படைத்தவனின் வல்லமை உணர்வோம்:
நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின்
வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளியேயும் பரவிக்கிடக்கின்றன. ஒரு
உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடங்கியுள்ள
நுட்பங்களும் தகவல்களும் மென்பொருளும் எல்லாம் அந்த விதை மண்ணோடும் நீரோடும்
சேரும்போது நிகழ்த்தும் அற்புதங்களை அறிவீர்கள். அவை செடிகொடிகளாக மரங்களாக
பழங்களாக பரிணமித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதே போல ஒரு இந்திரியத் துளி
முழு மனிதனாக பரிணமிப்பதையும் மீண்டும் இனப்பெருக்கம் செய்வதையும் காண்கிறோம்.
அவ்வாறே இம்மாபெரும் பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி
நின்றதையும் அதற்கு இடப்பட்ட கட்டளைக்குப் பின் ஒரு பெருவெடிப்பு (Big bang)
நிகழ்ந்து இப்பேரண்டமாக உருவெடுத்து தொடர்ந்து அதிவேக கதியில் விரிவடைந்து
வருவதையும் இன்று அறிவியல் உறுதிப் படுத்திச் சொல்கிறது. இவை அனைத்தும்
அதிபக்குவமான முறையில் உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த தன்னிகரற்ற சக்தியையே
தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் சொல்கிறோம்.
அற்பமானவன் அல்ல இறைவன்:
அந்த தன்னிகரற்ற இறைவன் இப்பேரண்டத்தில் அற்பமான ஒரு துகள்
போன்ற பூமியின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் மற்றொரு துகளாக இருக்க வாய்ப்பில்லை
என்பது பகுத்தறிவு நமக்குச் சொல்லும் தகவலாகும். மேலும் அந்த சர்வவல்லமை கொண்ட
இறைவனுக்கு எதையேனும் அற்பப் பொருட்களை ஒப்பிட்டு அவற்றைக் கடவுள் என்று சொல்வதும்
பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்பதையும் அறிகிறோம்.
இறைவன் அல்லாதவற்றை வழிபடும் விபரீதம்:
இன்று பெரும்பாலான மக்கள் கடவுள் அல்லாதவற்றை கடவுளாக
பாவித்து வணங்கும் செயலில் மூழ்கி உள்ளதை நாம் அறிவோம். அவ்வாறு இறைவனைச்
சிறுமைப்படுத்தி சித்தரிப்பதால் மனித மனங்களில் உண்மை இறைவனைப் பற்றிய மதிப்பும்
மரியாதையும் அகன்று போகிறது. அதனால் இறையச்சம் அகன்று போய் பாவங்கள்
அதிகரிக்கின்றன. இறைவனை பல்வேறு விதமாக சித்தரிக்கும்போது அவற்றை வணங்குவோர்
பல்வேறு குழுக்களாகி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வு கற்பித்தலும் தீண்டாமையும் எல்லாம்
உடலெடுப்பதை நாம் அறிவோம்.
இறைவனின் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்
இன்று மக்கள்
வழிபட எடுத்துக் கொண்டுள்ள கடவுளர்களின் இயலாமையை உண்மை இறைவனின் வல்லமையோடு
ஒப்பிட்டு நோக்க தனது வேதம் மூலம் அழைக்கிறான் அவன். இன்று நீங்கள் உயிர்வாழ அனைத்து வசதிகளையும் அருட்கொடைக்கு
மேல் அருட்கொடைகளாக வழங்கியவனை விட்டு விட்டு அவன் அல்லாதவற்றைக் கடவுளாக பாவித்து
வணங்குவது முறையா என்று கேட்கிறான்:
- நீங்கள் வணங்குபவை மழையும் விளைச்சலும் தருமா?
= அன்றியும், வானங்களையும் பூமியையும்
படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக்
கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச்
செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன்
இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு)
சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 27:60)
(அல்லாஹ்
என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
- பூமியும் ஆறுகளும் கடல்களும் உண்டாக்கினவா?
= இந்தப்
பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும்,
அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன்
மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும்
யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? இல்லை!
(எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (திருக்குர்ஆன் 27:61)
- பிரார்த்தனைக்கு
பதில் கூறுமா?
= கஷ்டத்திற்குள்ளானவன்
அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து,
அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை
இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன்
(வேறு) இறைவன் இருக்கின்றானா?
(இல்லை) எனினும் (இவையெல்லாம்
பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (திருக்குர்ஆன் 27:62)
- வழிகாட்டும் ஆற்றலுண்டா அவற்றுக்கு?
= கரையிலும்
கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள்
மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன்
(வேறு) இறைவன் இருக்கின்றானா?
- அவர்கள் இணை வைப்பவற்றைவிட
அல்லாஹ் மிகவும் உயர்வானவன். (திருக்குர்ஆன் 27:63)
- படைப்பாற்றல் உண்டா அவற்றுக்கு?
= முதன்
முதலில் படைப்பைத் துவங்குபவனும்,
பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி
வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும்,
பூமியிலிருந்தும் உங்களுக்கு
ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? (நபியே!) நீர்
கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய
ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.” (திருக்குர்ஆன் 27:64)
- மறைவானவற்றை
அறியுமா?
= (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து,
வானங்களிலும், பூமியிலும்
இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்:
(மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 27:65)
எனவே தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்துகொள்ள இயலாத
கற்பனைக் கடவுள்களை விட்டுவிட்டு உண்மை இறைவன்பால் மீண்டு வாழ்வில் வெற்றி அடைய
முயலுவோம்.
-------------நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக