இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 மார்ச், 2019

இருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்!



தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்    
= பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் அன்னியப் பெண்களோடு நட்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து அன்னியோன்யமான தகவல் பரிமாற்றம் மூலம் நேரடி தொடர்புக்கு வழி செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களோடு உல்லாசமாக இருக்கும் நிகழ்வுகளை இரகசியமாக செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்துள்ளனர். இவற்றைக்கொண்டு இவர்களது காம வலையில் விழ்ந்த பெண்களை பிளேக்மெயில் செய்துள்ளனர். இப்பெண்களை வைத்துக்கொண்டு விபச்சாரத்தை வியாபாரமாக செய்துள்ளனர். பெரும்புள்ளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இவர்களைத் தாரைவார்த்துக் கொடுத்து வந்துள்ளனர். சுமார் ஏழு வருடங்களாக இக்கொடூரக் குற்றம் நடந்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இது அம்பலத்திற்கு வந்துள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
இன்று பெரும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஏதோ அபூர்வமான ஒன்றல்ல என்பதை அறிவோம். எப்போதும் போல இந்த சம்பவமும் மற்ற சம்பவங்கள் போல கடந்து போகும்.
இதோ எடுத்துக்காட்டாக கடந்தகால சம்பவங்களில் மிகச்சில...
= டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு, நிர்பயா (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, சாலையில் வீசப்பட்ட அவர், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 29–ந்தேதி உயிரிழந்தார்.
= காஷ்மீரில் கடந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி கதுவா மாவட்டத்தில் ஒரு வழிபாட்டுத்தலத்தின் கருவறையில்  8 வயது முஸ்லிம் ஒரு பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பின் 17-ம் தேதி சடலமாக அப்பகுதியில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
= சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து அவர் வைத்திருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
= காடையாம்பட்டி தாலுகாவில் 17 வயது சிறுமியை அவரின் உறவினரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
= சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல் வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
= அரூர் கோட்டப்பட்டியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அண்ணாமலை – மலர் தம்பதியினரின் மகள் சவுமியா. அரசு மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. தீபாவளி விடுமுறைக்கு வீடு வந்த செல்வி சவுமியா காலைக் கடன் கழிக்க ஊருக்கு வெளியே சென்றபோது கடந்த 6 ஆம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு பேர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளனர். தன்னை காத்துக் கொள்ள சவுமியா போராடினார். ஆனால், அந்தக் கயவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், ரத்தமாக வழிந்த நிலையில் பெற்றோரிடம் சவுமியா முறையிட, செய்வதறியாது தவித்த அவர்களும், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
= சேலம் ஆத்தூர் அருகே தளவாய்ப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி என்ற சிறுமியிடம், அதே பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்பவன் பாலியல் சீண்டல்களை செய்துள்ளான். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே அடுத்தடுத்த வன்மத்தை அரங்கேற்றி வந்துள்ளான். தன்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, இதை தன் பெற்றோரிடம் சொல்ல, இதனை அடுத்து அவர்கள் தினேஷைக் கண்டித்துள்ளனர்.
=  பதயூன் மாவட்டம் பிஸ்ஸாவுலி தொகுதி எம்எல்ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலைகாரரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். போலீசில் புகார் தெரிவித்ததால் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை முடித்துகொள் ரூ. 20 லட்சம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார். எம்எல்ஏவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதால் அப்பெண் இப்புகாரை போலீசில் தெரிவித்துள்ளார்.
= திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து விடுதி காப்பாளர்களும் அந்த செயலுக்கு ஒத்துழைப்பு தருமாறு மாணவியை வற்புறுத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
= உத்தரபிரதேச மாநிலம் உன்னா வில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
= சேலம் மாவட்டத்தில், எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் தோரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் எட்டு வயது மற்றும் ஏழு வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும், இதே பகுதியில் மற்றொரு 7 வயது குழந்தை பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டதுடன், அக்குழந்தையின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
= சமீபத்தில் #MeToo பாலியல் புகார்களின் வாயிலாக கடந்த காலத்தில் பிரபலங்கள் தங்களுக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை நடிகைகளும் பெண் கலைஞர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து விவாதித்ததை அறிவோம். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார் பாடகி சின்மயி, மட்டுமல்ல நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
= ஒரு இலங்கைப் பெண் கூறியிருப்பதாவது: நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன். எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.
= சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
= மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
= சென்னையில் முகளிவாக்கத்தில் 7-வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி எஸ் தஸ்வந்த் தாக்கல் செய்தமனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது
= 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
= பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய பெயின்டருக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அனைத்து சம்பவங்களையும் அவ்வளவு எளிதாக பட்டியல் இட்டுவிட முடியாது என்பதை நாம் நன்றாக அறிவோம். வெறும் எடுத்துக்காட்டிற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட மிகச்சில சம்பவங்களின் தொகுப்பையே மேலே காண்கிறோம்.
அதிகாரத்தில் உள்ளோரின் பொறுப்பின்மை:
எவ்வளவுதான் கொடுமைகள் உச்சகட்டத்தை அடைந்தாலும் ‘மறப்பது மக்களின் இயல்பு’ என்பதை நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள். அதனால் அவர்கள் இந்த வன்கொடுமையை தடுக்க  ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அவ்வப்போது கண்துடைப்பிற்காக மட்டும் எதையாவது செய்து தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். இவையெல்லாம் நாளை மறுமையில் விசாரிக்கப்பட உள்ளன என்பதையும் அதற்கான தண்டனைகளை அனுபவிக்க உள்ளார்கள் என்பதையும் உணராமல் இருக்கிறார்கள்.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். .... உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
குற்றங்களின் வீரியமான வளர்ச்சி:
இந்த தொடரும் குற்றங்களின் பெருக்கத்தினால் அவ்வப்போது நாடு கொந்தளிக்கிறது. போராட்டங்களும் சமூக வலைதளங்களில் தொடர்புடையோரைத் தூற்றலும் வீரியமாக நடக்கின்றன. ஆனால் மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஆள்வோர் தந்திரமான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள். புதுப்புது பரபரப்பான விவகாரங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் கிளப்பிவிட்டு அவற்றைப் பரப்பி இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறார்கள். மக்களும் அடங்கிப் போய்விடுகிறார்கள். இதுதான் இன்றைய நடைமுறை.
ஆனால் பாலியல் வல்லுறவு என்ற வன்கொடுமை சற்றும் அடங்காமல் மிகமிக வீரியமாக வளர்ந்தே வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
= தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்' எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து 550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. பாலியல் பலாத்காரம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு, கட்டாயத்திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி நடத்திய அதன் ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று அந்த வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள்.. கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று மிகமோசமாக முதலிடத்தில் இருக்கிறது. (தி ஹிந்து நாளிதழ் :  26 -௦6- 2018)
= தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி 2012  NCRB  நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 68 பெண்கள் கற்பழிக்கப்படும் நிலை இருந்தது.  2016 வருட அறிக்கைப்படி நாளொன்றுக்கு  106 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். கடந்த சில வருடங்களாக NCRB அறிக்கைகளை அரசாங்கம்  வெளியிடாத நிலையே தொடர்கிறது.
= இந்த எண்ணிக்கையில் சுமார் 94% க்கும் அதிகமான கற்பழிப்புகள் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது மிகவும் வேதனைக்குரிய வெட்கப்பட வேண்டிய தகவலாகும்.
உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் பேதைகள்:
= மேலே கூறப்படும் புள்ளிவிவரம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது. பெண்களின் மானம் தொடர்புடையவை என்பதாலும்  குற்றமிழைத்தவர்களின் அடக்குமுறைக்கு பயந்தும் பெரும்பாலான குற்றங்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன.. மேலும் காவல்துறையினர் கெடுபிடியும் அங்கு உண்டாகும் அலைச்சலும் காரணமாக அக்குற்றங்கள் அங்கு பதிய பாதிக்கப்பட்டவர்கள் முயற்சிப்பதில்லை. 
National Family Health Survey (NFHS)  என்ற அமைப்பு நடத்திய கணிப்பின்படி வெறும் 15 % சம்பவங்கள் மட்டுமே காவல்துறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்படியானால் 85 % குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமலே மூடி மறைக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! அதாவது நாளொன்றுக்கு 106 பேர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறினால் உண்மையில் நாளொன்றுக்கு  600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்று அர்த்தம். 
இவற்றுக்கு பலியானவர்கள் கற்பழிக்கப்பட்ட பின்னும் அவற்றின் விளைவுகளை வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளாமலே அனுபவித்து வருகிறார்கள். அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு வரும்போது வாழ்க்கையே வெறுத்த நிலையில் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். அவையும் காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை, மேற்கூறப்பட்ட அதே காரணங்களுக்காக!. இயற்கை மரணமாகவே ஊருக்கு மரணமாகவே அவை உறவினர்களால் ஊருக்கு அறிவிக்கப்படுகின்றன. என்ன ஒரு கொடுமை? 
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்று அர்த்தம்!
இறைவனின் நியாயத் தீர்ப்பு
யார் எவற்றை மறைத்தாலும் இறைவனிடம் இருந்து அவை மறைவதில்லை. அவை அனைத்தும் இறைவனிடம் பதிவாகின்றன. அவற்றிற்கு மறுமையில் மிகப் பக்குவமான முறையில் விசாரணையும் நீதி வழங்கலும் நடைபெற உள்ளன. இன்று cctv கேமராக்கள் முன்னால் யாரும் குற்றம் செய்ய முற்படுவதில்லை என்றறிவோம். ஆனால் நம் கண்களே நம்மைக் காட்டிக்கொடுக்கும் cctv ஆக மாறினால்...? ஆம், உண்மையும் அதுதானே!
= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?  அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7. 9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவர் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:6- 8
================ 

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக