இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

முதுமைக்குப் பின் இளமை திரும்புமா?

காலம் கடந்த பின்னே இளமை எப்படி திரும்ப வரும்? முதுமைக்குப் பின் மீண்டும் இளமை திரும்ப வழியுண்டா?
இவ்வுலகமே எல்லாம் ... நாம் வாழும்வரைதான் வாழ்க்கை... நாம் மரித்த பின் மண்ணோடு மண்ணாகி விட்டால் அத்தோடு முடிந்தது மனித வாழ்வு என்ற மூடநம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை இளமை திரும்புதல் என்பது சாத்தியமில்லைதான்! 
Image result for video iconஅப்படிப்பட்ட குறுகிய சிந்தை கொண்டவர்கள் இப்பேரண்டத்தின் பின்னால் உள்ள அதிபக்குவம் வாய்ந்த படைப்பாளனையும் அவனது திட்டங்களையும் சற்றும் சிந்திக்காது பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை தற்செயலானது...அர்த்தமற்றது.. நோக்கமற்றது என்று நினைக்கிறார்கள். அதனால் நீதி, நியாயம், நாணயம், நல்லொழுக்கம், குடும்ப அமைப்பு போன்றவைகளைப் பேணவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. வாழ்க்கையில் தோல்வி அல்லது இழப்பு அல்லது நிராசைகளை சந்திக்கும்போது தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.
படைத்தவனை உணர்ந்துகொண்ட நல்லோர்
-----------------------------------------------------------------------
மாறாக பகுத்தறிவு கொண்டு இப்பேரண்டத்தின் அமைப்பையும் அதில் நீர்க்குமிழி போல மின்னிமறையும் வாழ்க்கை கொண்ட அற்ப மனிதனின் நிலையையும் பற்றி சிந்திப்போர் இந்த தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சை எனவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமே என்பதை உணர்கிறார்கள். இதில் இறைவனின் ஏவல்-விலக்கல்களுக்கு ஏற்ப வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி வாழ்க்கை சாத்தியப்படும் , மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் அமர வாழ்வும் பரிசாகக் கிடைக்கும் என்பதில் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் வாழ்க்கையில் ஏற்ற- தாழ்வுகளை சந்திக்கும்போது தன்னம்பிக்கையோடு சமநிலை தவறாது எதிர்கொள்கிறார்கள். ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதையும் பூமியில் நன்மையை எவுவதையும் தீமைகளைக் களைவதையும் இறைவனிட்ட கட்டளைகளாக சிரமேற்கொண்டு பணிபுரிவார்கள்.
முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு நிரந்தர வாழ்வின் தொடக்கமே அது என்பதை அவர்கள் அறிவார்கள். அதுதான் உண்மையான பகுத்தறிவு! நாளை மறுமையில் நல்லோருக்குக்காக தயார்செய்யப்பட்டுள்ள சொர்க்கத்தில் அவர்கள் நுழையும்போது என்றும் மாறா இளமையோடு அவர்கள் நுழைவார்கள்!
ஏனெனில்..... மரணம் என்பதே இனி இல்லையல்லவா?
எது பகுத்தறிவு ?
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக