இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கருணைக்கொலை எனும் “விருது”!


கருணைக்கொலை எனும் “விருது”!
விக்கிபீடியா இணையதளம் தரும் அதிர்ச்சித் தகவல் இது:
இந்தியாவின் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில், பெண் சிசுக் கொலைபோல் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ள.  
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளின் இக்கொடூரச் செயலை கருணைக்கொலை என தவறாக குடும்ப உறுப்பினர்களும், சமூகமும் கருதுவதுடன், குற்ற உணர்வற்ற சமூகச் சடங்கு எனக் குறிப்பிடத் தவறுவதில்லை. முதியோர் கொலையை அறிந்தவர்கள் கூட அத்தகவலை காவல் துறைக்கு தெரிவிப்பதில்லை. எனவே காவல்துறையினரால் குற்றம் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு, முதியோர் கொலைகளை தடுக்க இயல்வதில்லை.
வழிமுறைகள்:
 படுத்த படுக்கையாக உள்ள முதியோர்களின் உயிரை வெகு விரைவில் பறிக்க தமிழ்நாட்டில் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. [9]
1.    தலைக்கு ஊத்தல் எனும் தலைக்கு விளக்கெண்ணெயை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி பின் இளநீரை குடிக்கச் செய்தல்.
2.    குடும்ப உறுப்பினர்கள் வரிசையாக தொடர்ந்து முதியோரின் வாயில் பால் ஊற்றுதல்.(இதனை ஒரு சடங்காக செய்தல்)
3.    பூச்சிக் கொல்லி மாத்திரைகள் கொடுத்தல்
4.    விஷ ஊசி போடுதல்.
5.    கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுதல்.

இறைவனைப் பற்றியும் அவனுக்கு மனிதன் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது பற்றியும், மறுமை வாழ்வு பற்றியும் மக்களுக்கு முறையாக போதிக்காததன் விளைவாக இன்று முதியோர் இல்லங்களில் அடைக்கலம் தேடும் போக்கு அதிகரித்து வருகிறது. எந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர் இரவுபகலாக உழைத்து சம்பாதிக்கிறார்களோ சம்பாதித்ததை சேமிக்கிறார்களோ அதே குழந்தைகள் பருவமடைந்ததும் இவர்களைத் தரக்குறைவாக பேசுவது, நடத்துவது, யாரையேனும் காதலித்து அவர்களோடு ஓடிப்போய் விடுவது, இவர்களது செல்வங்களை ஊதாரித்தனமாக செலவழிப்பது போன்றவை சகஜமாகிவிட்டன இன்று. முறைப்படி அவர்களை யாருக்கேனும் திருமணம் செய்து வைத்தாலும் வயதான காலத்தில் பெற்றோர்களை ஆதரவற்றவர்களாக விட்டு விடுவது, முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது என்பவை எந்த குற்ற உணர்வும் இன்றி பிள்ளைகளால் செய்யப் படுகின்றன. நாளுக்குநாள் மங்கி வரும் இந்த குற்ற உணர்வு எங்கு இவர்களைக் கொண்டு சென்றிருக்கிறது தெரியுமா? இதோ பெற்றோரின் தன்னலமற்ற சேவைக்கு விருதாக வழங்கப் படுகிறது... கருணைக்கொலை!

நேற்றைய குழந்தைகளே இன்று வாலிபர்களாக நிற்கிறார்கள்!
இன்றைய வாலிபர்களே நாளை முதியோராக மாறுகிறார்கள்!
வாலிப முறுக்கு என்பதும் நம்மைக் கடந்து செல்லும் ஒன்றுதான்
நாமும் முதுமைக்கு மாறுவோம், நம்மையும் பலவீனம் ஆட்கொள்ளும்...
நாமும் தனிமையில் விடப்படுவோம்...
ஆம், அன்று நம் மீதும் நம் மக்கள் “கருணை” மழை பொழியக் கூடும்!
நாம் விதைத்ததை நாமே அறுவடை செய்யக்கூடும்!

அதற்கு முன் இன்றே விழித்துக் கொள்வோம்!
அனைவர் உள்ளங்களிலும் நல்லொழுக்கம் விதைப்போம்!
முறையான இறையச்சம் விதைப்போம்!
படைத்தவன் மட்டுமே இறைவனென்று கலப்படமின்றிக் கற்றுக் கொடுப்போம்!
அவன் நம்மைக் கண்காணிப்பதை உணர்த்துவோம்!
அவனிடமே நம் மீளுதலும் இறுதி விசாரணையும் உண்டென்பதும்
நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் உண்டென்பதும்
பள்ளிப்பருவத்திலிருந்தே கற்றுக் கொடுப்போம்!


மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆன் 36:68)

= நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.(அல்குர்ஆன் 31:14)

முதியோர் இல்லம் தவிர்!  
= பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)
பெற்றோருக்காக பிரார்த்தனை
= இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக