இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 நவம்பர், 2017

தாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்


இறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்? கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தின் காரணமாக எவ்வளவு உண்மைகளை அவர்கள் மறுக்கவேண்டி உள்ளது பாருங்கள்! உயிரின் உருவாக்கம், உயிரினங்களோடு பின்னிப்பிணைந்து காணும் உணர்வுகள், அன்பு, பாசம், கோபம் போன்ற பலவற்றுக்கும் காரணம் கற்பிக்க எவ்வளவு அறிவுக்குப் பொருந்தாத ஊகங்களை கற்பனை செய்து புனைய வேண்டி உள்ளது அவர்களுக்கு!   
ஒரு மனிதத் தாய் தன் குழந்தையோடு காட்டும் பாசமாயினும் சரி ஒரு தாய் மிருகம் அல்லது பறவை தன் குஞ்சோடு காட்டும் பாசமாயினும் சரி நாத்திகக் கண்ணோட்டப்படி புதிர் மிக்கது. ஒரு பழுவான, தொடர்ந்து இடையறாது தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு வஸ்துவை பலகாலம் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த யாராயினும் அது வெளியில் வந்ததும் அதனை தூரமாக வீசிஎறிந்துவிட்டு வேறு வேலை பார்க்கவே விரும்புவார்கள். ஆனால் பிறப்பு என்று வரும்போது அங்கு நடப்பது நேர் முரணானது! தாய் ஜீவி தன் வயிற்றிலிருந்து வெளிவந்த அந்த வஸ்துவை வாரி அரவணைக்கிறது! பாதுகாத்துப் பரிபாலிக்கிறது! இவ்வாறு தன் குஞ்சின் மீது காட்டப்படும் பாசத்தை அந்த தாய்க்குள் யார் விதைத்தது? இந்தத் தாய்ப்பாசம் மட்டும் தாய்க்குள் விதைக்கப் படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு தாயும் தன் குஞ்சை வீசியெறிந்து விட்டு அதைவிட்டும் அகன்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? இனப்பெருக்கம் ஆரம்பம் முதலே தடைபெற்றிருக்கும்!
உலகம் உருவானதும் தற்செயல், அதில் உயிரின் உருவாக்கமும் தற்செயல், உயிர்களிடையே விதைக்கப்பட்டுள்ள தாய்ப்பாசமும் தற்செயல் என்பன போன்ற அறிவுக்குப் பொருந்தாத வாதங்களுக்கு எப்படித்தான் இவர்கள் பகுத்தறிவுச் சாயம் பூசுகிறார்களோ தெரியவில்லை!
இறைவன் விதைத்ததே தாய்ப்பாசம்
ஆம், இறைவனின் உள்ளமையையும் தன் படைப்பினங்கள் மீது அவன் கொண்ட அளவிலாக் கருணையையும் பறைசாற்றுவதாக தாய்ப்பாசம் விளங்குகிறது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய நம் இறைவனின் கருணையின் வெளிப்பாடே தாய்ப்பாசம் என்பது. இறைவன் விதைத்ததே தாய்ப்பாசம் என்பது.
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 இறைவன் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
இதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5311 )

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை மனிதன், ஜின்,மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி5312) 

 = இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 16:18)
 = என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 39:53)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக