இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்

Related image
தமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணடிமைத்துவம் இல்லாத சமத்துவமிக்க சமூகம் காண தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்துப் போராடினார். இன்றும் தொடரும் அவரது சிந்தனையின் தாக்கம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். முக்கியமாக கடவுளின் பெயரால் நாட்டில் நடைபெற்றுவந்த மூடநம்பிக்கைகளுக்கும் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக கடுமையாகப் போராடினார் பெரியார். அதன் காரணமாக கடவுளே இல்லை என்று மறுத்துரைக்கவும் செய்தார். ஆனால் அதேவேளையில் கடவுள் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்ட இஸ்லாம் உலகில் நடத்திவரும் புரட்சிகளைக் கண்டு வியந்த அவர் ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்தில் புகலிடம் தேடச் சொன்னார். ‘இன இழிவு நீங்கள் இஸ்லாமே நன்மருந்து’ என்ற அவரது கூற்று வரலாற்று சிறப்பு மிக்கது.

இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.
.யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.

இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி
வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது. 

இஸ்லாம் எப்படி பெரியாரின் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வருகிறது?
இனம், நிறம், மொழி, நாடு போன்றவற்றால் இயல்பாகவே வேறுபட்டு நிற்கும் மக்களை ஒருங்கிணைக்கவும் சீர்திருத்தவும்  அல்லது அவர்களிடையே அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்  வளர்க்கவும் ஒரு உறுதியான அஸ்திவாரம் தேவைப்படுவதை நாம் உணரலாம். அது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு கொள்கை அடிப்படியிலானதாக இருக்க வேண்டும். இஸ்லாம் கீழ்க்கண்ட  முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம்  இம்முயற்சியில் வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.  
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1)  (அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)

2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
அவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை  வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணை உண்டு:    இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம்  வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)      
மேற்கண்ட வலுவான    அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதனால் தனி மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும் பொறுப்புணர்வு உள்ளவனாகவும் ஆக்குகிறது. தொடர்ந்து இந்த அடிப்படைகளை ஒட்டிய வாழ்வியல் நெறியை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் கொண்டிருக்கிறது இஸ்லாம். ஐவேளைத் தொழுகை, கட்டாய ஏழை வரி வழங்குதல், ரமலானில் விரதமிருத்தல், நன்மைகளை ஏவுதல், தீமைகளைத் தடுத்தல் போன்றவற்றை வழிபாடாக போதிக்கிறது இஸ்லாம். இவற்றை இறைவனின் பொருத்தத்தை நாடி மட்டும் செய்ய ஊக்குவிப்பதனால் சமூக சீர்திருத்தத்திற்காக உழைப்பவர்கள் புகழாசை, பொருளாசை, பதவி ஆசை போன்றவற்றில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள். 
தொழுகை நடத்திவரும் சமூகப் புரட்சிகள்:    
 
 வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற மூல மந்திரத்தைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகளை முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்று தொழுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதனால் சமூகத்தில் நிகழும் புரட்சிகளைப் பாருங்கள்:
  • படைத்தவன் முன்னால்  ஐவேளையும் நின்று வணங்கும்போது  இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைச் போற்றிப் புகழ்வதால் மனிதனுக்கு உண்மையான இறையச்சமும் பக்தியும் ஏற்படுகிறது அதனால் அவன் ஒரு தொழுகைக்கும் மறு தொழுகைக்கும் இடையே பாவம் செய்ய முற்பட மாட்டான். இதனால் பாவங்கள் அற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாகிறது.
  • படைத்த இறைவனை நேரடியாக வணங்குவதால் மிகப்பெரிய தன்னிறைவும் மனஉறுதியும் நமக்குள் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கோ வீண் சஞ்சலங்களுக்கோ அங்கு இடமில்லை.
  • இடைதரகர்களுக்கு அங்கு வேலை இல்லை.அதனால் கடவுளின்  பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களுக்கும் மோசடிகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.
  • உயிரும் உணர்வுமற்ற பொருட்களைக் கடவுள் என்று நம்பி ஏமாறுதலும் பொருட்செலவும் வீண் அலைச்சல்களும் நீண்ட வரிசைகளில் காத்திருப்புகளும் அங்கு இல்லை.  
  • மனிதர்களும் அனைவரும் இறைவன் முன்பு சமம் என்ற கொள்கை என்ற அடிப்படையில் கூட்டுத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்ந்து அணியணியாக நிற்கும் போது நம்மிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் ஈடிணையற்ற முறையில் வளர்கிறது. சமூகத்தில் தீண்டாமையும் ஜாதிகளும் ஒழிந்து போகின்றன.
  • படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதால் மனிதன் மனிதனுக்கு முன்னாலோ அவனுக்கு கீழானவற்றுக்கு முன்னாலோ தலை சாய்த்தல் என்பது அறவே சமூகத்திலிருந்து ஒழிக்கப்படுகிறது. சுயமரியாதை பேணும்  சமுதாயம் அங்கு உடலெடுத்து ஓங்கி வளர்கிறது.
  • தொழுகைகளில் வரிசைகளில் நிற்கும்போது பாதங்கள் முன்பின் என்றிராமல் சீராக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் விட்டால் உங்கள் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பது நபிகளாரின் கூற்று. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி படித்தோன், பாமரன் என அனைவரும் ஒரே வரிசையில் சீராக இடைவெளியின்றி ஐவேளையும் நின்று பழகும்போது மனிதர்களுக்கிடையே நிலவும் தாழ்வுமனப்பான்மை, உயர்வுமனப்பான்மை போன்றவை அறவே துடைத்து எறியப்படுகின்றன.
இதுபோலவே இஸ்லாத்தின் மற்ற வழிபாடுகளும் தனிநபர் நலனையும் சமூக நலனையும் மையப்படுத்தியே அமைந்துள்ளன என்பதை ஆராய்வோர் அறியலாம்.
இன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் இஸ்லாத்தின் மூலம் இவற்றில் இருந்து விடுதலை பெற்றது போலவே உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்று வருகிறார்கள்.  அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும்  மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த  மக்களை  இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம்  கண்டு வருகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உடல் இயற்க்கைக்கு ஏற்றவாறு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கி ஆரோக்கியமான குடும்ப சூழலுக்கு வழிவகுக்கிறது இஸ்லாம். பெண்களுக்கு உரிய உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி அவளை போகப்பொருளாகவும் இழிபிறவியாகவும் பார்ப்பதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்ணடிமைத்தனம், பெண்சிசுக்கொலை, வரதட்சணை, முதுமையில் புறக்கணிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து உரிய சட்டங்கள் மூலமாகவும் ஆன்மீக போதனைகள் மூலமாகவும் பெண்ணினத்தை காப்பாற்றுகிறது இஸ்லாம்!
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக