இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூன், 2022

இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்?


இறைத்தூதர்கள் ஏன் வரவேண்டும்? - 
இக்கேள்விக்கு விடை அறிய மனித வாழ்க்கைக்கு இறை வழிகாட்டல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

  1. ஒழுங்கின்றி அமையாது மனித வாழ்க்கை!

ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்?

விளைவை நாம் அனைவரும் அறிவோம். பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம். ஏன்,  சாலையில்கூட  நடமாட மாட்டோம். எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம். ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாது! அனைத்துமே ஸ்தம்பித்துவிடும்! இது எதை நமக்கு உணர்த்துகிறது?

ஆதிமுதலே இருந்தது ஒழுங்கு!

சட்டம், ஒழுங்கு, பரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம். எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள்  முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம். மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) மூலம் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம். ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது!

ஒரு மனிதனுக்குள் தன் வினைகளுக்கு மறுமையில் கேள்விக் கணக்கும் விசாரணையும் உள்ளது என்ற உணர்வு வளர்க்கப்பட்டால் அங்கு ஒழுங்கும் (order)   கட்டுப்பாடும்(discipline)  உண்டாகும். இந்த இறையச்சம் குறையும்போது அல்லது அறவே இல்லாமல் ஆகும்போது அங்கு தான்தோன்றித்தனமும் குழப்பமும் மட்டுமே பெருகும். இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற போக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்குமானால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்.

2.  படைத்தவனே பயன்பாடு அறிவான்: 

இன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம்  என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா? நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா? சிந்தியுங்கள்.

3. சட்டம் ஒழுங்கு உருவாக இறைவழிகாட்டுதல் அவசியம்:

மனிதர்களிடையே நிறம், இனம், நாடு, மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகள் இயல்பானவை. ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமூகமாக வாழ்வதற்கு அங்கு சட்டங்களும் ஒழுங்குகளும் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது, பாவம் எது புண்ணியம் எது என்பதைப் பிரித்தறிவிக்கும் ஒரு பொதுவான அளவுகோல் இருந்தால்தான் அனைவருக்கும் பொதுவான சட்டங்களை இயற்ற முடியும். இப்பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான அறிவும் ஆயுளும் கொண்ட மனிதர்கள் சொந்த அறிவை அல்லது அனுபவத்த்தை வைத்துக்கொண்டு இயற்றும் சட்டங்கள் ஒருதலைப்பட்சமானதாகவும் குறைகள் உள்ளவையாகவும் இருக்கும்.

மாறாக இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே தனது படைப்பினங்கள் பற்றிய முழுமையான அறிவு உள்ளது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்து ஜீவாராசிகளுக்கும் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. அவன் வழங்கும் அளவுகோல் அல்லது சட்டங்கள் மட்டுமே மிகவும் உன்னதமானவை. எனவே இந்த விடயத்திலும் இறைவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என்பதை அறியலாம்.

இறைவனே இதைக் கூறுகிறான்:

''நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.'  (திருக்குர்ஆன் 92:12-13)

இறுதி இறைத்தூதரே முஹம்மது (ஸல்)

அந்த இறைவழிகாட்டுதலை தங்கள் வாழ்க்கை முன்னுதாரணம் மூலம் மக்களுக்கு போதித்து அவர்களை நல்வழிப்படுத்த வந்தவர்களே இறைத்தூதர்கள்! அவர்கள் மூலம் அனுப்பப்படுபவையே இறைவேதங்கள். அந்த இறைத்தூதர்களின் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்தவரே நபிகள் நாயகம் என்று அறியப்படும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் – பொருள்: அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக). அவர் மூலம் அருளப்பட்ட இறைவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்று அறியப்படுகிறது. 
================ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக