இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு!



ஒருபுறம் நாடு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டாலும்  மறுபுறம் நமது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் விபரீதங்கள் இவை.... மறுக்கமுடியுமா?
= மனித சமூக அமைப்பின் அடிப்படையையே தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம்! தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில் பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது! பொறுப்புணர்வில்லா பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது! இன்று அது பரவலாகி அதில் ஈடுபடுவோர் வெட்கம் மறந்து தங்களை ‘பாலியல் தொழிலாளிகள்’ என்று அறிவித்து தொழிற்சங்கங்கள் அமைத்து தங்கள் ‘உரிமை’களுக்காகப் போராடும் அவலம் நாட்டில் தொடர்கிறது. நாளை இது தொழில்நுட்பமாக சித்தரிக்கப்பட்டு அதற்காக கல்லூரிகளும் பட்டங்களும் பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு மக்களிடையே வெட்க உணர்வும் சுரணையும் மழுங்கிக்  கிடக்கிறது.
இன்னும் இச்செயலை ஊக்குவிக்கும் முகமாக திரை உலகமும் தொலைக்காட்சிகளும் மற்ற ஊடகங்களும் தங்களது பங்கை நிறைவேற்றி வருகின்றன. அனைவருக்கும் மக்களின் காம இச்சையை காசாக்குவது ஒன்றே குறிக்கோளாக உள்ளது.
= அதுபோலவே தீமைகளின் தாய் என்று கூறப்படும் மதுபானமும்! மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து வைத்து மக்களை அதிலும் குறிப்பாக சமூகத்தின் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மதுவருந்தத் தூண்டி வருகிறது. குடும்பங்கள் சீரழிவதும் கலகங்கள் சமூகங்களை அமைதி இழக்கச் செய்வதும் இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல! பள்ளிக்கூடங்களில் சிறு மாணவர்கள் முதல் போதைப்பொருட்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் அவலம்!
= லாட்டரிச்சீட்டு என்ற சூதாட்டம் ..... இதை வைத்துப் பிழைப்பு நடத்துவோர் தங்கள் உரிமை கோரிப் போராடுகிறார்கள்! ....வெல்கிறார்கள்!!
= பெற்றோரைப் புறக்கணிப்பதால் பெருகிவரும் முதியோர் இல்லங்களும் பெற்ற பிள்ளைகளைப் புறக்கணிப்பதால் பெருகிவரும் அனாதை ஆசிரமங்களும்......
= இன்னும் இலஞ்சம் இன்றி எக்காரியமும் நடக்காது என்ற அளவுக்கு முற்றி நிற்கும் நாட்டின் நிலைமையும் ..... சிறிய ஊழல்வாதி பெரிய ஊழல்காரனைக் காரணம் காட்டி தன்னை நியாயப் படுத்தும் நிலையும்.....
= கொலைக்குற்றவாளிகளும் நடிகர்களும் எந்த தகுதியும் இல்லாதவர்களும் போற்றப்படுவதும் அவர்களின் காலடியில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் அவலமும்......
நாட்டில் நடக்கும் அவலங்களின் பட்டியல் இன்னும் நீளமானது....
எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மக்கள் உள்ளார்கள்! அவர்களுக்கு வெட்கமும் இல்லை! சுரணையும் இல்லை! தடுக்கவோ தட்டிக் கேட்கவோ துணிவும் இல்லை! அப்படி ஒரு எண்ணமும் இல்லை! 
இப்படியே போனால்...
நாளை திருடர்களும் கொள்ளையர்களும் கொலைகாரர்களும் காமவெறியர்களும் சங்கம் அமைத்து தங்கள் உரிமை கோரி போராடலாம். ....
அவர்களுக்கும் உரிமைங்கள் (licence) வழங்கப்படுவதும் ‘தொழில் நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படுவதும் பட்டங்கள் வழங்கப்படுவதும் அரசாங்க கவுரவம் கொடுக்கப்படுவதும் நடைமுறையில் வரலாம்.
திருடன் ஒருவன் துப்பாக்கியோடு வந்து தன் உரிமத்தைக் காட்டி உங்கள் பீரோவை உரிமையோடு திறக்கச் சொல்லி உங்கள் பொருட்களை வாரிச் செல்லலாம். போலீஸ் பரிவாரங்கள் துணை வரவும் வாய்ப்பு உண்டு!
காமுகன் ஒருவன் உங்கள் வீடுவந்து உங்கள் மகளையோ மனைவியையோ புணர்வதற்கு தக்க உரிமத்தோடு வந்து தன காரியத்தை நிறைவேற்றிச் செல்லலாம்!
இவை மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? .... இல்லை என்பதற்கு இன்று நம் முன் நடக்கும் வழக்குகளும் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுமே சாட்சி பகர்கின்றன. விபச்சாரத்துக்கு உரிமைங்கள் வழங்கப்படுவதைக்  காரணம் காட்டி நாளை திருடர்கள் தங்கள் வக்கீல்களின் வாதத் திறமையைக் கொண்டு வெல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன!
சரி, மேற்கூறியவை கற்பனைகளாகவே ஆனாலும் நாம் விழித்தெழ வேண்டிய தருணம் இன்னும் வரவில்லையா அன்பர்களே!
காலம் கடந்துவிட வில்லை...
மேற்கண்ட விபரீதங்கள் நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருவரும் அவர்கள் செய்வது குற்றமே ஆனாலும் அவற்றை நியாயப்படுத்த எப்படி முடிகிறது அவர்களால்? எங்கே குளறுபடி உள்ளது?
அனைத்துக்கும் காரணம் நமது வலுவற்ற சட்டங்களே என்பதை அறியலாம். மனிதர்கள் தங்கள் குற்றறிவு கொண்டு இயற்றிய சட்டங்களே இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன.
நன்மை எது தீமை எது சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மனிதன் தன்னிடம் உள்ள குற்றறிவு கொண்டும் தன்  ஆசாபாசங்களுக்கு உட்பட்டும் தீர்மானித்து அதன் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். அதே வேளையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே அனைத்து படைப்பினங்களையும் அவற்றின் சூட்சுமங்களையும் அவற்றுக்கு எது நல்லது எது தீயது என்பதை முழுமையாக அறிந்தவன். தன் படைப்பினங்களுக்கு எது எப்போது நல்லது அல்லது தீயது என்பதை அதி பக்குவமாக அறிந்தவனும் அவன் மட்டுமே. எனவே அவன் தரும் சட்ட திட்டங்கள் எவையோ அவை மட்டுமே குறைகள் இல்லாதது. மேலும் இவ்வுலகை மனிதர்களுக்கு ஒரு தற்காலிக பரீட்சைக்கூடமாக உருவாக்கிய இறைவன் நாளை இறுதித்தீர்ப்பு நாளின்போது அவன் வழங்கிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலேதான் நம்மை விசாரிக்கவும் செய்வான்.
அந்த சர்வவல்லமை பொருந்திய இறைவன் இவ்வுலக மக்களுக்காக வழங்கிய வாழ்க்கைத் திட்டமே ‘இஸ்லாம்’ என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. அவன் வழங்கும் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய பெட்டகமே இறுதி வேதம் திருக்குர்ஆன். அந்த திருமறைக் குர்ஆனின் செயல்முறை விளக்கமே இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி! எனவே இறைவன் வழங்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை அழிவில் இருந்து காப்போமாக!
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே இறைவன் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக