இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 மே, 2016

திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்

திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் குர்ஆனில் இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அவனது வாழ்வின் நோக்கம், மனிதனுடைய வாழ்வில் அவன் கடந்து செல்ல இருக்கின்ற கட்டங்கள் இறுதி விசாரணை, மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் என  மனிதனுக்கு தொடர்புடைய விடயங்களை இறைவன் நாடிய விதத்தில் தனது தூதர் மூலமாகத் தெரிவித்துள்ளான். மனிதர்கள் இயற்றிய மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆன் ஒரு தனித் தரத்தில் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதை இயற்றியவனுக்கும் வாசகர்களுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.
ஆசிரியரின் தன்மைகள்
திருக்குர்ஆனை இயற்றியவன் எப்படிப்பட்டவன்? திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் பல்வேறு இடங்களில் இறைவன் தன் தன்மைகளைக் குறிப்பிடுகிறான். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்:
= 2:255. அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
= 3:6. . அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
வாசகர்களின் உண்மை நிலையும் அறிவும்
திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.
= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= நமது அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை.

அறிவியலின் உண்மை நிலை
= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அறிவியலின் சக்திவாய்ந்த உபகரணங்கள் ஒரு  எல்லைவரைதான்  சென்றடைய சக்தியுள்ளவை என்பதை அறிவோம். அவற்றிற்கு அப்பால் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் பகுத்தறிய முடியுமே தவிர முழுமையாக  அறிவேன் என்ற வாதத்தை எந்த மனிதரும் முன்வைக்க முடியாது. அதே போல இவ்வுலகத்தில் அனைத்தையும் முழுமையாக அறிவோம் என்று எந்த மனிதர்களும் அல்லது மனிதர்களின் குழுக்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறமுடியாது. அவ்வாறு யாராவது கூறினால் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அது பொய் என்பதும் அறியாமையின் வெளிப்பாடு என்பதும் தெளிவு! நாம் பெறும் அறிவின் வரையறை குறித்து மேலே எடுத்தாளப்பட்டுள்ள திருக்குர்ஆன் (2:255) வசனத்தில் இறைவன் கூறுவதைக் காணலாம்:
“....(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;....”  

= அறிவியல் அவ்வாறு தன் எல்லைக்கு உட்படாதவற்றை அறியாதது என்று ஒப்புக்கொண்டு அவற்றை கரும் சக்தி (black /dark energy என்றும் கரும் பொருள் (black /dark matter) என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அறிவியலின் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் சுமார் 96 % இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்துள்ளன. ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.
ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:
குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.
ஆக, நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை நேர்மையான பகுத்தறிவாளர்கள் உணர்வார்கள். அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுவது அந்த இறைவனைத்தான்.

 எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்த உண்மைகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தனது பலவீனத்தையும்  அற்பநிலையையும் உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் கருதுவோரை அகங்காரமே ஆட்கொள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் திருக்குர்ஆனை அணுகும்போது அந்த இறை அருட்கொடையில் இருந்து பயன்பெறுவதில்லை. படைத்தவனின் வழிகாட்டுதலை மறுப்பதால் இவர்கள் வாழ்க்கை என்ற பரீட்சையில் வெற்றி பெறுவதில்லை!
= அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6: 21)

= எவன் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்?  நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.” [திருக்குர்ஆன் 6:157]
==================== 

அற்பமான மனிதனும் ஒப்புவமை இல்லா இறைவனும்

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும் http://quranmalar.blogspot.com/2012/09/100.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக