இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 மே, 2024

நாட்டை நேசித்த மக்கள் தலைவன் திப்பு!

நமது நாட்டைப் பீடித்த மிகப்பெரும் சாபக்கேடான காலனி ஆதிக்கத்தின் போது நாம் அனுபவித்த கொடுமைகள் எண்ணற்றவை. ஆனால் இன்று அதே காலனி ஆதிக்க சக்திகள் கார்ப்பரேட் ஆதிக்க  உருவில் நாட்டைக் கொள்ளையடித்து வருவதை ஆராய்வோர் அறியலாம். இவர்களின் கைப்பாவைகள்தான் நம்மை இன்று ஆண்டு வருகிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் நாடு நாசமாகப் போனாலும் செல்வத்தை சேர்ப்பது ஒன்றே இவர்களின் குறிக்கோள். ஏழைகளின் உழைப்பை வரிவிதிப்பின் மூலம் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்பிப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். 
 காலனி ஆதிக்க சக்திகளின் தன்மையை நன்றாகப் புரிந்து கொண்டவர் திப்பு சுல்தான் என்ற தன்னலமற்ற தியாகி. எப்பாடுபட்டாவது நம் நாட்டை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்று தன் இன்னுயிரை நீத்தார் அவர். இறையச்சம் தூண்டிய பொறுப்புணர்வு அவரை இயக்கியது. நபிகள் நாயகம் அவர்களின் எச்சரிக்கையை அவர் உணர்ந்திருந்தார்.

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ)

நாட்டுப்பற்று என்பது நாட்டு மக்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களைப் பாதுகாப்பதுமே என்பதை முழுமையாக உணர்ந்து அவர் செயல்பட்டதை வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் நாட்டை உள்ளார நேசித்த அப்படிப்பட்ட ஒரு வீரனை இன்று பாசிச சக்திகள் தவறான ஒளியில் சித்தரித்து அவரைப் பற்றிய சரித்திர குறிப்புகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி வரும் கொடுமையையும் இன்று நாம் சந்தித்து வருகிறோம்.  

அசரவைக்கும் ஆளுமை!
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் அசரவைக்கின்றன. காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புரிதல் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

விவசாயப் புரட்சி
வளமான நிலத்தை யாரும் தரிசாகப் போடக்கூடாது. நிலத்தின் உரிமையாளர் பயிரிட வேண்டும் அல்லது நியாயமான குத்தகைக்கு விட்டுப் பயிர் செய்ய வேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்கு மேல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், அரசாங்கத்தால் அந்நிலம் பறிமுதல் செய்யப்படும். நிலக்குத்தகை நியாயமானதாக இருக்க வேண்டும். தன் விருப்பப்படி குத்தகைத் தொகையை அடிக்கடி உயர்த்தக் கூடாது. மழையில்லாவிட்டாலும், அதிக மழை பொழிந்து பயிர் மகசூல் பாதிப்படைந்தாலும் குத்தகைத் தொகையை குறைத்து வாங்கிட வேண்டும். திப்புவின் ஆட்சிக் காலத்தில் மூன்று இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. தலித் மக்களுக்கு தனியே நிலம் அளிக்கப்பட்டது. உயர்குலத்தோரின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

அரசு ஊழியர் உறுதிமொழி
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

உள்நாட்டு வணிகர்களுக்கும் தொழல் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்பு
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; ‘முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் சாகேத் ராமன்.

சாதி அமைப்புகள் தளர்வு
நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஆங்கிலேய அதிகாரி புக்கானன். திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793 இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் ஆங்கிலேயரின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

வீண்விரயம் தவிர்ப்பு
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதினார் திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

போர் தர்மங்கள் பேணுதல்
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று காலனி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட காலனி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

அவரது இறுதி வார்த்தைகள் மறக்க முடியாதவை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா 
துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லாஹ் 
எமக்குச் சாவு வராதா”

(தகவல்கள் நன்றி: வினவு இணையதளம்,)

=======================  

கிழக்கிந்திய கம்பெனியின் சிம்மசொப்னம்

https://www.quranmalar.com/2024/05/blog-post_15.html

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக