இன்றைய செய்திகளும் இறைவனின் எச்சரிக்கையும்
இது செய்தி:
குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டாம்; அதிக
குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: - சந்திரபாபு
நாயுடு பேச்சு
இது எச்சரிக்கை:
‘நீங்கள்
வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும்
உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக்
கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன்
17:31)
சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த மேற்படி
செய்தியை யாரும் மறந்து இருக்கமாட்டீர்கள்.
என்.டி.ராமராவ் நினைவு நாளையொட்டி 18 கிலோ மீட்டர் தூர பாத
யாத்திரையை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். மேற்கு கோதாவரி மாவட்டம் வேலிவேணு
கிராமத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் செட்டிவேட்டை, தல்லாபலம், சிங்கவாரா உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று
பிரமணாகூடம் கிராமத்தில் முடித்தார்.
இந்த கிராமங்களில் சந்திரபாபு நாயுடு பேசியபோது, ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை
பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன்.
ஏன்? நானே ஒரு மகனுடன்
நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை
கேட்டுக்கொள்கிறேன்.
இன்று படித்தவர்கள் பலர் திருமணம் செய்து
கொள்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவது இல்லை.
நாட்டில் ஆண்டுக்கு 9 லட்சம் சிசு மரணம்
நிகழ்கிறது. இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜப்பானை எடுத்துக்கொண்டால்
அங்கு முதியவர்கள்தான் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.
இங்கும் அந்த நிலைதான் ஏற்படுகிறது. எனவே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய
வேண்டாம். அதனால் பலன் இல்லை. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
என்று தெரிவித்தார்.
(தினமலர், மாலைமலர், தினபூமி......)
----------------------------------------
இது ஒரு மாநிலத்துக்கு முதல்வராக பலகாலம்
இருந்து மீண்டும் அதே பொறுப்பில் தொடரும்
ஒரு பழுத்த அரசியல்வாதியின் அனுபவ வாக்குமூலம். இதே எண்ணம் வேறு சில அமைப்புகளின்
தலைவர்களும் வெளிப்படுத்துவதை செய்திகள் மூலம் கண்டு வருகிறோம்.
இந்தியாவில் முதலில் பா.ஜ.க.
எம்.பி.யான சாக்ஷி மகாராஜ், ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். தொடர்ந்து
பத்ரிகாஷ்ரம் சங்கராச்சாரியார் ஸ்ரீ வாசுதேவானந்த் சரசுவதி, பெரும்பான்மை அந்தஸ்தை நிலை நிறுத்த ஒவ்வொரு இந்து குடும்பமும் 10
குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
இதையெல்லாம்விட விஸ்வ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், 5 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் பரிசு வழங்க
திட்டமிட்டிருப்பதாக பொதுச்செயலாளர் கோபால்ஜி அறிவித்துள்ளார். (தினத்தந்தி ஜனவரி 28,2015,)
காலம்கடந்த ஞானோதயம்!
இறைவன் மக்களுக்கு வகுத்து வழங்கும் வாழ்க்கை
நெறி இயற்கையானது. குறைகளற்றது. அதைத் தவற விட்டோர்களின் நிலை இதுதான். மனிதர்களையும்
அவர்களுக்காக இவ்வுலகையும் படைத்தவன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே
எச்சரித்தான்....
‘நீங்கள்
வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும்
உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக்
கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன்
17:31)
தங்கள் உணவு மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ
என்று பயந்து சுயநல நோக்கோடு தங்கள் மக்களை தாங்களாகவே கொன்றொழித்தது மிகப்பெரிய
பிழை என்று உணர இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது பாருங்கள். இன்னும் அதை வேறு பலர்
உணரவில்லை என்பது வேதனை கலந்த வேடிக்கை! ஆம் சந்திரபாபு நாயுடு மேற்கண்டவாறு
பேசியதைத் தொடர்ந்து நாட்டில் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் என்பதைக்
காணும்போது உண்மையை உணர்ந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!
பல கசப்பான அனுபவங்களையும் ஈடுசெய்ய முடியாத எண்ணற்ற
இழப்புகளையும் சந்தித்துவிட்டு இறுதியில் ஞானோதயம் அடைவதால் என்ன பயன்?
இதனால் இனங்களின் இனப்பெருக்கம் தடைபட்டது
ஒருபுறம் இருக்கட்டும. ஆனால் இதைத் தவிர உண்டான வேறு பல இழப்புகளை ஈடு செய்வது
யார்? மக்களை ஏமாற்றிய அரசாங்கங்கள் இதற்கு ஏதாவது நஷ்டஈடு திட்டங்கள்
வைத்துள்ளார்களா?
= பல குடும்பங்களில் தந்தையும் தாயும் முதியோர்
ஆன நிலையில் அவர்களைப் பராமரிக்கவோ அன்பு காட்டவோ ஆதரிக்கவோ ஆளில்லாத நிலை.
அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவர்களுக்கு துணை நிற்கவோ ஆதரவளிக்கவோ
ஆறுதல் அளிக்கவோ யாரும் இல்லை. முதியோர்
இல்லங்களின் அவலங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
= பல குடும்பங்கள் தங்களுக்கு ஆண் சந்ததி
வேண்டும் என்பதற்காக தங்களுக்குப் பிறந்த பெண்சிசுக்களை கொன்றொழித்தன. அதனால்
அக்குடும்பங்களில் அந்தப் பெண்குழந்தைகளில் இருந்து கிடைக்கைகூடிய தனிபாசம்,
மென்மை, போன்ற விலைமதிப்பற்ற பல நன்மைகளும் இழப்படைந்த நிலை.
அரசாங்கங்கள் தங்கள் அறியாமையின் காரணமாகவும்
தங்கள் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவும் நாட்டு மக்களின்மீது திணித்த கொடுமைக்கு
பல குடும்பங்கள் தங்கள் ஈடில்லாத பொக்கிஷங்களை தொலைத்து விட்டு நிற்கின்றன. பல உயிர்களை
காவு கொடுத்து இறுதியில் அவர்கள் தேடிக் கொண்டது பாதிக்கப் பட்டவர்களின் சாபத்தை
மட்டுமல்ல. இவ்வுலகத்தின் உரிமையாளனின் கோபத்தையும்தான்! அது நாளை இறுதித்
தீர்ப்பு நாளின் போது நரகத்தின் உருவில் காத்திருக்கிறது!
'உயிருடன் புதைக்கப்பட்டவளும் வினவப்படும் போது.
எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக