இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மரம் என்ற இறைவரம் காப்போம்!


கடுமையான வெயிலில் நடைபயணம் செய்து ஒதுங்க இடமில்லாது துடிக்கும் ஒரு பயணியிடம் கேட்டால்தான் மரநிழலின் அருமை என்னவென்று தெரியும். 
காடுகளில்
, வீடுகளில், தோட்டங்களில், சாலை ஓரங்களில், பூங்காக்களில் நின்றுகொண்டு அன்புப் புரட்சியையும் அமைதிப் புரட்சியையும் அழகாக நிகழ்த்திக் கொண்டிருப்பவை மரங்கள்; ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கும் கூட ஆறுதலும் அரவணைப்பும் தருவதே மரங்கள். 
மரங்கள் நிழலைத் தருகின்றன; மரங்கள் மழை மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கின்றன; மரங்கள் இருக்கும் இடத்துக்கு அழகூட்டுகின்றன. அனைத்துக்கும் மேலாக, மரங்கள் மனித இனம் உயிர் வாழத்தேவையான பிராண வாயு என்கிற ஆக்சிஜனை உற்பத்தி செய்து, மனித இனம் வெளியாக்கும் கரியமிலவாயுவை (கார்பன்-டை-ஆக்சைடை) உறிஞ்சி சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்துகின்றன.

செயல்படாமல் நிற்கும் மனிதர்களைப் பார்த்து "மரத்தை மாதிரி நிற்காதே!என்ற வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துவதை நாம் அடிக்கடி செவியுறுகிறோம். ஆனால் உண்மையில் அந்த வார்த்தைகளில் பொருள் இருக்கிறதா? மரம் என்றால் அது செயல்படாததா? ஒன்றுக்கும் பயனற்றதா? இப்படி மரத்தைக் கேவலமாக எடுத்தெறிந்து பேசுவது முறைதானா? உண்மையில் மரம் பயனற்றதா? மரம் என்றால் அது வெறும் கட்டை மட்டும்தானா?
மரங்களின் மறுபக்கம்
இந்தக் கேள்விகளை நாம் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு கேட்டுப் பார்த்தால் மரங்களின் மறுபக்கங்கள் நமக்குப் புரியவரும். இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் விலங்குகள், மனிதர்கள் போலவே, மரங்களுக்கும் உயிர் உண்டு என்கின்றன. சுவாசித்தல்,  உணவு உட்கொள்ளுதல், உணவை ருசித்தல், மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவை உண்டு என்பவை புலனாகின்றன
= மரங்கள் தம் வேர்களின் மூலம் பூமிக்கடியிலுள்ள மண்ணிலிருந்து உணவை உறிஞ்சிப் பெறுகின்றன. தாவரங்களின் இலைப்பகுதிகள் காற்றைச் சுவாசிக்கின்றன.
= நம் உடலில் இரத்தம் ஓடுவது போலவே, 'தாவரச் சாறு' (Sap -சாப்) என்னும் ஒருவகைச் சாறு மரங்களின் உடல்முழுவதும் வியாபித்துள்ளது. இந்தத் தாவரச் சாற்றை, மரத்தின் உயிரணுக்கள் மரத்தின் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றன.
= விலங்குகளால் மரங்களுக்கு ஏற்படும் காயங்களைத் மரங்களிலுள்ள ‘புண்திசு' (Layers of Wound Tissue - லேயர்ஸ் ஆஃப் வுண்ட் டிஷ்யூ) என்னும் அடுக்கு காக்கிறது.
மொத்தத்தில், மரங்களும் நம்மைப் போலவே வாழ்கின்றன என்பதே உண்மை! காலம் கடந்து அறிவியல் ஆராய்ச்சிகள் இவற்றை சொன்னாலும் இறைவன் மரங்களைப் பற்றி நமக்கு முன்னரே கூறியுள்ளான்:
= வானங்களிலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் பிராணிகளும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன் 22:18)
=  (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு சிரவணக்கம் செய்கின்றன.  (திருக்குர்ஆன் 55:6)

சுற்றுப்புற சூழலில் மரங்களின் பங்கு:
இயற்கை என்ற சொல்லைக் கேள்விப்படும் போதே நம் கண்முன் நிற்பது மரங்களே! அந்த இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரியும் பரஸ்பரம் ஒன்றோடொன்று இனணந்து செயற்படுகின்றது. மனிதனும் அவனது வாழ்வும் இந்த இயற்கையோடு பின்னிப் பினைக்கப்பட்டே காணப்படுகின்றது. அவனால் ஒரு கணப்பொழுதும் இதனை விட்டு விலகி வாழ முடியாது. நமது சுற்றுப்புற சூழல் பல இயற்கைச் சமநிலைகளால் இயங்குகிறது. ஆக்சிஜன் வட்டம், கார்பன் வட்டம்,  நைட்ரஜன் வட்டம் போன்றன இவற்றுள் சிலவாகும். உணவுச் சங்கிலி ஒழுங்கு, சக்தி வட்டம் என்பனவும் இயற்கையின் அற்புதங்களாகும் .இந்தக் கட்டமைப்பில் ஏற்படும் சிறியதொரு மாற்றமும் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நன்கு திட்டமிடப்பட்ட மிக நுணுக்கமான அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். சூழலின் பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக மனிதன் இருக்கிறான்.

பரீட்சைக்காகவே உலகம்
மனிதனே அனைத்துக்கும் மையமாக விளங்குகிறான். ஆம், அனைத்தையும் இறைவன் அவனுக்காகவே படைத்துள்ளான். ஆனால் இது தற்காலிகமான ஒன்று. காரணம் இந்த ஏற்பாட்டின் நோக்கம் அவனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே.
 = (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம். (திருக்குர்ஆன் 18:7, 8)
இந்த தற்காலிகப் பரீட்சைக்கூடம் ஒருநாள் முடிவுக்குக் கொண்டு வரப்படும். அதன்பின்னர் இறைவனின் கட்டளை வரும்போது மக்கள் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று மனிதர்கள் செய்த வினைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ விதிக்கப்படுவார்கள். அதுவே அவர்களின் நிரந்தர வாழ்விடமாக அமையும். சொர்க்கம் செல்ல முக்கியமாக நம்மைப்படைத்த இறைவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றியறிதலோடு வாழ்வதும் அவனுக்கு செய்நன்றி கொல்லாதிருப்பதும் ஆகும்.
= அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (திருக்குர்ஆன் 2:22) 


நன்றி:  நூ. ஜமீல் முஹம்மது
-----------------------------  
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக