ஒப்புவமையில்லா இறைவன் அற்ப ஜீவியான மனிதனோடு
உரையாடும் வாசகங்களே திருக்குர்ஆன் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக
கடலில் வாழும் மீனோடு கரையில் வாழும் நாம்
கருத்துப் பரிமாற நாடினால் அந்த மீனின் புரிதலுக்கு உட்பட்டவாறுதானே உரையாடுவோம்?
அதேபோல நம் புரிதலுக்கும் ஆய்வுக்கும் ஏற்றவாறு திருக்குர்ஆன் வசனங்கள்
அமைந்திருப்பதை நாம் காணலாம்.
மட்டுமல்ல மனிதன் என்பவன் நாளுக்கு நாள் அறிவு
வளர்ச்சி பெறுபவன் எனபதையும் அறிவோம். அன்று வாழ்ந்த பாலைவனத்து மக்களும் பூமியின்
பிறபகுதியில் வாழ்ந்த மக்களைப் போன்றே பூமி தட்டையானது என்றும் வானம் வீட்டின்
கூரை போன்ற ஒரு முகடு என்றே நம்பிக்கொண்டு இருந்தார்கள். காரணம் அறிவியல் அன்று
அவ்வளவே வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இன்று அறிவியல் வளரவளர வானம் என்றால்
விண்வெளி (space) என்றும் பூமியும் சூரியன் சந்திரன் போன்று கோளவடிவானது என்பதும்
இந்தப் பிரபஞ்சத்தின் விரிவும் விசாலமும் எல்லாம் தெளிவாகி வருகின்றன. அன்றைய பாமர மக்களுக்கும்
அதே போல இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்து மக்களுக்கும் பொருத்தமான வகையில்
அமைந்திருக்கும் அற்புதத்தை திருக்குர்ஆனின் வசனங்களில் நாம் காணலாம்.
= (நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன்
எவனோ அவனே அதை (குர்ஆனை) இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும்
இருக்கின்றான்” என்று கூறுவீராக!
(திருக்குர்ஆன்
25:6)
அறிவியல் கண்டறிந்த பிரபஞ்சத்தின் துவக்கம்
'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால்
கற்பனை செய்யமுடியுமா? இந்தக் கேள்வியே எவ்வளவு
அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும்? சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம்.
உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில்
இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள்
இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா? சென்னை, இந்தியாவில் இருக்கிறது.
இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும்
இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப்
பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள்
அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது.
பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது.
பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப்
பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச்
சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும்
இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள்
மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை
வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற
ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே
சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச்
செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க
முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே! பார்க்க முடியாது. பார்ப்பதற்கு
ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக்
கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய
முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம்
என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை
மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு
நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கற்பனை செய்து பார்க்கவே
முடியவில்லையல்லவா? ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை
உண்மையில் இருந்துதானிருக்கிறது என்கிறது அறிவியல்.
நாம் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கும் பேரண்டத்தின் துவக்கம்
அங்கிருந்துதான். அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி
இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வாறு மிகமிகச்சிறியதொரு
புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக
வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள
முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து
வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக
விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக
விரிவடைந்தது.
= (அன்றி) அவனே
வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக்
கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது
ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 2:117)
அறிவியல் ஆய்வுகளின் படி ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டங்களும் ஒரு குறிப்பிட்ட
கால அளவைக்குள் நடப்பதாக கண்டறியப்படுகின்றன. ஆனால் காலத்தையும் இடத்தையும்
படைத்தவன் இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவன். அவனைப் பொறுத்தவரையில் ‘ஆகு’ என்ற
ஒரு கட்டளை போதுமானது. (இதையே “வார்த்தை’ என்கிறது பைபிள்). அனைத்துப்
பக்குவங்களோடும் பின்னணிகளோடும் அது ஆகிவிடுகிறது.
பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:
= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்)
இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே
பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும்
நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்)
அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21:30)
தொடரும் பிரபஞ்ச விரிவாக்கம்
பெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத் தொடங்கிய பேரண்டம் இப்போதும்
விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார்.
தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்பட்ட
'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை
அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப்
பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி
ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில்
இருக்கும் காலக்ஸிகளும் விலகிச்
செல்கின்றன என்று கண்டுபிடித்தார்.
மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு
நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை
அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால
விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து
கொண்டார்கள்.
தொடரும் விரிவாக்கமும் அதிர்ச்சியும்
அண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி
வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த
அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது
பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட்
பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே
செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே
விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிப்பினால் ஏற்பட்ட
விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள்
நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின்
ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க
ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின்
நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த ஆச்சரியம்
நவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த
காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை
விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம்
அண்டத்தின் விரிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன்
பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு
விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு
நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை
விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை.
ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும்
புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன்
கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது.
விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று
சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று
காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக்
கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி
பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள்.
வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை
ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள்
தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து
வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து
வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக
இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர்
நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.
விண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும்
ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள்
சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தூரங்களை அளந்து
எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில்
மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில்
விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே
போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம்
படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா? அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல்
நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா? தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை
ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத்
திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி? எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது? 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து
வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை
வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே! இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம்? யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது.
பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்.
= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)
கரும்சக்தி மற்றும் கரும்பொருள்
அண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து
கொண்டேயிருக்கிறது. இந்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து
மீண்டும் குறைவடையுமா? அல்லது மேலும் மேலும் விரிவடைந்து
கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத்
தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து
உறைந்து போகுமா? எதுவும் தெரியவில்லை. இப்படி
விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள்.
= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே
தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை
இரண்டும் விலகுமாயின், அதற்குப்
பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன்
பொறுமையுடையவன்; மிக
மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’
என்பது பொருள்)
ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி
கூஷன் (Yushidi Kusan) அவர்களின்
கூற்று இங்கு கவனத்திற்குரியதே:
“குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான்
மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய
நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு
சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம்
குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான்
எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே
முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த
பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும்
என்று கருதுகிறேன்.
--------------------------------
இங்கு இடம்பெற்ற அழகிய தமிழ் அறிவியல் தகவல்கள் அண்ணன் ராஜ்சிவா அவர்களின் http://writerrajsiva.blogspot.in வலைத்தளத்தில் இருந்து
பெறப்பட்டவை. இறைவன் அவருக்கு அருள்வானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக