இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

மரணத்தை மறந்து வாழலாகுமா?


  • அலுவல்களிலோ தொழிலிலோ எவ்வளவுதான் ஆழமாக மூழ்கி  இருந்தாலும் அது வரும்போது அதற்கு முன்னுரிமை அளிக்காதவர்களே கிடையாது.
  • எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரெனவும் அது வரும்!
  • சில சமயம் சிலருக்கு சிறு முன்னறிவிப்போடும் வரும்!
  • நாம் பிறந்தது முதல் நம்மோடு ஒட்டிக்கொண்டு வருவது அது!
  • நமது கண்களுக்குப் புலப்படாதது அது!
  • பிறருக்கு அது வரும்போதுதான் அப்படி ஒன்று இருப்பதையே நாம் உணர்கிறோம்!
  • நாம் எவ்வளவு வெறுத்தாலும் நம்மை விட்டுப் பிரியாதது!
  • அது வந்துவிட்டால் நமது உறவினர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.
  • நமது செல்வம் நம்மிடம் இருந்து பறிபோய்விடும்.

ஆம் அன்பர்களே அது வேறு ஒன்றும் அல்ல , நமக்கு அனைவருக்குமே கசக்கும் தவிர்க்க முடியாத உண்மை - மரணம் என்ற உண்மை!

அதைப்பற்றி பேசுவது அபசகுனம் என்று பலரும் வெறுப்பதை நாம் பார்க்கலாம். ஆனால் மிக மிக முக்கியமாக அனுதினமும் அடிக்கடி நினைவு கூற வேண்டிய ஒரு வாஸ்தவம் அது! அந்த அன்னியோன்யமான உண்மையை எந்த அளவுக்கு மனிதன் மறக்கிறானோ  அந்த அளவுக்கு அதர்மம் தலைவிரித்தாடும், கலவரங்களும் அமைதி இன்மையும் பெருக்கெடுத்தோடும். மனிதன் இந்த மாபெரும் உண்மையை மறந்து போவதால்தான் அவனை அகங்காரமும் தலைக்கனமும் ஆட்டிபபடைக்கின்றன.  எனவேதான் நம்மைப் படைத்தவன் இந்த உண்மையை தன் திருமறையில் அடிக்கடி நினைவூட்டுகிறான்.

4:78 'நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்¢ நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! .....”

நான் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிகமான வாழ்வுதான். மரணம் வந்தால் நான் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டியுள்ளது. என்னைப் படைத்து பரிபாலித்து வருபவன் என்னை மீணடும் உயிர்கொடுத்து எழுப்புவான், அவனுக்கு நான் என் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும், எனது புண்ணியங்கள் பாவங்களை விட அதிகமாக இருந்தால் எனக்கு நிரந்தர சொர்க்க வாழ்வு கிடைக்கும், எனது பாவங்கள் புண்ணியங்களை மிகைத்தால் என் நிரந்தர வாழ்வு நரகத்தில்தான் என்ற உண்மை ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் விதைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எனது இந்த தற்காலிக வாழ்வு என்பது ஒரு பரீட்சை போன்றது, இதில் நான் என்னைப் படைத்தவன் விரும்பும் செயல்களைச் செய்து அதிகமதிகமாக புண்ணியங்களை சம்பாதிக்க வேண்டும். இறைவன் தடுத்துள்ள மற்றும் வெறுக்கும் காரியங்களைச் செய்து பாவங்களைச் சம்பாதிக்கக் கூடாது என்ற கடமை உணர்வு பிஞ்சு மனங்களில் அவை சிந்திக்கும் பருவம் முதலே ஊட்டப் படவேண்டும்.

மரணம் பற்றிப் பேசுவது அபசகுனம் அல்லது சந்தோஷத்தைக் கெடுக்கும் அல்லது மூட் அவுட் ஆக்கிவிடும் என்றெல்லாம் சொல்லி இந்த மாபெரும் உண்மையை மறக்கச் செய்தோமானால் அது நீதி உணர்வற்ற மற்றும் குற்ற உணர்வில்லாத தலைமுறைகளைத்தான் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் மனிதன் புனிதனாக வளர வேண்டுமானால் அவனுக்கு மரணம் பற்றிய சிந்தனையும் மறுமை வாழ்வு பற்றிய சிந்தனையும் படைத்தவனின் வார்த்தைகளைக் கொண்டு நினைவூட்ட வேண்டும். இதோ இறைவனின் இறுதி வேதத்திலிருந்து சில வரிகள்:

21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢ பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

62:8 'நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்¢ பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

63:10 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாழ்க்கை என்ற  பரீட்சையின் இறுதி வெற்றி சொர்க்கத்தை அடைவதிலேதான் உள்ளது என்ற உணர்வு ஊட்டப்ப்படும்போது மனிதன் கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்க்கும் தியாகங்களை மேற்கொள்வதற்கும் தயாராகிறான்.

3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

இம்மரணம் பற்றியோ மறுமை பற்றியோ கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். மாறாக பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரச் சொல்கிறான் இறைவன். மரணம் என்பது நாம் அன்றாடம் அனுபவித்து வரும் ஒன்று. மரணத்தின்போது மனிதனின் ஆத்மா  கைப்பற்றப்படுவது போலவே தினமும் நாம் உறங்கும்போது நமது ஆத்மா இறைவனால் கைப்பற்றப்ப்டுகிறது என்பதுதான் உண்மை. எனவேதான் நாம் உறங்கும்போது நம்மால் நம்மைச்சுற்றி நடப்பவைகளைக் குறித்து அறிய முடிவதில்லை. கீழ்கண்ட இறைவரிகள் இதை உணர்த்துகின்றன:

39:42 அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்¢ மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

ஆம் அன்பர்களே, அனுதினமும் நமது உயிர்கள் இறைவன்பால் போய்வருகின்றன. ஒருநாள் போன உயிர் திரும்பாமலும் போகலாம்! எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) இரவில் படுக்கைக்கு செல்லும்போது கீழ்கண்டவாறு பிரார்த்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்:

இறைவா, உன் பெயரால் நான் மரணிக்கவும் வாழவும் செய்கிறேன்

அதேபோல் காலையில் கண்விழித்தால் போன உயிர் திரும்பிக் கிடைத்ததற்காக நன்றி சொல்லக் கற்றுத் தருகிறார்கள் நபிகளார்:

என்னை மரணிக்கச் செய்த பின் உயிர் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அவனிடமே நமது மீட்சியும் உள்ளது.      

மரணத்திற்க்குப் பின் இறைவனிடம் மீட்டப்படுவது பற்றி சந்தேகத்திலிருப்போரை  அவர்களின் சுற்றும்முற்றும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துப் பாடம் பெறச் சொல்கிறான் இறைவன்

7:185 வானங்கள் பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?

43:11 அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர் அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

23:80 அவனே உயிர் கொடுக்கிறான்¢ இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்¢ மற்றும் இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக