இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

திடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்

Image result for wealth and abundance
செல்வம் அல்லது பொருள் என்பது இறைவனுக்கு சொந்தமானது. தற்காலிகமான, குறுகிய இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகத்தை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் அமைத்துள்ள இறைவன் தான் விரும்பியவாறு இந்த பரீட்சையை நடத்துகிறான்.  இதில் வெல்வோருக்கு மறுமையில் சொர்க்க வாழ்வும் வெற்றிப் பாக்கியங்களும் காத்திருக்கின்றன. தோல்வியுறுவோருக்கு இறைவன் புறத்தில் இருந்து தண்டனைகளும் நரக வேதனைகளும் காத்திருக்கின்றன.
அன்றாடம் வாழ்வில் நாம் பல திடீர் பணக்காரர்களைக் காண்பதுண்டு. செல்வம் வரும்போது அவர்களின் குணமும் பிறரோடு உள்ள அணுகுமுறைகளும் மாறுவதை நாம் காண முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உருவான ஒரு திடீர் பணக்காரரைப் பற்றிய சம்பவத்தை திருக்குர்ஆன்  விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்கள். (அது வருமாறு:)
ஸஅலபா பின் ஹாத்திப்
-----------------------------------
அன்சாரிகளில் ஒருவரான ஸஅலபா பின் ஹாத்திப் என்பார் தொடர்பாகவே திருக்குர்ஆனின் வசனங்கள் 9: 75 - 77  அருளப்பெற்றது என்றே பெரும்பாலான விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்
அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், “(இறைத்தூதரே!) இறைவன் எனக்குச் செல்வத்தை வழங்க வேண்டுமென அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “ஸஅலபா! உமக்குக் கேடுதான்! உம்மால் நன்றி செலுத்த முடிகின்ற அளவுக்கு நீர் குறைவான செல்வத்தைப் பெற்றிருப்பதே, நீர் நன்றி செலுத்த இயலாத அளவுக்கு அதிகமான செல்வத்தைப் பெற்றிருப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
அவர் மற்றொரு முறையும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹ்வின் நபியைப் போன்று (குறைந்த செல்வம் உடையவராக) இருக்க விரும்பவில்லையா? என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது ஆணையாக! இந்த மலைகள் வெள்ளியாகவும் பொன்னாகவும் (மாறி) என்னுடன் வர வேண்டும் என்று நான் நினைத்தால் கண்டிப்பாக அவ்வாறே வந்துவிடும்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர், “உங்களை உண்மையுடன் அனுப்பிய (இறை)வன் மீது சத்தியமாக! நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து இறைவன் எனக்குச் செல்வம் வழங்கினால், நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயமாக வழங்கிவிடுவேன்” என்றார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! ஸஅலபாவுக்குச் செல்வத்தை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பல்கிப் பெருகிய ஆடு
---------------------------------
பின்னர் அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். அந்த ஆடு, புழுக்கள் பல்கிப் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகியது. எனவே, அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றியது. எனவே, அங்கிருந்து நகன்று, மதீனாவின் (புறநகரிலுள்ள) பள்ளத்தாக்குகளில் ஒன்றில் வசித்தார்.
இஸ்லாத்தில் ஐவேளைத் தொழுகை என்பது கட்டாயக் கடமை. ஆனால் ஸஅலபா நாளடைவில் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளுக்கு மட்டுமே (மதீனாவுக்குச் சென்று) கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுவிட்டு, மற்ற தொழுகைகளைக் கைவிடலானார்.
அதன் பின்னரும் அந்த ஆட்டு மந்தை பல்கிப் பெருக, அந்த இடத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். அதன் விளைவாக, வாரம் ஒருமுறை தொழப்படும் கூட்டுத் தொழுகையான ஜுமுஆ தொழுகையைத் தவிர மற்ற கடமையான தொழுகைகள் அனைத்தையும் கைவிடும் நிலைக்கு ஸஅலபா ஆளானார்.
அந்த ஆட்டு மந்தை இன்னும் அதிகமாகப் புழுக்கள் பெருகுவதைப் போன்று பல்கிப் பெருகவே, இறுதியில் ஜுமுஆ தொழுகையைக்கூடக் கைவிட்டுவிட்டார். வெள்ளிக்கிழமையன்று, (மதீனாவின்) தகவல்களை விசாரிப்பதற்காக (அங்கிருந்து வரக்கூடிய) பயணக் கூட்டத்தாரை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார்.
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் ஓர் ஆட்டைப் பெற்றார். (அது பல்கிப் பெருகி பெரிய மந்தையாகவே) அவருக்கு மதீனா நெருக்கடியாகத் தோன்றிற்று” என அவர் தொடர்பான தகவல்களைத் தெரிவித்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று கூறினார்கள்.


ஜகாத் எனும் கட்டாய தர்மம் கடமையாக்கப்படுதல்
அதையடுத்து வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், “(நபியே!) அவர்களின் செல்வங்களிலிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக” (9:103) எனும் வசனத்தை அருளினான். கட்டாய தர்மம் தொடர்பான சட்டதிட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றன.
எனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய (கட்டாய தர்மமாகிய) ஸகாத் பொருட்களைத் திரட்டுவதற்காக இரண்டு பேரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஸ்லிம்களிடமிருந்து தர்மப் பொருட்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் எனும் விவரத்தை அவ்விருவருக்கும் எழுதிக் கொடுத்தார்கள்.
அவ்விருவரிடமும், “நீங்கள் இருவரும் ஸஅலபாவிடமும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த இன்ன மனிதரிடமும் சென்று அவ்விருவரும் தருகின்ற தர்மப் பொருட்களைப் பெற்று வாருங்கள்” என்று கூறினார்கள்.
ஸகாத்தா? அப்படியென்றால்...?
-----------------------------------------------------
அவ்விருவரும் புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, அவர் வழங்க வேண்டிய (கட்டாய) தர்மத்தை வழங்குமாறு அவரிடம் கோரினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை அவரிடம் படித்தும் காட்டினர்.
அதற்கு ஸஅலபா, “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம்தான் இது; இது எனக்கு என்னவென்றே தெரியாது; எனவே, நீங்கள் (இப்போது) போய்விட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பிறகு வாருங்கள் (பார்க்கலாம்)” என்று கூறினார். எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர்.
பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்தவரோ (ஸகாத் பொருட்களை வசூல் செய்வதற்காக) அவ்விருவரும் வந்துள்ளனர் என்று கேள்விப்பட்டு, தம் ஒட்டகங்களில் விலைமதிப்புள்ள தரமான ஒட்டகத்தைத் தேடிக் கண்டு பிடித்து, அதைத் தர்மம் வழங்குவதற்காகத் தனியாகப் பிடித்து, அவ்விருவரும் இருந்த இடத்திற்குத் தாமாகவே அழைத்துச் சென்றார்.
அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைக் கண்டபோது, “இவ்வளவு உயர்ந்த ஒட்டகத்தை நீர் செலுத்த வேண்டியதில்லை; உம்மிடமிருந்து இதை வசூலிப்பதும் எங்கள் திட்டமன்று” என்று கூறினர்.
அதற்கு அவர், “பரவாயில்லை; இதையே பெற்றுக்கொள்ளுங்கள்; இதை நான் மனமுவந்தே கொடுக்கிறேன்” என்றார். அவ்விருவரும் அந்த ஒட்டகத்தைப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய தர்மப் பொருட்களையெல்லாம் வசூல் செய்துவிட்டுப் பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம் சென்றனர். அப்போது ஸஅலபா, “நீங்கள் கொண்டுவந்துள்ள ஏட்டைக் கொடுங்கள், பார்க்கிறேன்” என்று கூறி, அதை (வாங்கி)ப் படித்தார்.
பின்னர், “கண்டிப்பாக இது ஒரு வரிதான்; வரியின் இன்னொரு வடிவம் தான் இது; எனவே, நீங்கள் சென்று வாருங்கள்; நான் யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கிறேன்” என்றார்.
ஸஅலபாவுக்குக் கேடுதான்!
--------------------------------------------
அவ்விருவரும் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவ்விருவரிடமும் பேச்சுக் கொடுப்பதற்கு முன்னர், “ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே!” என்று நபியவர்கள் கூறினார்கள். பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழருக்கு அருள் வளம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
பின்னர் அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் ஸஅலபாவின் நடவடிக்கையையும் பனூ சுலைம் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபித்தோழரின் நடவடிக்கையையும் தெரிவித்தனர்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்,  கீழ்கண்ட மூன்று வசனங்களை (75-77) அருளினான்


9: 75. அவர்களில் சிலர், “இறைவன்தனது அருளை எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நிச்சயமாகத் தானதர்மம் செய்வோம்; நிச்சயமாக நல்லோராகவும் திகழ்வோம் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி அளித்தனர்.
9:76. அவர்களுக்கு இறைவன் தனது அருளை வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் அலட்சியம் செய்து பின்வாங்கிவிட்டனர்.
9: 77. அவர்கள் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள்வரை அவர்களின் உள்ளங்களில் (குடிகொண்டிருக்கும்) நயவஞ்சகத்தையே அவர்களுக்குத் தண்டனையாக இறைவன் வழங்கினான். அல்லாஹ்விடம் அவர்கள் அந்த உறுதிமொழிக்கு அவர்கள் மாறு செய்ததும் அவர்கள் பொய்யுரைத்துக்கொண்டிருந்ததுமே இதற்குக் காரணமாகும்.
அந்த ஸஅலபா அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார். இறைவன் மேற்படி இவ்வுலகில் அதற்கான தண்டனை அனுபவித்தாரா இல்லை இறுதி காலத்தில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினாரா என்பது பற்றிய விவரங்கள் மேற்படிக் குறிப்புகளில் இருந்து கிடைப்பதில்லை.
ஆனாலும் இறைவன் செல்வம் வழங்கும்போது அதை முறைப்படி கையாளாதவர்கள் உள்ளங்களில் நயவஞ்சமும் கஞ்சத்தனமும் நுழைகின்றன என்பது மேற்படி வசனங்களில் இருந்து நாம் பெறும் பாடமாகும். இறைவனின் நீதி விசாரணைப்படி இம்மைyயில் இல்லாவிட்டாலும் மறுமையில் அதற்கு உரிய தண்டனைகளை அவர்கள் அடைவார்கள் என்பது மட்டும் உறுதியான ஒன்று

நன்றி: தப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் - கான் பாக்கவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக