1. அவமானப் படுத்துவதே ஆடைக்குறைப்பு யாரையேனும் அசிங்கப்படுத்த விரும்பினால் அவரது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்துவது காலங்காலமாக நடந்துவருவது.
இவ்வளவு ஏன்? நமது சட்டசபைகளில் எதிர்க்கட்சியினரை அசிங்கப்படுத்த வேஷ்டியை உருவிவிடுவதையும், சட்டைகளை கிழித்து விடுவதையும் நாம் பார்ப்பதில்லையா?
காவல்நிலையங்களில் கூட குற்றவாளி என்று கருதப்படுபவரை வெறும் ஜட்டியுடன் அமரவைத்து அசிங்கப்படுத்துவதைக் காலங்காலமாக கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.
ஆக, ஆடையைக்குறைப்பது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் மட்டுமல்ல அவர்களை அசிங்கப்படுத்தி இழிவுப்படுத்தும் செயலுமாகும்.
ஆனால் அதேசமயம்... யாரையேனும் மரியாதை செலுத்த அல்லது கண்ணியப்படுத்த விரும்பினால் அவர்களுக்குப் பொன்னாடையைப் போர்த்துகிறோம். இது எதைக் காட்டுகிறது?
ஆம்...பெண்களுக்கு இஸ்லாம் போர்த்தும் பொன்னாடைதான் பர்தா !! அவர்கள் கண்ணியமானவர்கள், மரியதைக்குரியவர்கள் என அறியப்படுவதற்காக அணிவிக்கப்படும் ஆடைதான் பர்தா!
2) தவறான நாத்திகக் கண்ணோட்டம்!
ஆனால் பெண்களின் உடலை மறைக்கும் பர்தாவை மூடப்பழக்கத்தில் சேர்க்கிறார்கள் நாத்திகர்கள். உடம்பையும், அங்கங்களையும் ஆடைகளால் மறைப்பது மூடத்தனமா? அப்படியென்றால் ஆடைகளை அவிழ்ப்பதுதான் பகுத்தறிவா? அப்படியென்றால் நிர்வாண சாமியார்கள்தான் உச்சக்கட்ட பகுத்தறிவுவாதிகள் என்றாகிவிடுமே? பர்தாவை மூடத்தனமென்பது விபரிதமான சிந்தனையல்லவா? அறிவு வளர வளர மனிதன் ஆடை அணியும் பழக்கத்தை அதிகரித்துக்கொண்டான் என்றுதான் பகுத்தறிவு சொல்கிறதே தவிர குறைத்துக்கொண்டான் என்று ஒரு போதும் சொல்லவில்லையே!
3 ) பர்தா பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
'ஆம்' என்று சொல்பவர்களை, அடிமைத்தனத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சுதந்திரம் என்றால் என்ன?
பேச்சு சுதந்திரம்!, கருத்துச்சுதந்திரம்!, எழுத்துச்சுதந்திரம்! என்றால் என்ன என்பதை நாம் அறிவோம். ஒரு பெண்ணுக்கு என்னென்ன சுதந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை சற்று யோசித்துப்பார்த்து இஸ்லாம் எவற்றையெல்லாம் அவளுக்கு வழங்குகிறது என்பதையும் பாருங்கள்:
- அவள் உயிர் வாழ்வதற்கான சுதந்திரம். (அதாவது இன்றுவரை ஏனைய சமூகங்களில் சர்வசாதாரணமாக நடக்கும் பெண் சிசுக்கொலையில் இருந்து தப்பித்தல்)
- பாதுகாப்புடன் நடமாடும் சுதந்திரம்!
- பெற்றோர் சொத்திலும், கணவர் சொத்திலும், ஏன் தன் பிள்ளைகள் சொத்திலும் கூட உரிமைக்கொண்டாடும் சுதந்திரம்!
- தன் கணவனைத் தெர்ந்தெடுக்கும் சுதந்திரம்!,
- மட்டுமல்ல, தன் கணவனிடத்திலிருந்து தனது வருங்கால பாதுகாப்பிற்காகத் தனக்குத் தேவையான ரொக்கத்தொகையையோ அல்லது சொத்தையொ திருமணத்திற்கு முன்பே அதிகாரத்துடன் நிபந்தனையிட்டுப் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்! (அதாவது வரதட்சணைக்கு எதிரான மஹர் எனும் வதுதட்சணை பெறுதல்)
- தனது உணவு, உடை, இருப்பிட வசதிகளை கணவனிடத்திலே அதிகாரத்துடன் பெற்றுக்கோள்ளும் சுதந்திரம்!,
- தனது சொத்துக்களைத் தானே பராமரித்துப் பாதுகாத்து அனுபவித்துக்கொள்ளும் சுதந்திரம்!,
- சுயமாக தொழில் செய்து பிழைத்துக்கொள்ளும் சுதந்திரம்!
- கல்வி கற்கும் சுதந்திரம்!,
- கல்வி கற்றுக்கொடுக்கும் சுதந்திரம்!,
- ஆட்சியாளர்களாகவே இருந்தாலும் குறைகளைத் தட்டிக்கேட்கும் சுதந்திரம்!
பெண்ணுரிமை இயக்கங்கள் போரடுவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த அனைத்து சுதந்திரங்களையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. ஒரு பெண் பர்தா அணிவதால் அவளது இந்த சுதந்திரங்களில் ஒரு இம்மியளவுகூட குறைவதில்லை. ஆனால்
ஆடைக்குறைப்புதான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட ஆபாச சுதந்திரத்தை இஸ்லாமும் சரி, பகுத்தறிவும் சரி ஒரு போதும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளாது.
4) ஆணாதிக்கத்தின் வக்கிர மனோபாவம்:
பெண்களின் ஆடைகளைக் குறைத்து நடமாடவிட்டு அதுதான் சுதந்திரமென்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது, ஆண்களின் வக்கிரப்பார்வையுடன் கூடிய ஆணாதிக்கச்சிந்தனைதான். இதைத்தான் மேலைநாட்டுக்கலாச்சாரத்தில் காண்கிறோம். அங்கே ஆண்கள் கோட்டும் சூட்டும் அணிந்திருப்பார்கள், ஆனால் பெண்களோ அந்தக் கடும் குளிரிலும் முழங்கால், தொடை தெரிய ஆடை அணிந்திருப்பார்கள். மேலை நாட்டுக்கலாச்சாரத்திற்கு சிந்தனை அடிமைகளாகிவிட்ட நம்மவர்கள் இதைத்தான் சுதந்திரமென்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள்!
இவ்வளவு ஏன்? நம் நாட்டில் கூட முற்காலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை ரவிக்கை இன்றி நடமாட விட்டது, மேல் ஜாதி ஆணாதிக்கத்தின் வக்கிரப் பார்வைதான் என்பதை மறந்துவிட முடியுமா?
ஆக ஆடைக்குறைப்பு பெண்சுதந்திரமல்ல பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடே!
பர்தா- பாதுகாப்புக் கவசம்!
ஜன நடமாட்டம் மிகுந்த தெருக்களில் பர்தா அணிந்த பெண்கள் செல்வதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் !
ஆண்களின் கழுகுப்பார்வைகள் அவளை ஊடுருவுவதில்லை, அவளது அங்கங்களை அளவெடுப்பதில்லை, ஏன்? ஷாப்பிங் மால்கள், பொது இடங்களில் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்ரோ கேமராக்களைப் பற்றிய பயமின்றி மற்ற பெண்களைவிட வெகு சுதந்திரத்துடன் ஒரு பர்தா அணிந்த பெண் நடமாடுவதைக் காணலாம். நடிகைகள் போன்ற பிரபல்யமான பெண்கள் கூட பொது இடங்களுக்குச் செல்ல ரசிகர்களுக்கும் ஆண்களுக்கும் பயப்படாமல் சுதந்திரமாக நடமாட பர்தாவின் துணையைதான் நாடவேண்டியிருக்கின்றது.
இவ்வளவு பாதுகாப்பான, கண்ணியமான ஆடையை அடிமைத்தனமாக கருதுவது பகுத்தறிவாகுமா?
5) பர்தா முன்னேற்றத்துக்குத் தடை அல்ல!
பர்தா பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது என்பது நாத்திகர்களின் அடுத்தக்குற்றச்சாட்டு. இதுவும் அவர்களது தவறான கணிப்பின் விளைவே! ஆடைக்குறைப்பை அங்கீகரித்தக் கிறித்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் அன்னைத் தெரஸா, முஸ்லீம் பெண்கள் அணிவதுப்போல் ஆடையை அணிந்துக்கொண்டு உலகமக்களுக்கு சேவை செய்து புகழ் பெற வில்லையா? அவரது செயல்களுக்கு அவரது ஆடை தடையாக இருக்கவில்லை மாறாக அவரது கண்ணியத்தைக் கூட்டுவதாகத்தான் அமைந்துள்ளது. இன்றைக்கு பர்தா அணிந்துள்ள முஸ்லிம் பெண்கள் டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ...இப்படிப் பலதுறைகளிலே சிறப்பாக உருவாகியிருக்கிறார்கள், இன்னும் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிய வருகிறோம்.
6. கல்விக்கு பர்தா தடை அல்ல:
கல்வியை இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டாயக்கடமையாக ஆக்கியுள்ளது. இருப்பினும் முஸ்லீம் பெண்கள் கொஞ்சம் பின் தங்கியுள்ளார்கள் என்பதும் உண்மையே. இதற்குக்காரணம் பர்தா அல்ல மாறாக பர்தா அணியக்கூடாது என்று நிர்ப்பந்தித்த கல்வி நிறுவனங்களே. ஆம்! நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது கல்வியைமட்டும் கொடுக்கவில்லை அதனுடன் அவர்களது கலாச்சாரத்தையும் சேர்த்தே திணித்தார்கள். அதை இன்றைக்கும் நமது கல்வி நிறுவனங்களில் பல பின்பற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. பல கல்வி நிறுவனங்கள் பர்தாவை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மேம்பட்ட கலாச்சாரமாக கருதும் முழங்கால் தெரியும் கவுன்களை யூனிஃபார்ம் என்கின்ற பேரிலே அணியச்சொல்லி முஸ்லீம் பெண்பிள்ளைகள் மீது தனதுக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள். இந்தக்கலாச்சாரத் திணிப்பு எந்த விதத்தில் நியாயமாகும்? ஏன்? பர்தா அணிந்தால் மண்டையில் கல்வி ஏறாதா? பாதுகாப்பையும் கண்ணியத்தையும் தரும் பர்தா எந்த விதத்தில் கல்விக்கு தடையாகமுடியும்? ஆனால் காலம் மாறிவருகிறது. தற்போது சில கல்வி நிறுவனங்கள் பர்தாவை ஏற்றுக் கொள்கிறார்கள், அதுமட்டுமல்ல முஸ்லீம்களே நிறைய கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்கள். அவற்றில் அதிகமதிகம் முஸ்லீம் பெண்கள் படித்து பல சாதனைகளைப் புறிந்துவருகிறார்கள். நியாய உணர்வும், பகுத்தறிவுமிக்க சிந்தனையாளர்களும் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்பலாம்!
-----------------------
ஆக்கம்: பேராசிரியர் ஃபரீத் அஸ்லம், புதுக்கல்லூரி, சென்னை
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக