இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூன், 2014

இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?

பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை,  விதவை இழிவு, முதுமையில் புறக்கணிப்பு  போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நம்மோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிராணிகளிடமும், பறவைகளிடமும் மீன்களிடமும் இன்ன பிற ஜீவிகளிடமும் காணமுடிவதில்லை. அவைகளில் ஆண் இனங்கள் தங்கள் பெண் இனங்களிடம் ஆதிக்க வெறி காட்டுவதோ பெண் இனங்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துவதோ இல்லை. ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதும் இனப்பெருக்கத்தின் சுமைகளை தாங்குவதும் குஞ்சுகளை பராமரிப்பதும் அங்கு பெண் இனங்களே. இரு பாலாரின் செயல்பாடுகளில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் அவை என்றும் இணக்கமாக வாழ்வதையே நாம் காண்கிறோம். இந்த இணக்கம் அவைகளிடம் எவ்வாறு சாத்தியமாகிறது?
உண்மை இதுதான்.... இயற்கையில் மனிதனைத் தவிர நாம் காணும் அனைத்து ஜீவிகளும் இறைவன் வகுத்து தந்துள்ள பாதையில் அடிபிறழாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இறைவன் தங்களுக்கு கொடுத்த இயற்கையிலும் அமைப்பிலும் இன்ன பிற விடயங்களிலும் திருப்தி கண்டு வாழ்கின்றன. எதிர் பாலாரின் மேன்மை கண்டு பொறாமைப் படுவதும் இல்லை அவர்களின் தாழ்மை கண்டு அகங்காரம் கொள்வதும் இல்லை. தங்கள் இயற்க்கைக்கு மீறிய எதையும் அடைய வேண்டும் என்று ஆசைப் படுவதும் இல்லை. அவை அவற்றைப் படைத்த இறைவனைப் பொருந்தி அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்கின்றன என்பதை நாம் காணலாம். இப்படிப்பட்ட கீழ்படிதலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
ஆம், அவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்வதன் மூலம் பெறப்படும் அமைதிக்கே இஸ்லாம் என்று பெயர்.
   இஸ்லாம் என்ற அரபு மொழி வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர். பெயர், உடை, தோற்றம் போன்ற வெளி அடையாளங்களை வைத்து யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது.
இயற்கையில் நாம் காணும் மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு  – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  எப்போது அவன் மனதார இறைவனுக்கு கீழ்படிந்து வாழ உறுதிமொழி பூண்டு அவ்வாறு வாழ ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் முழுமையான முஸ்லிம் ஆகிறான்.
ஆம் அவ்வாறு உண்மையான முஸ்லிமாக ஆணும் பெண்ணும் வாழுபோது அவர்களால் மற்றவர்களின் உரிமைகளை மதிக்காமலோ நிறைவேற்றாமலோ வாழமுடியாது. இறைவன் தங்களுக்கு வழங்கிய இயற்கையிலோ அதற்கேற்ப விதித்த கடமைகளிலோ மாற்றாருக்கு அவன் வழங்கிய உரிமைகளிலோ உடமைகளிலோ அவர்கள் அதிருப்தியுற மாட்டார்கள். அவ்வாறு வாழும்போது ஏற்படும் இழப்புகளையும் வேதனைகளையும் இறைவனின் பொருத்தம் கருதி பொறுத்துக் கொள்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக