இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 மே, 2022

சமூக சீர்திருத்தத்தில் பாங்கோசையின் பங்கு


அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது ‘பாங்கு’ என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  மனித குரலைதொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

 1. அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

 1. அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
 2. அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்
 3. ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்
 4. ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்
 5. அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.
 6. லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

 1. தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.
 2. நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.
 3. கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.
 4. சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
 5. தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.
 6.  இவைபோக குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி, நீதிபோதனை போன்றவற்றை வழங்கும் மதரசாக்கள் பள்ளிவாசல் வளாகத்திலேயே செயல்படுகின்றன. பள்ளிவாசல் இமாம்கள் இக்கல்வி வழங்கும் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதன் மூலம் இளைய தலைமுறை ஒழுக்கம் பேணி வளர வாய்ப்பாகிறது.

இன்னும் இவை போன்ற ஆன்மீக மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழுகை ஆணிவேராகத் திகழ்வதை நீங்கள் காணலாம். அந்தத் தொழுகைகளை முறைப்படி அந்தந்த நேரங்களில் நிறைவேற்ற சமூகத்திற்கு விடுக்கப்படும் அழைப்பே இந்த பாங்கு. இந்த பாங்கின் வாசகங்கள் மூலம் இறைவனின் மகத்துவம், இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்கள், தொழுகையே வாழ்கையின் உண்மை வெற்றிக்கான வழி போன்ற உண்மைகள் அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டப்படுகின்றன.

========================== 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக