இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2020

பெண்ணுரிமைகள் பெற்றுத்தந்த மாபெரும் புரட்சியாளர்!

 இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.

பிறக்கும் உரிமை

1. பெண் பிறந்தாலே இழிவென்று கூறி அவளை அன்று உயிரோடு புதைத்தனர். இன்றோ அவர்களை கருவிலே கொன்றனர். மீறிப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அரிசிமணியை வாயில் நிரப்பியும் இன்னும் கொடூரமாக கொன்றனர். ஆனால் பெண்ணின் பிறப்பும் அவளை ஒழுக்கமாக வளர்ப்பதும் பெருமைக்கு உரியவை என்றும் மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுத்தருவது என்ற மனமாற்றத்தை உண்டாக்கி பெண்குழந்தைகளைக் காப்பாற்றி வரவேற்றது இஸ்லாம்.  

கல்வி உரிமை:

2)    அவளுக்கு கல்வி கற்கும் உரிமை  மறுக்கப்பட்டன. ஆனால்,  கல்வியை கற்பது ஆண்பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை’ என்று விதித்தது இஸ்லாம்

மணப்பெண் சம்மதம்

3)    திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவளது விருப்பம் ஒரு பொருட்டாக்கப் படவில்லை. மணப்பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாக்கியது இஸ்லாம். மட்டுமல்ல, சம்மதமின்றி நடந்த திருமணத்தை முறிக்கும் உரிமையைக் கூட பெண்ணுக்கு வழங்கினார்கள் நபிகளார்.

வரதட்சணை ஒழிப்பு

4)    திருமணம் என்ற தன்னை அற்பணிக்கும் ஒப்பந்தத்திலும் கூட அநீதிக்கு உள்ளானாள் பெண். வரதட்சணைக் கொடுமை காரணமாக நீண்ட நாள் கன்னியாகவே வாழவும் அவ்வாறே மரணிக்கவும் நேர்ந்தது அவளுக்கு! வரதட்சணையை சட்டவிரோதமாக்கி அதற்கு நேர் எதிரான வதுதட்சைணையை (அரபு மொழியில் மஹர்) கட்டாயமாக்கியது இஸ்லாம்.

மணவிலக்கு உரிமை

5)    கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள் பெண். மணவிடுதலை மறுக்கப்பட்டது. ஒவ்வாத கணவனோடு ஒட்டிதான் வாழ வேண்டும் என்றோஅவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கிதான் போக வேண்டும் என்றோ கூறவில்லை இஸ்லாம். மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி 'குலாஎன்ற உரிமையை பெண்ணுக்கு வழங்கியுள்ளது மார்க்கம்

மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை

6)    அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்! இந்த மனோநிலையை ‘ஆண் குழந்தையோ பெண்குழந்தையோ அல்லது மலடாவதோ இறைநாட்டமே’ (திருக்குர்ஆன்42:49 50) என்ற இறைவசனம் மூலம் திருத்தியது இஸ்லாம்!

7)    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள். வேறு சிலரால் அந்த உபாதைக்கு நடுவிலும் உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டாள் பெண். இந்த இரண்டுவகைக் கொடுமைகளை விட்டும் பெண்களைக் காப்பாற்றியது இஸ்லாம்.

8விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள். விதவை மறுமணத்தை ஊக்குவித்ததோடு சகுனம் பார்த்தல் போன்ற மூடநம்பிக்கைகளையே முற்றாக ஒழித்தது இஸ்லாம்.

9)   கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கு ஆளானாள் பெண். இவை தொடர்பான மூட நம்பிக்கைளில் இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களைக் காப்பாற்றி வருகிறது இஸ்லாம்.

முதுமையில் பாதுகாப்பு

10முதுமை அடைந்துவிட்டால் அவளது சொந்த மக்களாலேயே அடிமையாக நடத்தப்பட்டாள் அல்லது புறக்கணிக்கப்பட்டாள். இன்னும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டாள் அல்லது கொலையும் செய்யப்பட்டாள். “தாயின் காலடியில் சொர்க்கம்” என்றும் “பெற்றோரை நோக்கி ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட சடைந்து கூறக்கூடாது” என்றும் மக்களுக்கு போதித்து இவற்றை மீறுவது இறைதண்டனையைப் பெற்றுத்தரும் என்றும் எச்சரித்து இக்குற்றங்களைத் தடுத்தது இஸ்லாம்.

பெண்மையின் புனிதம் காப்பாற்றப்படுதல்

11பெண்ணுக்கு ஆன்மா என்பது உண்டா என்று சந்தேகம் கிளப்பி அவள் அவமதிக்கப்பட்டாள். ஆண்களும் பெண்களும் சமமேஅவர்கள் ஒரே ஆண்- பெண் ஜோடியிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம். அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம்.

 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர்அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும்பெண்களையும் பரவச் செய்தான்'. (திருக்குர்ஆன் 4:1)

12முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள். ஆதாமும் ஏவாளும் இணைந்தே முதல் குற்றத்தை செய்தார்கள் என்ற உண்மையை எடுத்துக்கூறி இக்குற்றச்சாட்டுக்கு முடிவு கட்டியது இஸ்லாம்.

பொருளாதார உரிமைகள்

13திருமணம் முடித்துக் கொடுப்பதோடு பெண்களைக் கைகழுவி அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. சொத்துரிமை மறுக்கப்பட்டது. ஆனால் 'பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டுஅது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே'.     (திருக்குர்ஆன் 4: 7) என்று கூறி அவளது சொத்துரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.

14) தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை போன்றவை பெண்ணுக்கு மறுக்கப்பட்டன. இஸ்லாம் குடும்பத்திற்காக பொருளாதாரத்தை சம்பாதிப்பதை ஆணின் மீது கடமையாக்கி பெண்ணை அப்பொறுப்பிலிருந்து விடுவித்தது. அதேவேளையில் பெண்ணுக்கு பொருள் சம்பாதிக்கவும் தொழில் செய்யவும் விருப்ப உரிமை வழங்கியது இஸ்லாம். இதை பாதுகாப்பான முறையில் நிறைவேற்றுவதற்கு ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கத்தையும் பெண்களுக்குக் கற்பித்தது இஸ்லாம்.

கற்பு சார்ந்த உரிமைகள்

15) முதலாளித்துவத்திற்கு தன்னுடைய சரக்கை விற்க அவள்  கவர்ச்சிப் பொருளாக மட்டுமல்ல கடைச் சரக்காகவும் மாற்றப் பட்டாள். அந்நியனின் கருவை அநியாயமாகச் சுமக்கும் நிலைக்கும் தந்தையில்லாக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கொடுமைக்கும் அவள் தள்ளப்பட்டாள். ஆனால் தாய்மை என்ற புனிதப் பொறுப்பை சுமப்பவள் என்று கூறி அவளது உடல் அந்நியனுக்கு விருந்தாவதைத் தடுக்க பர்தா அல்லது ஹிஜாப் என்ற சிறப்பு ஆடையை பெண்களுக்கு விதித்து அவளை இக்கொடுமைகளில் இருந்து பாதுகாத்தது இஸ்லாம்.

16)    கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் மதுபோதை வெறிக்கும் பெண்ணின்  கற்பு விலைபோனது. உரிய மனமாற்றங்கள் மூலம் இத்தீமைகளில் இருந்து பெண்ணையும் ஆணையும் குடும்பங்களையும் காப்பாற்றியது இஸ்லாம்.  

------------------------- 

பெண்குழந்தை என்ற அருட்கொடை


ஆணாதிக்கத்திற்கு தடைபோடும் பர்தா!

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக