ஒருநாட்டின் பழங்குடிகளை
ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து அங்கே பிழைத்தவர்களை அடிமைப்படுத்தி அந்நாட்டின்
வளங்களை கையகப்படுத்தி அங்கு ஓர் வல்லரசை நிறுவிய கொடியோர்கள் எப்படி சமாதானப்
பிரியர்கள் ஆக முடியும்? ஆயுதபலம் அவர்களிடம் மிகைத்திருக்கிறது என்பதற்காக
அவர்கள் சொல்வதே நீதி என்று ஏற்கமுடியுமா?
ஆம், அதுதான் இன்று
நடந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் ஆணிவேராக விளங்கும் அமெரிக்காவும்
அவர்களின் கூட்டாளிகளும் யாரை தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை
குத்துகிறதோ அதை அப்படியே ஏற்கிறது உலகம்! ஹிரோஷிமா நகரம் மீது
அணுகுண்டை வீசி தலைமுறைகளை நாசம் செய்த கொடுமைக்கு
நிகரான பயங்கரவாத செயலை இதுவரை உலகம் கண்டதில்லை. ஆனால் அதை நிகழ்த்தியவர்களை உலகம் பயங்கரவாதிகள் என்று
அழைப்பதில்லை..... காரணம் அவர்களின் ஆதிக்க வலிமை! ஊடக வலிமை!
உலகை ஆண்டுவரும்
மறைமுக காலனி ஆதிக்கம்!
= காலனி ஆதிக்கம் மூலம் நாடுகளை கொள்ளையடித்து ஆதிக்கம்
செய்தவர்கள் இன்றும் அந்த நாடுகளை தங்கள் கையாட்களையும் கைப்பாவை அரசர்களையும்
வைத்துக்கொண்டு உலகை ஆண்டு வருகிறார்கள் என்பதே உண்மை! அந்நாட்டு வளங்களை
தொடர்ந்து கொள்ளையடிக்கும் விதமாக வணிக ஒப்பந்தங்களை தந்திரமாக வகுத்து நிறைவேற்றி
வருகின்றனர்.
அமெரிக்க உளவு நிறுவனமான FBI -யில்
முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற John
Perkins தான் எழுதிய
Confessions of an Economic Hitman என்ற புத்தகத்தில் அவர் தன்னுடைய பணிகாலத்தில் எப்படி தன்னுடைய
மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் உலக அளவில் செய்ததாக வாக்குமூலம்
அளித்திருக்கிறார். நலிந்த நாடுகளின்
கட்டுமானப்பணிகளுக்கு பெருமளவில் கடன் வழங்கி அவைகளை கொத்தடிமைகள் போல் ஆக்கி
அவர்களின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்தல்,
அமெரிக்காவின் இராணுவதளம் அமைத்தல், ஐநாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஓட்டு
போட வைத்தல், நிர்பந்தத்திற்கு வழங்காத
ஆட்சியாளர்களை இராணுவப் புரட்சி மூலம் அகற்றுதல் அல்லது தீர்த்துக் கட்டுதல் போன்ற
சதி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஜான் கூறுகிறார்.
அகிலத்தை
அச்சுறுத்தும் ஆயுத ஆதிக்கம்
உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற
இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும்
இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய
வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை
அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு
அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுதங்களின்
செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காக ஐந்து வருடங்களுக்கு
இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில்
மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும்
ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும்
மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும்
தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை
நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை
பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள்!
காரணம்... ஊடக வலிமை!
தோற்றுப் போகும்
எதிர் சக்திகள்!
தட்டிக்கேட்கவும்
தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம்
செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன! (உதாரணம்: ரஷ்யாவின்
தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)
ஆனால் ஒரே ஒரு
சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது.
சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்சிகளுக்கும்
அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது! உலகில் அநியாயங்களை
அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது! அது இனம் சார்ந்ததல்ல,
மாறாக மனம் சார்ந்தது! மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே
அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது! ஆம், அதுதான் இஸ்லாம்!
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள்
கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி
என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம்
மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும்
தத்துவமாகும். அதாவது இறைவன்
கற்பிக்கும் ஏவல்
விலக்கல்களை பேணி வாழும்போது உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம்!
உதாரணமாக கொலை,
கொள்ளை, விபச்சாரம், மது, சூதாட்டம், மூடநம்பிக்கைகள், தீண்டாமை, மனித உரிமை
மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி அங்கு தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும்
பேணக்கூடிய, தீமைகளில் இருந்து விலகி வாழக்கூடிய, இன, நிற, மொழி, நாடு போன்ற
வேற்றுமைகளைக் கடந்து மனித சமத்துவம்,
சகோதரத்துவம் பேணக்கூடிய, பரஸ்பர அன்பு, தியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள்
அமைந்த சமூகம் உருவானால் இவ்வுலகமே அமைதிப் பூங்காவாகாதா? ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது
கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப
சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில்
விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம்
விழைகிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர்
மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து,
அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச்
செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
இஸ்லாம் ஏன்
எதிர்ப்புக்குள்ளாகிறது?
= இஸ்லாம் உலகளாவிய மனித
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவது இனத்தின், நிறத்தின்,
குலத்தின் மேன்மைகளைக் கூறி மக்களைப் பிரித்து சுரண்டி வாழ்வோரால் சகித்துக்கொள்ள
முடிவதில்லை!
= படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
= படைத்த இறைவனை இடைத்தரகர்கள் இன்றி வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி நேரடியாக வணங்க இஸ்லாம் சொல்லும்போது கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் ஆதிக்க சக்திகளையும் அது அமைதி இழக்கச் செய்கிறது!
= உலகில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் அநியாயங்களும்
மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். ஏட்டளவில் பேச்சளவில் என்று இல்லாமல் இஸ்லாம் நடைமுறையில் மக்களை அதற்கு
வழிநடத்துகிறது..
= நன்மையை எவுவதையும் தீமையைத் தடுப்பதையும் இறைநம்பிக்கையின்
ஒரு பாகமாகவே கற்பிக்கிறது இஸ்லாம்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட
சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்)
நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை
விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும்
இறைவன் மேல்
நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)
இதன் காரணமாக மக்கள் அநியாயங்களுக்கும்
அக்கிரமங்களுக்கும் அவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும்
எதிராகத் திரும்புகிறார்கள்.
இவ்வாதிக்க சக்திகளின் அடிமைத்தளையில் இருந்து தங்கள்
நாடுகளை விடுவிப்பதற்காக அவர்களின் கையாட்களுக்கும் கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகப்
போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இஸ்லாத்தின்
அபார வளர்ச்சி!
இன்று உலகில் இஸ்லாம் தனது
தெளிவான கடவுள் கொள்கை மூலமாகவும் அது வலியுறுத்தும் தனிநபர் நல்லொழுக்கம், மனித
சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமைகள், குடும்ப கட்டமைப்பு, மனித உரிமைகள்,
சமூகத் தீமைகளுக்கு தீர்வுகள் போன்றவற்றின் மூலமாகவும் அமேரிக்கா, ஐரோப்பா
உட்பட உலகெங்கும் பெருவாரியான மக்களை
கவர்ந்து வருகிறது. இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் உலகம் தொடர்ந்து இணைந்து
வருகிறது.
இந்த எழுச்சியை பரவவிடாமல் தடுக்க பல தந்திரங்கள் கையாளப்
படுகின்றன.
= தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்களைக் கொண்டு தங்கள் நாட்டின்
விடுதலைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுவோரை கிளர்ச்சியாளர்கள் என்றும்
தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குததி சிறைகளுக்குள் வைத்து
சித்திரவதை செய்து அச்சுறுத்துதல்.
= இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடுகளில் கிளர்ச்சியாளர்களை
உருவாக்கி அவர்களுக்கு ஆயுத பலமளித்து அவர்களைக் கொண்டே கலவரங்கள் மூட்டியும்
பயங்கரவாத தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் போன்றவை நடத்தியும் இஸ்லாமியர்களைக் கொல்வது, அதன்மூலம்
இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் பற்றி தப்பெண்ணம் உருவாக்குவது.
= தன் கையாட்களைக் கொண்டு இஸ்லாத்தை தவறான ஒளியில்
சித்தரிப்பதற்காக திரைப்படங்கள், கதைகள் புனைந்து அவற்றை ஊடகங்கள்,சமூக வலைதளங்கள்
மூலம் பரப்பி இஸ்லாத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல்.
இன்னும் இவைபோன்ற பலதும் செய்யப்பட்டாலும் இந்த இறைவனின் மார்க்கம் தடைபடாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை
புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுவதை உலகறியும்!
ஆனால் உண்மையில் இஸ்லாம் எந்த ஒரு உயிரையும் அநியாயமாகக்
கொல்வதோ துன்புறுத்துவதோ கூடாது என்று வன்மையாகத் தடுக்கிறது. மறுமையில் அதற்கு
நரக தண்டனை உண்டென்று எச்சரிக்கிறது.
99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை
செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன்
கண்டு கொள்வான்.
மனிதனை மனிதனுக்கு
எதிரியாக்கி ஏதேனும் ஒரு நாட்டையோ இனத்தையோ உயர்த்தவோ அழிக்கவோ வந்ததல்ல இஸ்லாம்.
மாறாக மனித மனங்களை பண்படுத்தி அதன்வழி உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதே இஸ்லாம்
என்பதை விளங்கும்போது இன்றைய எதிரிகள் நாளை இதன் காவலர்களாக மாறுவார்கள் என்கிறது
வரலாறு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக