இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஜூலை, 2014

பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்

மனித குலத்தை ஆண் பெண் என்ற அடிப்படையில் நேர் எதிரான குணங்களோடு படைத்த இறைவனே அவர்கள் இரு சாராரும் இணக்கத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கி வந்துள்ளான். அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்து அவற்றை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம், மறுமையிலும் அமைதிப் பூங்காவான சொர்க்கத்தில் நுழையலாம் என்று காலாகாலமாக அறிவுறுத்தி வந்துள்ளான். அவனது தூதர்களும் நேர்மையாக ஆன்மீகத்தோடு இல்லறத்தை இனிதே பேணி முன்னுதாரணமாக வாழ்ந்தும் காட்டிச் சென்றார்கள். 
ஆனால் ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக அந்த தூதர்களின் வழிகாட்டுதல்கள் பிற்காலங்களில் புறக்கணிக்கப்பட்டன, பிற்காலங்களில் அந்த வழிகாட்டுதல்களைத் திரித்து கடவுளின் பெயராலேயே பற்பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே புகுத்தப்பட்டன. ஒருபுறம் துறவறமும் மறுபுறம் விபச்சாரமும் ஆன்மீகத்தின் பெயராலேயே புகுந்தன. இறைவன் பெண்ணுக்கு வழங்கிய உரிமைகளை மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவளை ஆன்மீகத்தின் பெயராலே அவள் மீது ஆதிக்கம் செலுத்தி அனுபவித்தனர்.
1)    பெண் பிறந்தாலே இழிவென்று கூறி அவளை கருவிலே கொன்றனர். மீறிப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அரிசிமணியை வாயில் நிரப்பியும் இன்னும் கொடூரமாக கொன்றனர்.
2)    அவளுக்கு கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டன.
3)    திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவளது விருப்பம் ஒரு பொருட்டாக்கப் படவில்லை.
4)    திருமணம் என்ற தன்னை அற்பணிக்கும் ஒப்பந்தத்திலும் கூட அநீதிக்கு உள்ளானாள். வரதட்சணைக் கொடுமை காரணமாக நீண்ட நாள் கன்னியாகவே வாழவும் அவ்வாறே மரணிக்கவும் நேர்ந்தது அவளுக்கு!
5)    கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். மணவிடுதலை மறுக்கப்பட்டது.
6)    அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்!
7)    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள். வேறு சிலரால் அந்த உபாதைக்கு நடுவிலும்
8)    கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அவளது கற்பு விலைபேசப்பட்டது.
9)    கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கும் ஆளானாள்.
10) விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்.
11) முதுமை அடைந்துவிட்டால் அவளது சொந்த மக்களாலேயே அடிமையாக நடத்தப்பட்டாள் அல்லது புறக்கணிக்கப்பட்டாள். இன்னும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டாள் அல்லது கொலையும் செய்யப்பட்டாள்.
12) பெண்ணுக்கு ஆன்மா என்பது உண்டா என்று சந்தேகம் கிளப்பி அவள் அவமதிக்கப்பட்டாள்.
13) முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்.
14) முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க அவள்  கவர்ச்சிப் பொருளாக மட்டுமல்ல கடைச் சரக்காகவும் மாற்றப் பட்டாள்.
15) இந்த சூழ்ச்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அவள் பத்தாம் பசலி என அழைக்கப்பட்டாள். அவ்வாறு கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாவிட்டால் அவளது திறமைகள், பட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.
இன்னும் இவை போன்ற இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் எல்லாம் பெண்ணினம் அனுபவிக்கக் காரணம் என்ன?
பாதிக்கப்படும் பெண் இனத்தின் பலவீனமும் அறியாமையும் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் சுயநலமும் மூர்க்கத்தனமும் காரணங்களாக இருந்தாலும் இந்நிலைமைக்கு முக்கியமான காரணம் இறைவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை மனிதன் புறக்கணித்து தன் மனம்போன போக்கில் வாழ முற்பட்டதனால்தான்.
ஒருபுறம் முன்னோரின் வழக்கங்களை கண்மூடித்தனமாக சரிகண்டு இறைவன் அனுப்பிய வழிகாட்டுதல்களை மக்கள் புறக்கணித்தும் ஏளனம் செய்தும் வந்தனர். மறுபுறம் ஆதிக்க சக்திகளும் இடைததரகர்களும் சேர்ந்துகொண்டு பாமரர்களையும் பெண்களையும் உண்மையான இறைவழிகாட்டுதல்கள் சென்றடைய விடாமல் சுயநல நோக்கோடு செயல்பட்டனர்.
இதை சீர்திருத்த வழியுண்டா?
உண்டு, அந்த வழியும் எளிதானது..... ஏற்கனவே கூறப்பட்டவாறு இறைவனின் வழிகாட்டுதல்களின் பக்கம் மீள்வதே அது! இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவன் மனிதனுக்காக தயாரித்து வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி ஒழுகி வாழ்வதே பெண்ணுக்கு மட்டுமல்ல அதுவே ஆணுக்கும் அனைத்து சமூகத்துக்கும் வாழ்வளிக்கும் வழியாகும்.
தனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகமும் அமைதியாக வாழ அங்கு ஆண் பெண் உறவுகளும் அவர்களின் உரிமைகளும் கடமைகளும் மிக நேர்த்தியான முறையில் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு போதிக்கப் படவேண்டும். அவற்றை பேணுவதற்கு அவர்களுக்கு ஊக்குவித்தலும் உந்துதலும் பேணாவிட்டால் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மீறப்பட்டால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் தண்டனைகள் பற்றிய அச்சமும் சமூகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சமூகத்தின் அங்கத்தினர்களுக்கு இடையே பொறுப்புணர்வு உண்டாகும்.

ஒவ்வொரு மனிதனும் தன் வினைகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடையே வளர்ப்பதன் மூலமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நேர்த்தியாக வரையறுத்து அவற்றை வாழ்வியல் சட்டமாக்குவதன் மூலமாகவும் மேலே கூறப்பட்ட பெண்ணுரிமை மீறல்களை தடுத்து இம்மைக்கும் மறுமைக்கும் அமைதி தரும் வாழ்வைக் காண வழி வகுக்கிறது இஸ்லாம். ஆம், அந்த அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! 

http://quranmalar.blogspot.com/2014/06/blog-post_19.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக