இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 அக்டோபர், 2024

டாஸ்மாக்கும்... திருப்பூரும்

டாஸ்மாக்கும்... திருப்பூரும்


தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில்தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். 
ஏன் இப்படி?....

 ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர்.

 வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.

அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?’ என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை.

 கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பனபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. 

இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட.

 ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது.

 முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகநாதன்.

 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.

 அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது. 

அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்’ என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர்.

 அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். 

மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது' என்கிறார்.

இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். 

அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். 

இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.

50 லட்சம் பேர் X 2 மணி நேரம் = 1 கோடி மணி நேரம்.

இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.

 அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர். 

- போதை தெளிவோம்
குடி குடியை கெடுக்கும் -

திருப்பூர் மட்டுமல்ல தமிழகத்தின் எண்ணிலடங்கா மாவட்டங்கள் மற்றும் இந்திய தேசத்தின் அநேக மாநிலங்கள் இதை சந்தித்து வருகின்றன. 
ஏன் உலகம் முழுவதும் மானிட சமூகம் இதனால் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். 
சமூகப் பிரச்சனையின் முக்கிய ஆணிவேர் மது என்பதை எவரும் மறுக்க முடியாது. 
தாய் எது தாரம் எது என்பதை மழுங்கடித்து மனிதனை குற்றவாளியாக்கி மிருகமாக்கி சமூகத்தை  குற்றவாளியாக மாற்றுவதில் இந்த மதுவின் பங்கு மகத்தானது. 

உலகில் நடக்கும் எண்ணிலடங்கா கொலை கொள்ளை கற்பழிப்பு கலவரம் மற்றும் ஏனைய பாவங்கள் இதனால்தான் விளைகிறது இன்று இல்லாவிட்டாலும் இவைகளில் மதுவின் பங்கை  எவரும் மறுக்க முடியாது.

போதும் புலம்பித் தள்ளி ஆகிவிட்டது! 

என்னதான் தீர்வு? 

இதற்கு எங்கேயாவது யாராவது தீர்வை கண்டுபிடித்து உள்ளார்களா?

'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்)...
 கெட்டுப்போகும் இளைஞர் சமுதாயம், சீர்குலையும் குடும்ப உறவுகள், சிதையும் பொருளாதாரம், மங்கும் உழைப்புத் திறன், பெருகும் சாலை விபத்துகள, குடிநோய்கள், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள்... என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.
ஆனால் இன்று பள்ளி மாணவர்களும் கூட குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் அளவுக்கு மதுப்பழக்கம் பரவலாகி உள்ளது. பாரத நாடு முழுவதும் 20 கோடி மக்கள் மதுவுக்கு அடிமை. தமிழகத்தில் 2 கோடி பேர் மதுவுக்கு அடிமை என புள்ளிவிவரங்கள்  கூறுகின்றன.
கொடிய இந்த மது அரக்கனின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இத்தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.

பிறகு என்னதான் வழி?
மேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு  மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் தன் இறுதித் தூதர் மூலமாக காட்டிய வழி இதுவாகும்.

தனிமனித நல்லொழுக்கம்
முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.
 இந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும்  விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.
இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.
= இறைவனின் தூதர்கள் போதித்தபடி  படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள் என்று போதிக்கப்படுவது.
 அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.
இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். அதற்கு இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும்.

அடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்பதை கலப்படம் இல்லாமல் கருத்து சிதைவு இல்லாமல் போதிக்கவேண்டும்.

சரி எது தவறு எது என்பதற்கான அளவுகோல்
மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரன் எவனோ அவன்தான் பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. அவன்தான் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது நம் செயல்களை விசாரிக்க இருப்பவன். மேலும் அவன்தான் தன் படைப்பினங்களுக்கு எது நல்லது எது தீயது என்பவற்றை நுணுக்கமாக அறிந்தவனும் அவைகளின் உரிமைகளை பக்குவமாக பங்கிட்டு அளிக்கக்கூடியவனும் அவனே.
அவன்தரும் அளவுகோலின்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
“(நபியே!) மதுபானத்தையும்சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது;மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டுஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2:219)

= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும்அதைப் பருகுபவரையும்பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்அதை விற்பவரையும்அதை வாங்குபவரையும்அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும்அதைச் சுமந்து செல்பவரையும்யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் இறைவன்  சபிக்கிறான் என்று கூறினார்கள்.      அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)      நூல்: இப்னு மாஜா 3371
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு மறுமையில் நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் புகட்டப்படும்  என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) - நூல்: முஸ்லிம்)
 மது அருந்துவோருக்கு தண்டனை
மதுவை தீமைகளின் தாய் என்று கண்டித்து தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் கூறிச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். அது என்ன? இதோ நபிகளாரின் ஆட்சியின்போது நடந்த சம்பவங்களில் ஒன்று இது:
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும்செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)  (ஆதார நூல்: அஹ்மத் 18610)

மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா? பாதிக்கப்படும் மக்களுக்கு “குடிமகன்களை” தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை

ஆக, நல்லொழுக்கம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கு மனித மனங்களில்  முறையான இறையச்சம் விதைக்கவேண்டும். அதில் நிலைத்திருக்க படைத்த இறைவனுக்கு அனுதினமும் நன்றிகூறும் வழிபாட்டை கற்பிக்கவேண்டும். அவர்கள் தங்கள் அன்றாடப் பொறுப்புகளை நிறைவேற்ற தடையாக நிற்கும் மதுவை அருந்தினால் இம்மையிலும் மறுமையிலும் உண்டாகும் தீமைகள் குறித்து எச்சரிக்கவேண்டும். அவற்றை மீறுவோரின் தீமைகளில் இருந்து பொதுமக்களைக் காக்க அக்குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கும் பொறுப்பை பொதுமக்களிடமே ஒப்படைத்து அதை சட்டபூர்வமாக்க வேண்டும். இதுவே இஸ்லாம் இத்தீமையை ஒழிக்கக் கூறும் வழி.


படியுங்கள் கீழே!

மாமனிதர் மது ஒழித்த வரலாறு
http://quranmalar.blogspot.com/2014/10/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக