இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜூன், 2022

மனிதகுலத்தையே பாதுகாக்கும் மாமனிதர்!

 


அண்ணல் நபிகளாரின் இலக்கு அனைத்துலக மக்களையும் அவர்கள் இவ்வுலகில் அவர்களைப் பீடித்துள்ள அடிமைத்தளையில் இருந்தும், அவர்கள் படும்  துன்ப துயரங்களில் இருந்தும் சீர்கேடுகளில் இருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதேவேளையில் மறுமையில் நரகத்தில் இருந்து மீட்டு அவர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. அதாவது  அவர்களின் இம்மையும் மறுமையும் செம்மையாக அமையவேண்டும் என்பதே இலக்கு! அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறையே இஸ்லாம் என்ற இறை மார்க்கம். இதை மக்களுக்கு போதிக்கவே அவர் இறைத் தூதராக அனுப்பட்டார்.  

எதிலிருந்தெல்லாம் பாதுகாப்பு?

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அவரைப் பின்பற்றியவர்களும் சரி இன்று பின்பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களும் சரி கீழ்கண்ட தீங்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள் அல்லது பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்:

= படைத்தவனை நேரடியாக வணங்கக் கற்றுக் கொண்டதால் கடவுளின் பெயரால் மக்களை சுரண்டும் இடைத்தரகர்களின் தீமையில் இருந்து பாதுகாப்பு.

= இஸ்லாம் கற்றுத்தந்த மனித சமத்துவக் கொள்கையை பின்பற்றுவதால் குல மேன்மை இன மேன்மை பாராட்டும் சுயநல ஆதிக்கவாதிகளின் தீங்கிலிருந்தும் தீண்டாமைக் கொடுமையில் இருந்தும் விடுதலை.

= அனைத்து மனிதகுலமும் ஒரு ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்று நம்புவதால் நிறவெறி, இன வெறி, மொழிவெறி, ஜாதிவெறி இவற்றில் இருந்து விடுதலை! இவற்றின் காரணமாக உண்டாகும் சண்டைகளில் இருந்து பாதுகாப்பு!

= வரதட்சணைக் கொடுமை, கட்டாயத் திருமணம், பெண்ணுரிமைகள் மறுப்பு, பெண் சிசுக்கொலை, பெண் கருக்கொலை, சொத்துரிமை மறுப்பு போன்றவற்றில் இருந்து பெண்ணினத்திற்கு பாதுகாப்பு..

= குடும்ப அமைப்பு பேணுதல், ஆடைக் கட்டுப்பாடு, அந்நிய ஆண்-பெண் கலந்துறவாடத் தடை போன்ற கட்டுப்பாடுகள் மூலம் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு.. சமூக சீரழிவில் இருந்து பாதுகாப்பு.

= வட்டி, ஊக வாணிபம், மோசடி வியாபாரம் போன்றவற்றின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு! ஜகாத் மூலம் வறுமையில் இருந்து விடுதலை!

= இறைவனையும் மறுமையையும் பற்றிய நம்பிக்கைகள் ஆழமாக விதைக்கப்படுவதால் தனி நபர் ஒழுக்க சீர்கேடு, மது மற்றும் போதைப்பொருள், விபச்சாரம் போன்ற தீங்குகளில் இருந்து பாதுகாப்பு. 

மனித மனங்களை சீர்திருத்தி அவர்களின் கரங்களைக் கொண்டே நடத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இவை. மற்ற சித்தாந்தங்களைப் போல் மக்களின் மீது ஆதிக்கம் பெற்று அரசாட்சியைக் கைப்பற்றி நடத்தப்படும் சமூக மாற்றங்களல்ல இவை.

இறைவன் இந்த தூதரைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

= எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர் அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.  (திருக்குர்ஆன் 7:157)

மக்களின் துன்பப்படுவது கண்டு வருந்துபவர்:

அகிலத்தின் அருட்கொடையாக வந்த அந்த அண்ணல் மக்களின் உணர்வுகளோடு உணர்வுகளாகக் கலந்தவர். அகிலத்தின் இறைவனே சான்று வழங்குவதைக் காணுங்கள்:

= (இறை விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் இறைநம்பிக்கையாளர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (திருக்குர்ஆன் 9:128) 

======================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக