.
36:78  .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.
36:79  .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80  .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81  .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82  .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
ஆம், மனிதனை முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைப்பது என்பது மிக எளிதானது என்று கூறுகிறான் இறைவன்! அதுவும் மிகமிகப் பக்குவமாக படைப்பான் என்கிறான் இறைவன்:
75:3, 4 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
பகுத்தறிவுக்கான சவால்:
 மரணத்துக்குப் பின் வாழ்வு உள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி நமது பகுத்தறிவுக்கு விடப்படும் ஒரு பெரும் சவால். நம்மைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளை ஆராய்ந்து அதை அறியத் தூண்டுகிறான் இறைவன்:
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின்  உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
= மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறோம்:
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
39:42      அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்;. மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)
பகுத்தறிவினால் ஆய பலன்!
நம் உணவையும் உறைவிடத்தையும் தேடி அடைவதல்ல பகுத்தறிவின் உண்மை பயன். காரணம் நம்மைவிடக் குறைந்த அறிவுகொண்ட ஜீவிகள் இவற்றை எளிதாக தேடி அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். மாறாக  மரணம் நம்மைத் தழுவும் முன் நம்மைப் படைத்தவன் பால் திரும்புவதே பகுத்தறிவின் உண்மை பயன் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். பெரியார்தாசனும் அவர்களில் ஒருவர்!
 10:31.    ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.

ஆம் நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். அந்த அடிபணிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று வழங்கப்படுகிறது.