இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 மே, 2018

தீக்கிரையாக்கும் கொடூர நிகழ்வுகள் !


Related image
ஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
= தங்களைத் தாங்களே கடவுள் என்று அறிவித்துக்கொண்ட சில அரசர்கள் அவர்களை வணங்க மறுத்தவர்களையும் எதிர்த்தோரையும் இவ்வாறு தண்டித்தார்கள். சில அரசர்கள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வழிபாட்டு வந்த தெய்வங்களை வணங்க மறுத்தோரை இவ்வாறே தண்டித்தார்கள்.
= தங்களின் ஆணவத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் சதித்திட்டங்களுக்கும் எதிராக நின்றோரை தண்டிப்பதற்கும் பலவீனர்களை அல்லது நலிந்தோர்களை அச்சுறுத்தி அடக்குமுறை செய்வதற்கும்  சில ஆட்சியாளர்கள் இதைக் கையிலெடுத்தார்கள்.
= காலனி ஆதிக்க பயங்கரவாத சக்திகள் தங்களின் ஆயுதபலத்தால் அவர்கள் கைப்பற்றிய கண்டங்களில் அல்லது நாடுகளில் அங்கு வாழ்ந்த பூர்வ குடியினரை கூட்டம் கூட்டமாக இனம் இனமாக கொன்று குவித்தார்கள். அந்நாட்டு இயற்க்கை வளங்களையும் நிலத்தடி வளங்களையும் கொள்ளையடிப்பதற்காகவும் தங்கள் வெள்ளை இனத்தாரைக் குடியேற்றுவதற்காகவும் அப்பாவிகள் மீது பயன்படுத்திய தண்டனை முறைகளில் தீக்கிரையாக்குதலும் ஒன்று.
= காலனி ஆதிக்க சக்திகளின் மறு பரிணாமமான வல்லரசு ஏகாதிபத்திய சக்திகள் இன்று தங்கள் கைப்பாவை அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் மூலம் அவர்களை எதிர்த்தோரையும் விடுதலை வீரர்களையும் மனித உரிமைப் போராளிகளையும் தண்டிக்க கையாளும் முறைகளில் கொடுமையானது மக்களை தீக்கிரையாக்குதலே.
= இன்று அரசியல் கட்சிகளும் வகுப்புவாத சக்திகளும் எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் எச்சரிப்பதற்காகவும் இதைக் கையாள்கிறார்கள்.
அன்றைய காலத்தில் வலுவான தீக்குண்டங்களை உருவாக்கி அதில் அப்பாவிகளை அவற்றில் எறிந்து எரித்துக் கொன்றார்கள். இன்று அப்பாவி மக்களை அவர்கள் வாழும் குடிசைகளுக்குள் வைத்து உயிரோடு கொழுத்துகிறார்கள். அல்லது அவர்கள் வாழும் சேரிப்பகுதிகளை சுற்றிவளைத்து அவற்றை தீக்கிரையாக்குகிறார்கள்.
இறைவன் ஏன் இவற்றைத் தடுப்பதில்லை? 
ஒரு மனிதனை தீயிட்டுக் கொழுத்துவதுதான் வேதனைகளிலேயே மிகப்பெரிய வேதனை. அதுவும் ஒரு அப்பாவி இவ்வாறு அவன் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படும்போது இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் இறைவன் ஏன் அதைத் தடுக்காமல் நின்று வேடிக்கை பார்க்கிறான்? இக்கேள்வி பெரும்பாலான மக்களுக்குள் எழுவது இயல்பே.
உண்மையில் அணு முதல் அண்டசராசரங்கள் வரை அனைத்தையும் அதிபக்குவமாகப் படைத்து அற்புதமான முறையில் இயக்கி வரும் இறைவன் நாடினால் இக்கொடுமைகளை நடக்கும் முன்னரே தடுக்க முடியும். ஆனால் இவ்வுலகைப் படைத்தவன் இந்தக் குறுகிய நம் வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான் என்ற உண்மையை நாம் உணரும்போது இக்கேள்வி பற்றிய தெளிவு ஏற்படும்.
ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை என்ற கேள்விக்கு  இறைவனே தன் திருமறையில் பதில் கூறுகிறான்:
= மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை இறைவன் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டுவைக்க மாட்டான்மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான்அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம்  பிந்தவும் மாட்டார்கள்முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
இயேசுவைப் பின்பற்றியோருக்கு வந்த சோதனை!
திருமறைக் குர்ஆனின் 85 –வது அத்தியாயம் ஓரிறைக் கொள்கைவாதிகள் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வை மையமாகக் கொண்டுள்ளது. நபிகளாரின் வருகைக்கு முன்னர் வந்த இறைத்தூதர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்ந்த மக்களுக்கு நேர்ந்த சம்பவம் அது.  இயேசு கிறிஸ்து (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) போதித்த ஏக இறைக்கொள்கையை பலமாகப் பின்பற்றி வாழ்ந்தார்கள் நஜ்ரான் தேசத்து மக்கள்.  கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் அந்த நஜ்ரான் வாசிகள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக இயேசுவின் மார்க்கத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான்.
இது போன்று கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களோடும் இன்று நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களோடும் இனி எதிர்காலங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்களோடும் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அமைந்துள்ளன இந்த அத்தியாயத்தின் வசனங்கள்.
“ஒ கொடுங்கோலர்களே, அக்கிரமக்காரர்களே, ஆதிக்கசக்திகளே, அகங்காரிகளே நீங்கள் இந்த பூமியின்மீது  நிகழ்த்திய அக்கிரமங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்கத்தான் போகிறீர்கள். நீங்கள் நிகழ்த்திய கொடுமைகளுக்கான எதிர்வினையை உங்கள் வாழ்நாளில் அனுபவிக்காமலே தப்பித்திருக்கக்கூடும். ஆனால் நீதிமானான இறைவனின் நீதிமன்றம் மறுமையில் கூட இருக்கிறது. அதுவே இறுதித்தீர்ப்பு நாள்! அது உறுதியான ஒன்று. இன்று வானங்களையும் பூமியையும் எவ்வாறு உறுதியாகக் காண்கிறீர்களோ அதைவிட உறுதியான – தவிர்க்க முடியாத -நிகழ்வுதான் மறுமை விசாரணை என்பது. அந்நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பபட்டு நீங்கள் விசாரிக்கப்பட உள்ளீர்கள்.” எனும் எச்சரிக்கையை பலமாக முன்வைக்கின்றன அவை:
85:1உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
அக்கிரமக்காரர்கள் தாங்கள் நிகழ்த்திய அல்லது நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு சாட்சிகள் காலப்போக்கில் அழிந்து போகலாம் அல்லது பலவந்தமாக அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் மறுமை நாளன்று அவை அனைத்துமே உயிர்பெற்று வர உள்ளன.
சாட்சிகளுக்குப் பஞ்சமில்லை
சற்று சிந்தித்தாலே உண்மை விளங்கும். பூமியானது தனது அச்சின் மீது தன்னைத்தானே சுழன்று கொண்டு சூரியனை சுற்றி வருவதும் சூரியன் தன் குடும்பத்தோடு அது சார்ந்த பால்வெளி அண்டத்தின் மையத்தை சுற்றி வருவதும் நாமறிந்தவையே. இவ்வாறான நம் பயணப் பாதையில் – விண்வெளியில் நாம் கடந்து செல்லும் பாதையில் ஆயினும் சரி, பூமியில் நம் இருப்பிடங்களில் ஆயினும் சரி  - நமது  உடல் வெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்கள் (infrared rays) போன்றவையும்  நாம் வெளிப்படுத்திய ஒலி, ஒளி, வாசம் போன்றவை மூலம் உண்டான மின்காந்த அலைகளும் (electromagnetic waves) அவற்றிற்குரிய பதிவை அக்கம்பக்கத்தில் ஏற்படுத்தாமல் செல்வதில்லை என்று அறிவியல் கூறுகிறது. மேலும் மனித மூளை நமது செயல்களை இடையறாது பதிவு செய்கிறது என்பதை நாம் அனுபவபூர்வமாகவே அறிவோம். ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு  சொல்லித் தருகிறது. இன்று நாம் காணும் cctv கேமராக்களை விட பன்மடங்கு உயர்வான தொழில்நுட்பத்தைக் கொண்டவை நமது கண்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
அக்கிரமக்காரனே முதல் சாட்சி 
இவ்வாறு எந்த ஒரு அக்கிரமம் நிகழ்ந்தாலும் அதற்கு முதல் சாட்சியாக அதை நிகழ்த்துபவனே திகழ்கிறான். அடுத்து அக்கிரமத்திற்கு உள்ளாபவர்களும் சுற்றுப்புறங்களும் பூமியும் விண்வெளியும் சாட்சிகளாக நிற்கின்றன. அழிக்கமுடியாத அனைத்துவிதமான சாட்சிகள் மீதும் சத்தியம் செய்து நெருப்புக்குண்டத்தார் சபிக்கப்பட்டு விட்டனர் என்கிறான் இறைவன்.
தொடர்ந்து அந்த நெருப்புக் குண்டத்தைப் பற்றியும் அந்த காட்சியையும் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
85:5. (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.,
85:6,7  அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
ஆம், எந்தக் கண்களைக் கொண்டு அக்காட்சியை இரசித்துக் கொண்டிருந்தார்களோ அந்தக் கண்களே அவர்கள் நிகழ்த்தும் கொடுமைக்கு மறுமையில் சாட்சிகூற உள்ளன என்ற உண்மையை உணராமலேயே அன்று இருந்தார்கள்!
எதற்காக தண்டித்தார்கள்?
85:8. அந்த இறைநம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!
85:9. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் ‘வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் மட்டுமே எங்கள் வணக்கத்திற்குரியவன், அவனல்லாது எதையும் எவரையும் நாங்கள் வணங்கமாட்டோம் என்ற ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்ததனால்தான் அந்த அப்பாவிகள் தீக்குண்டத்தில் எறியப்பட்டார்கள். இந்த ஓரிறைக் கொள்கை எதனால் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஆம், ஓரிறைக் கொள்கை என்பது மனிதனை இனம், இடம், நிறம், மொழி போன்றவற்றின் பெயரால் கற்பிக்கப்படும் அடிமைத்தளைகளில் இருந்தும் வரம்புகளில் இருந்தும் விடுவித்து பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும்  அவனை சுயமரியாதை உள்ளவனாகவும் ஆக்குகிறது. இந்த வரம்புகளுக்கப்பால் சகமனிதனை சகோதரனாகவும் சமமானவனாகவும் பார்க்கும் பண்பை அவனுக்குள் உண்டாக்கி விடுகிறது. இக்கொள்கை சுயமரியாதை உணர்வைத் தூண்டுவதால் மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கு எதிராக அணிதிரள்வார்கள் என்று ஆதிக்க சக்திகள் அஞ்சுகிறார்கள். இறைவனை இடைத்தரகர் இன்றி நேரடியாக வணங்கச் சொல்வதால் கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளைப் பரப்பி குடிமக்களைச் சுரண்டும்  இடைத்தரகர்களும் ஆதிக்க வர்க்கத்தினரும் அச்சம் அடைகிறார்கள். எனவே தங்கள் ஆதிக்கத்திற்கு வேட்டு வைக்கும் இந்த ஓரிறைக் கொள்கை மக்களிடையே பரவாமல் தடுக்க அதை ஏற்றுக்கொண்ட மக்களை அடியோடு துடைத்தெறிவதே ஒரே வழி என்று கருதினார்கள் அவர்கள். அதனால்தான் இந்தக் கொடூர தண்டனை!
இஸ்லாம் சந்தித்துவரும் ஓயாத தாக்குதல்கள்
இன்றும் உலகெங்கும் இஸ்லாமியர்கள் ஒன்றன்பின் ஒன்றாக  தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகி வருவதை அறிவீர்கள். சமீபத்திய உதாரணம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்.  இவற்றுக்குக் காரணம் இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதனால்தான். ஒன்றே மனிதகுலம், ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நமது மீளுதலும் விசாரணையும் உள்ளது, மறுமையில் சொர்க்கமும் நரகமும் உள்ளன என்பனவற்றை  இஸ்லாம் அடிப்படையாக போதித்து மக்களை இறையச்சம் உள்ளவர்களாக ஆக்குகிறது.
எங்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அதர்மத்திற்கு எதிராக மக்களை விழித்தெழச் செய்கிறது.   உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு வழிநடத்துகிறது. நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
 இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள்.   இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள் நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
அக்கிரமக்காரர்களுக்கு இறைவனின் எச்சரிக்கை
இதுவரை அப்ப்பாவிகள் மீது நடந்த அத்துமீறல்களுக்கும் சரி, தற்போது நடந்து கொண்டிருக்கின்றவற்றிற்கும் சரி, இனி எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற அத்துமீறல்களுக்கும் சரி கண்டிப்பாக இறைவனின் விசாரணையும் தண்டனையும் நிறைவேற உள்ளது  என்பதை எச்சரிக்கின்றது அடுத்த வசனம்:
85:10. இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
தொடரும் வசனங்கள் இறைநம்பிக்கை கொண்ட நன்மக்களுக்கு தன்னம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. நீர்க்குமிழி போல மின்னி மறையும் இந்தக் குறுகிய பரீட்சை வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும்  சித்திரவதைகளும்  உயிர் மற்றும் உடமைகளின் இழப்புகளும் தற்காலிகமானவையே.. சர்வவல்லமை கொண்ட இறைவனின் கண்காணிப்பின் கீழேயே அவை அனைத்தும் நடைபெறுகின்றன. அவையில் எதுவும் வீண்போவதில்லை. மாறாக  இறுதித்தீர்ப்பு நாளன்று அவை ஒப்பிலா வெகுமதிகளை பெற்றுத்தர உள்ளன. நித்திய வாழ்வும்  நிரந்தர இன்பங்கள் கொண்ட சுவனங்களும் அவர்களுக்கு பரிசாகக் காத்திருக்கின்றன என்ற உண்மைகளை நினைவூட்டுகின்றன:
85:11. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
85:12உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.
85:13திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.
85:14மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:15,16. . அர்ஷின் (அனைத்துலகங்களின் ஆட்சிபீடத்தின்) உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும், தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.
------------------------
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

அநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்

http://quranmalar.blogspot.com/2016/11/blog-post_30.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக