இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மே, 2024

தீண்டாமைக் கோட்டைகளைத் தகர்த்தெறியும் கொள்கை!

இன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள் மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் நம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கும் இன்னும் இழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

இஸ்லாத்தினால் கரைசேர்ந்த மக்கள்
இந்திய முஸ்லிம்களின் முன்னோர் பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடந்து வந்தவர்களே. கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் சொல்வதற்கு நிகழ்வுகள் பல இருந்தாலும் ஒரே சில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்தவை இவை. (ஆதாரம்: விக்கிப்பீடியா இணையதளம்) கட்டுரையில் ஜாதியின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. (நமக்கு நிகழ்வுகள்தான் முக்கியமே தவிர யாரையும் பழிப்பது நோக்கமல்ல)
சக குடிமகனுக்கு அவன் நடை உடை பாவனையிலும் அசைவிலும் சம்பாத்தியத்திலும் உறவுகளிலும் என  எப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன என்பதை கவனியுங்கள். எங்கு அடைக்கலம் பெறுவான் அவன்?
 இவற்றிலிருந்தெல்லாம் எம்மையும் எம் முன்னோர்களையும் காத்தருளிய இறைவனுக்கே எல்லாப்புகழும்! #இஸ்லாம்_ஏன்_எதிர்ப்புக்குள்ளாகிறது? என்பதற்கான ஒரு காரணத்தை நீங்கள் இங்கே காணலாம். 

திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்
திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன.

சமூகக் கட்டுப்பாடுகள்
= ஒரு உயர் குலத்தவர் பக்கத்தில் நாடாளுகின்ற இரண்டாம் வர்க்கத்தினர் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் மூன்றாம் வர்க்கத்தினர் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு உயர்குலத்தவரிடமிருந்து மற்ற மற்ற வர்க்கத்தினர் இன்னின்ன அடி தூரத்தில் தான் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவற்றை மீறுவது குற்றம்.

= தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பிட்ட இனத்தவர் அணியும் ஆடை அணிகலன்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

= உயர் சாதியினரைப் போன்று ஆடை அணிய மற்றவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும், பெண்களும் கால் மூட்டுக்கு கீழும், இடைக்கு மேலும் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் மார்பை மறைப்பது குற்றம்!
= உயர் சாதியினர் முன் கீழ் சாதி பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று உயர் சாதியினர் கருதினர். இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது.

= விலையுயர்ந்த ஆபரணங்களை அணியவும், குடை பிடிக்கவும், காலணி அணியவும், அனுமதி மறுக்கப்பட்டது. ஓடு வேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. திருமண பந்தல்கள் அலங்காரம் மறுக்கப்பட்டது.

= பெண்கள் தண்ணீர் குடத்தை இடையில் சுமந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடத்தை தலையில் வைத்து இருகைகளாலும் அதை தாங்கிப் பிடித்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டனர்.

சமயக் கட்டுப்பாடுகள்
= இறைவழிபாடு செய்வதிலும், பலவிதக் கட்டுப்பாடுகள் கீழ்சாதியினர் என்று அடையாளப்படுத்தப் பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அரசும், உயர்சாதியினரும் நிர்வகித்து வந்த வழிபாட்டுத்தலங்களில் நுழையவோ, வழிபாடு நடத்தவோ, அவற்றின் வெளிப் பிரகாரங்களில் செல்லவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

= தங்கள் வழிபாட்டிற்கென இவர்கள் எழுப்பிய வழிபாட்டுக் கூடங்களில் கூட உயர்சாதியினர் வழிபடும் தெய்வங்களை வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரபத்திரன், மாடன், சுடலை, வீரன், மாடசுவாமி, இருளன், முத்தாரம்மன், பத்ரக்காளி போன்ற தெய்வங்களையே இவர்கள் வழிபட்டனர்

= மதச்சடங்குகள் அனுசரிப்பதிலும் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெய், பால், போன்ற பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்த இவர்களுக்கு அனுமதியில்லை. கள், சாராயம் போன்ற பொருட்களை இவர்கள் பயன்படுத்தினர்.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள்
பொருளாதார ரீதியாகவும கீழ்சாதியினர் பல இன்னலுக்கு ஆளாகினர். அபராதம், வரி, நன்கொடை, என்ற பெயரில் வருமானத்தின் பெரும் பகுதியை அவர்கள் இழந்தனர்.

பிராயசித்தம்: தவறு செய்து தண்டிக்கப்பட்டவரகள் அரசுக்கு செலுத்திய அபராதத் தொகையே பிராயச்சித்தம் எனப்பட்டது. பிராயச்சித்தம் என்று பெயரில் தங்களுக்கு விருப்பமான தொகையை அரசு அதிகாரிகள் வசூலித்துக் கொள்ளலாம்.

புருசந்தாரம்: பரம்பரை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி புருசந்தாரம் ஆகும். இதன் படி சொத்து மதிப்பில் 40 விழுக்காடுக்கும் அதிகமான தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். பிராயசித்தத்தைப் போன்றே இந்த வரியிலும் ஒரு பகுதியை அதை வசூலித்த காரியக்காரர்களே வைத்துக் கொண்டனர்.

தலைவரி: ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அதிகம் பாதிப்புள்ளாக்கிய மற்றொரு வரி தலைவரி (Poll tax) ஆகும். பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கும் இவ்வரியை உறவினர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரியை கொடுக்க முடியாத காரணத்தால் பலகுடும்பங்கள் அண்டை மாநிலமான தமிழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்தவர்களின் உறவினர்களிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது.

இதர வரிகள்
தலைவரியைத் தவிர தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, என்று பல விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன. நாடார்கள் பனையேறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஏணிக்கு ஏணிகாணம் என்ற வரியும், தளைக்கு (தளை என்பது பணை ஏறும் தொழிலாளிகள் பணை ஏறும் போது கல்களில் அணிந்து கொள்ளும் பனை நாரினால் செய்யப்பட்ட வளையம்) தளைகாணம் என்ற வரியும் வசூலிக்கப்பட்டன. கள் தயாரிப்பவர்களிடமிருந்து ஒரு குடம் கள்ளிற்கு ஒரு நாளி கள் வீதம் வரியாக வசூலி்க்கப்பட்டது.
 
= ஒரு குடிசைக்கு ஒரு பணம் வீதம் குப்ப காச்சா(kuppa katch) என்ற வீட்டு வரியும் வசூலிக்கப்பட்டது. வீடுகளுக்கு கூரை மாற்றும் போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்றொரு வரியும் வசூலிக்கப்பட்டது.

= அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் அங்கு வளர்கின்ற பனை, தென்னை, கமுகு, மா, பலா, புளி, புன்னை, இலுப்பை போன்ற மரங்களுக்கும் வரி கொடுக்க வேண்டும்.

= திருமணமான பெண்களிடமிருந்து தாலியிறை வசூலிக்கப்பட்டது. சிலவகையான ஆடைகள் அணிவதற்கும், அணிகலன்கள் அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கு, குடைப் பிடிப்பதற்கு, பல்லக்கில் செல்வதற்கு, திருமணம் நடத்துவதற்கு என ஒவ்வொன்றிற்கும் அரசுக்குப் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சேர வேண்டியப் பணத்தைவிட பன்மடங்கு அதிகமாக அதிகாரிகள் வரி வசூலித்து வந்ததால், அதிலிருந்து விடுபட சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.

வரி கட்டாதவர்களுக்கு கடும் தண்டனைகள்:
வரி கொடுக்க தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் முதுகில் பாரமான கற்கள் எற்றி வைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்க விடுதல், சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல் போன்றக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

ஊதியமின்றி ஊழியம்
= உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளைப் பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டு வரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் பல குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது.

= நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல்வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக்காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

= இலவசமாக வேலை செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். 

இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் இந்தப் பொருட்களை திருவனந்தபுரத்திற்குத் தலைச்சுமையாகச் சுமந்து கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

நமது முன்னோர் அனுபவித்த கொடுமைகளில் இருந்து இந்த சத்தியத்தின் மூலம் நம்மைக் காத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்.

= இறைவன் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (விசுவாசிகளே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர்களான   கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (திருக்குர்ஆன் 2:286)
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக