இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜூன், 2022

நபிகளாரைப் பரிகசித்தோர் நிலை- அன்றும் இன்றும்!

அன்று மக்காவில் பரிகசித்தவர்கள் நிலை: 

இஸ்லாம் என்பது ஒரு இறைதந்த வாழ்வியல் கொள்கை. அண்ணல் நபியவர்கள் இஸ்லாத்தைத் தான் பிறந்த மக்கா மண்ணில் மக்களிடையே போதித்த போது சத்தியத்தைப் புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த கொள்கையில்  தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!

ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அங்கு பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த கொள்கை வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து சிலரை அவர்களுடைய தற்பெருமையும் சிலரை சுயநலமும் சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை முன்னோர்கள் எது செய்தாலும் சரியே என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது! தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்று பயந்த குறைஷித் தலைவர்கள் நபிகளாரை நேரடியாகப் பரிகசிக்கவும் தாக்கவும் முற்பட்டனர்.

நபிகளாரின் மீது ஒட்டகக் கழிவை கொட்டுதல்

நபிகளார் கஅபா ஆலய வளாகத்தில் சென்று தொழுவது வழக்கம். ஒருநாள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, இன்று முஹம்மதுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள் எதிரிகள். நபியவர்கள் நெற்றியை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்தபோது (இதை ஸஜ்தா என்று இஸ்லாமிய வழக்கில் கூறப்படும்) தாங்கள் மறைத்து வைத்திருந்த பாரமான ஒட்டகக் குடலை நபியவர்களின் பிடரியின் மீது போட்டு எள்ளிநகையாடினர்.  இந்த சம்பவத்தை நேரடியாக கண்டு நின்ற இளவயது நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறக் கேட்போம்:

  நபி (ஸல்) அவர்கள் இறை இல்லம் கஅபாவில் தொழுது கொண்டிருந்தபோது இஸ்லாத்திற்கு பெரும் விரோதியாக இருந்த அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து "இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப் பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும் போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர்.

அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த சத்தியமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள்.

அப்போது தகவல் அறிந்த ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள்.

பொறுமையும் பிரார்த்தனையுமே ஆயுதங்கள்:

பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி "யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள்.

அவர்களுக்குக் கேடு உண்டாக வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், "அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.

 பின்னர் நபி (ஸல்) அவர்கள்  (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, "யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன்.

என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் "கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்''  என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(நூல்: புகாரி )

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

இன்றைய நாள் எதிரிகளுக்கும் இறை எச்சரிக்கை

அண்ணல் நபிகளாரை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனே தனது தூதராக அனுப்பி உள்ளான். பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி! அந்த மாமனிதரை கேலி செய்தவர்கள் உடனடியாக இல்லாவிட்டாலும் இவ்வுலகிலேயே தண்டனையை அடைகிறார்கள் என்பது நபிகளாரின் வாழ்நாள் நிகழ்வுகளில் இருந்து தெளிவாகிறது. இறைவனையும் அவன் வழங்கிய நேர்வழியை மறுத்ததற்கும் அதைப் பரவ விடாமல் தடுத்ததற்கும் இன்னும் கொடிய தண்டனைகளை மறுமையில் கண்டிப்பாக அவர்கள் அடைந்தே தீருவார்கள் என்கிறது திருக்குர்ஆன்:

= இன்னும் கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், இறைவனைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். (அவன்) இறைவனின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (திருக்குர்ஆன் 22: 8- 9)

 = எவர்கள் சத்தியத்தை மறுத்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். (திருக்குர்ஆன் 6:88)

 தண்டனை ஏன் உடனடியாகக் கொடுக்கப்படுவது இல்லை?

இந்த வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவுமே இறைவன் படைத்துள்ளான். ஒரு பரீட்சைக் கூடத்தில் தவறான விடை எழுதிக் கொண்டு இருக்கும் மாணவனை ஆசிரியர் உடனடியாக தண்டித்தால் அது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. எனவேதான் தவறிழைக்கும் குற்றவாளிகள் விட்டுவைக்கப் படுகிறார்கள். பரீட்சை முடிந்ததும் அவர்கள் அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை அடைவார்கள்.

= உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். (திருக்குர்ஆன் 18:58)

= இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 3:178)

 ========================= 

ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக