இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 மே, 2024

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்!‘


இறைவன் மீதும் மறுமையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அரசாண்ட மன்னர் திப்புசுல்தான். திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர்தான் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் சிம்மசொப்பனம்’ (Nightmare of East India Company) என்பது. “இந்தியாவில் காலனியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
= ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் ஆங்கிலேயத் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு. துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்.
= “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறார் வெல்லெஸ்லி. யாருமே ஒத்துழைக்காத நிலையில் – தன்னைசார்ந்தவர்கள் கூட காலனி அரசின் கைக்கூலியாக மாறிவிட்ட நிலையிலும் - தன்னந்தனியாக காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இறுதிவரைப் போராடி வீரமரணம் அடைந்தார் திப்பு!

நாட்டுப்பற்றுக்கு முன்னுதாரணம்
உண்மையான நாட்டுப்பற்று என்பது நாட்டின் மண்ணை முகர்வதிலோ பாடல்களைப் பாடுவதிலோ இல்லை. மாறாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை உளமார நேசிப்பது என்பதே உண்மை. நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!

இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத் தேவைகளாகும். இந்தப் பண்புகளை நாம் முழுமையாக திப்புவிடம் காணமுடிகிறது.

மதுவிலக்கு
திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். மது உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்தார். மது விற்பனையினால் அரசாங்கத்திற்கு நிதி வரவு உண்டு என்பதற்காக, மக்களின் அறிவை மழுங்கக்கூடிய மதுவை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்தார். மது உற்பத்தியாளர்களின் உரிமங்களை நீக்கம் செய்தார். மக்கள், மதுவை நாடக் கூடாது என்றும், மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்
மலபாரில் வாழும் பெண்கள் தோள் சீலை அணிவதற்கான உரிமை குறித்து தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வுரிமையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அது தொடர்பாக, திப்பு சுல்தான், 1785 ஆம் ஆண்டு மலபார் கவர்னருக்குக் கடிதமும் எழுதினார். இதிலிருந்து பெண் உரிமையிலும், பெண் விடுதலையிலும் உறுதியாகச் செயல்பட்டவர் திப்பு சுல்தான் என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

தண்டனை அளிப்பதில் மாறுபட்ட உத்தி
குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வாழும் கிராமத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவற்றுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவை மூன்று அடி உயரத்துக்கு மரமாக வளரும் வரை வளர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இவ்வாறெல்லாம் கூட சுற்றுச் சூழலைப் பேணிட முயன்றார் திப்பு!

தாவரக் கூடாரம் : லால்பாக் தோட்டம்
‘லால்பாக் தோட்டம்’ - திப்புவின் ஆராய்ச்சிக் கூடமாகியது! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரம், செடி, கொடி வகைகளைக் கொண்டு வரச் செய்து பராமரித்தார். மூலிகை, யுனானி மருந்து முறைகளையும் பெருக்கினார்.
திப்பு, தன் ஆட்சியில் அனைவருக்கும் உணவு, வேலை, வசிக்க இடம், ஆடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தினார்.
=================
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக