இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 அக்டோபர், 2018

ஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை!

ஒரே மூலத்தில் இருந்து ஒரே விதமான உடலமைப்போடு படைக்கப்பட்டுப் பல்கிப் பெருகிய  மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பிப்பதற்கு முக்கியமான காரணமாக இருப்பது படைத்த இறைவனைப்பற்றிய தவறான புரிதல்களே! படைத்த இறைவன் ஒருவனுக்கே தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை மக்கள் ஏற்காதவரை மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியமில்லை. அவ்வாறே படைத்தவனை மறுக்கும் நாத்திக மனப்பான்மையும் மனித சமத்துவத்துக்கு எதிரானதே 
என்பதை ஆராய்வோர் அறிய முடியும். !

வரலாற்றை ஆராயும்போது கீழ்கண்டவை நமக்கு புலனாகும்:
= மக்களின் அறியாமையை பயன்படுத்தி சில ஆட்சியாளர்கள் தங்களை தாங்களே கடவுளாக அறிவித்துக்கொண்டார்கள். இடைத்தரகர்களை ஏவிவிட்டு குடிமக்களின் உள்ளங்களிலும்,உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைக் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.
= இன்னும் சிலர் தாங்களே கடவுளுக்கு நெருக்கமான இனம் என்றும் தாங்கள் மூலமே இறைவனை அணுக முடியும் என்றும் கூறி தங்களை சாதாரண மக்களை விட மேன்மையானவர்கள் என்று  நம்ப வைத்தார்கள். ஆள்வோரையும் குடிமக்களையும் தங்களுக்குப் பணிய வைத்தார்கள்.
இஸ்லாம் வழங்கும் தீர்வுகள்
முதலில் மனிதன் மனிதனைக் கடவுளாக்கும் மடமையை இஸ்லாம் குறுக்கிட்டு மக்களைத் திருத்துகிறது. இறைவனைப் பற்றிய தவறான புரிதலைக் களைகிறது.
சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன். அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
அதாவது ஏகனாகிய இறைவன் ஏகன், தனித்தவன், தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தைமனைவிமக்கள் என எந்த உறவுகளும் இல்லாதவன். தன்னிகரற்றவன். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை மனித மனங்களில் விதைக்கிறது.
அதே போல படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
. = அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்று பொருள்)
இடைத்தரகர் தேவை இல்லை
அடுத்ததாக இறைவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை என்பதையும் தெளிவாகக் கூறுகிறது இஸ்லாம்.
=  (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)

இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம், நிறம், இடம், மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.

இனமேன்மை பாராட்டுவோருக்கு மறுப்பு:
தொடர்ந்து பிறப்பினால் மேன்மை பாராட்டுவோரின் வாதத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது இஸ்லாம்:
 மனிதர்களேநாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாகஅல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
இறைவனுக்கு தன் செயல்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வே இறையச்சம் என்று அறியப்படுகிறது. அதாவது அனைவரின் மூலமும் ஒன்றே என்பதையும் இறையச்சம் யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே இறைவனுக்கு நெருங்கியவர் என்று இறைவன் தெளிவுறக் கூறுகிறான்.
அத்துமீறல்களுக்கு தண்டனை
தொடர்ந்து தெளிவான மறுமைக் கோட்பாட்டைக் கற்பித்து நம் வினைகளுக்கு விசாரணை உண்டு என்ற உண்மையையும் கற்பித்து சக மனிதர்களின் உரிமைகளை ஏன் பேணவேண்டும் என்பதற்கான காரணத்தையும் கற்பிக்கிறது:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவதுஇவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.

ஓரிறைக் கொள்கையால் நடைமுறைக்கு வரும் ஒருமைப்பாடு
Image result for muslim congregational prayerபடைத்தவனான ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதிதாழ்ந்த ஜாதி,தாழ்த்தப்பட்டோர்தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்லஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன. இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால்இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் விலக்கி வைத்து அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.
 இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள்இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதிகீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!

நாத்திகம் எவ்வாறு சமத்துவத்துக்கு எதிரானது?
இறைவனின் பெயரால் கற்பிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு  எதிராகப் போராடியவர்கள் பலர் இவற்றுக்கான தீர்வு தேடி நாத்திக இயக்கங்களின் பால் புகலிடம் தேடினார்கள். ஆனால் அங்கும் தீண்டாமைக்குத் தீர்வு கிடையாது என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராய்வோர் உணரமுடியும்: 
1. நாத்திகம் இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் மறுமைக் கொள்கையையும் மறுப்பதால் மக்கள் தங்கள் செயல்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை இல்லாமல் ஆக்குகிறது. எனவே தீண்டாமை அல்லது பாகுபாடு கற்பித்தல் மூலம் ஆதாயம் அடைபவர்களைத் திருத்த வழியில்லை.
2. அனைத்து மனிதகுலமும் ஒரே ஆண்-பெண் ஜோடியில் இருந்து உருவானதே என்ற கூற்றை நாத்திகம் மறுகிறது. மாறாக வெவ்வேறு குரங்குகளில் இருந்து பரிணமித்தவர்களே மனிதர்கள் என்ற கருத்தைக் கற்பிப்பதால் இனம் நிறம் இடம் போன்ற பாகுபாடுகளுக்கும் தீண்டாமைக்கும் துணை போகிறது.

3. நாத்திகர்களிடம் ஒருங்கிணைந்த கொள்கை என்பது கிடையாது.   காரணம் ஒவ்வொரு தனிமனிதனும் என்ன நினைக்கிறானோ அதுதான் நாத்திகத்தின் அடிப்படை. ஏன் சமத்துவம் பேணவேண்டும் என்ற கேள்விக்கு நாத்திகத்திடம் பதில் கிடையாது. 
 4. தான்தோன்றித்தனம் ஒருபோதும் தனிநபர் நல்லோழுக்கத்திற்கான அடிப்படையோ சித்தாந்தமோ தரமுடியாது என்பது தெளிவு. மனிதன் ஒழுக்கம் பேணவேண்டும் அல்லது கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதற்கான ஊக்குவிக்கும் காரணி இயல்பிலேயே நாத்திகத்திடம் இல்லை!

--------------------------- 
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்?
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும் 
http://www.quranmalar.com/2018/09/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக