இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 டிசம்பர், 2012

2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் இரண்டு


திருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது?
 திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை நடத்திப் பார்க்கலாமே!. திருக்குர்ஆனின் உலகெங்கும் உள்ள பிரதிகளை நேரில் நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் இன்று இணையம் மூலமாகவோ அல்லது ஒரு பொது நூலகத்தில் சென்றோ இதை நீங்கள் எளிதில் செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் பரிசோதிக்கும்போது முந்தைய வேதங்களையும் மற்றும் திருக்குர்ஆனையும் ஒப்பீடு செய்து பாருங்கள். அப்போது நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு தனித்தன்மையை உணரலாம்.
*  உலகில் இன்றுள்ள மற்ற மத வேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.
*  ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான பிரதிகளைக் நீங்கள் காண முடிக்கிறது. ஒன்று வெறும் அரபுமொழி மூலம் மாத்திரம் இடம்பெற்றுள்ள பிரதிகள். மற்றவை திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகள். ஆனால் அவற்றில் அதன் அரபுமொழியில் உள்ள மூலமும் இடம்பெற்று இருக்கும். ஆக மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம்.
  இது எப்படி?
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள்.
 இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக்  காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர்.  தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். பாலும் பழமும் கைகளிலேந்தி....... அல்லது நான் ஆணையிட்டால்... போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா? ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.
 புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும்  பலரும் குர்ஆன் வசனங்களை  மனப்பாடம்   செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவது என்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.
  உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே! குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள். (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம் (திருக்குர்ஆன் 15:9)

இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும் மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?
இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக, திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பிறகு இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே இன்று நாம் வாழும் ஒவ்வொருவரும் நம் வாழ்வை திருத்தி அமைக்கக் கடமைப்பட்டுள்ளோம். காரணம், இதன் அடிப்படையிலேயே இறுதித்தீர்ப்பு நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.

சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்
(100 % DOUBT FREE book)
2.2. இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது
இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவது நான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா? இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் சர்வஞானம் கொண்டவனின் ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.
தொடர்ந்து. இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி!
அவ்வாறு இந்த சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான். 
 2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:
     இதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும். அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.
     அந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் - நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் - உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.
 அதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்! 
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது இவ்வேதம்
 ஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.
இவ்வுலகில் காணப்படும் நூல்களில் இரண்டு வகையான முரண்பாடுகளில் ஒன்றையோ அல்லது இரண்டையும் சேர்ந்தோ நீங்கள் காண முடியும்
1.    . முன்னுக்குப் பின் முரண்படுதல்: அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு  காண்போம்:
பைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடு
ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)
ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)
2.    இரண்டாவது வகை முரண்பாடு காலத்தால் ஏற்படும் முரண்பாடு. உதாரணமாக, ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்ளானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.
ஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான் 
4:82   .அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்!
திருக்குர்ஆனில் முதல்வகை முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது!
39:1   (யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம்  இறங்கியருளப் பெற்றுள்ளது.
விஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது!
திருக்குர்ஆனை உறுதிப்படுத்தும் அறிவியல் உண்மைகள்
உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாக பாப்போம்:
     தேனின் உற்பத்தி:
  தேனைப் பற்றி அது எவ்வாறு உற்பத்தியாகிறது என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அது பற்றிய போதிய ஞானம் இல்லாதவர்கள் கூறுவார்கள்: தேனீக்கள் பூக்களில் இருந்து ரசத்தை தங்கள் கூடுகளில் சேர்க்கின்றன. அதுதான் தேன் என்பார்கள். ஆனால் நவீன விஞ்ஞானம் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறுகிறது.
 தேனீக்கள் பூக்களில் இருந்தும் கனிகளிலிருந்தும் ரசத்தை உறிஞ்சிய பின் அது அவற்றின் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டு அதன் வயிற்றில் இருந்து வெளிவருவதே தேன் என்பதும்  பெண் தேனீக்கள்தான் இந்தக் கிரியையைச் செய்கின்றன என்பதும் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள். கீழ்கண்ட வசனங்கள் இவற்றைத் தாங்கி நிற்பதைப் பாருங்கள்:
''மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (திருக்குர்ஆன் 16: 68, 69.)
1430 முன் எந்த விதமான விஞ்ஞான ஆராய்ச்சியோ நுண்னோக்கிகளோ (microscopes) தொலைநோக்கிகளோ (telescopes) இல்லாத ஒரு காலகட்டத்தில் எந்த மனிதராவது இப்படி ஆழமான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய வசனத்தைக் கூறியிருக்க முடியுமா? அதுவும் குறிப்பாக எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாதிருந்த பாலைவனத்து மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க சற்றும் வாய்ப்பே இல்லை. தெளிவாக இது இறைவனின் வசனமே என்பதையல்லவா பறைசாற்றுகிறது?
 இந்த வசனங்களின் அரபு மூலத்தில் அவளுடைய வயிறு என்று பொருள்படும் புதூனிஹா என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இது பெண் தேனீக்கள்தான் தேன் சேகரிப்பை நடத்துகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வசனங்களின் நடையும் இவ்வளவு துல்லியமான வார்த்தைப் பிரயோகமும் இப்பிராபஞ்சத்தின் படைப்பாளன் சில படைப்பின் இரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது?
இதே போல இன்னும் பல படைப்பின் இரகசியங்கள்.....
அப்படிப்பட்ட மேலும் சில வசனங்களை சுருக்கமாக இங்கு காண்போம்:
கீழே ஒருசில நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளும் அவற்றை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களும் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் என்பது முழுக்கமுழுக்க இவ்வுலகைப் படைத்தவனின் வார்த்தைகளே என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன. 
     பெருவெடிப்புக் கொள்கை மற்றும் நீரே உயிரினங்களின் மூலம் என்ற உண்மை :
21:30. நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும் இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்திய மறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
     மனித உடலில் வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் தோல்களில்தான் உள்ளன என்ற உண்மை: 
4:56   .யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
     இரு கடல்களுக்கிடையே தடுப்பு : கடல்களுக்கு இடையே ஒன்றோடு ஒன்று கலவாத முறையில் தடுப்பு உள்ளது என்ற உண்மை:

25:53  .அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று மிக்க இனிமையும் சவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும் மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
27:61  .இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுககிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
     கோள்களை தடுத்துக் கொண்டிருக்கும் புவி ஈர்ப்பு விசை
35:41  நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
     விண்வெளிப் பயணம் சாத்தியமே என்ற உண்மை:
55:33  .''மனு ஜின் கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள்;. ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
     விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்குகின்றது என்ற உண்மை
6:125  அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
     ஓரங்களில் குறையும் பூமி
13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும் அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
21:44. எனினும் இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும் அவர்களுடைய ஆயட்காலம் வளர்ந்தோங்கும் வரை சகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் ?
     சூரியனும் சந்திரனும் கோள்களும் வட்ட வரைக்குள் கட்டுப்பாட்டோடு இயங்குகின்றன எனும் உண்மை:
35:13  .அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
 36:40.      சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
     முளைகளாக மலைகள் : பூமிக்கடியில் பல்வேறு நில அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிடிப்போடு இருக்கச் செய்ய பெரும் முளைகளைப் போல் மலைகள் ஆழமாக இறக்கப் பட்டுள்ளன என்ற உண்மை 

16:15  .உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
     கருவளர்ச்சியின் நிலைகள்:
22:5   மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும்  உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும் நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
23:13-14.    பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
     விந்தின் பிறப்பிடம்
86 : 5-7     மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந் தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
இன்னும் பல வசனங்கள் இதுபோல இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஆக, மேற்கூறப்பட்ட உண்மைகள் எதைப் பறைசாற்றி நிற்கின்றன? இறைவனே கூறுவது போல்
32:2 அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
என்ற உண்மையைத்தானே? எனவே இந்த இறைவேதம் கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் உண்மை. இனி எதிர்காலத்தில் நடக்கப்போவதாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் நடந்தே தீரும் என்பதும் உண்மை என்றுதானே நமது பகுத்தறிவு நமக்குச் சொல்கிறது! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக