இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2022

திருக்குர்ஆன் நற்செய்திமலர் 2022 மே மாத இதழ்



திருக்குர்ஆன் நற்செய்திமலர் 2022  மே மாத இதழ்  

பொருளடக்கம்:
இருள் மறைத்தது ஆனால் இறைவன் வெளிப்படுத்தினான்! -2
வாசகர் எண்ணம் -3
பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்! -4
அறிவியல் பற்றிய அறிவுபூர்வமான அணுகுமுறை -7
அறிவியல் அணுகுமுறையை (The scientific Method) உலகுக்குத் தந்த அரபு முஸ்லிம்கள் -10
திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் செவிப்புலன்! -12
அக்னோஸ்டிக் ஒருவரின் பயணம் -13
செவிப்புலனுக்கு ஏனிந்த முக்கியத்துவம்? -18
இறைவனை உணரத்தான் எத்தனை எத்தனை சான்றுகள்! -21 21
இறைவனை உணராத புலன்கள் இருந்தென்ன லாபம்? -22
ஜகாத் வழங்காதிருப்பது பாவம் -23
ஜகாத் மூலம் அச்சமற்ற வாழ்வு! -24
-------------------------------- 

இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள் 

இறைவன் ஏன் செவிப்புலனை முதன்மைப் படுத்துகிறான்?


பொதுவாகவே இறைவன் மனிதனுக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் அவனது உடல். தெருவோரத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எளியோர் ஆயினும் சரி, மனநலம் குன்றி சமூகத்தின் பரிகாசத்துக்கு ஆளாகும் மனிதர்களும் சரி, உடல் என்ற பொக்கிஷத்தைப் பொறுத்தவரை கோடீஸ்வரர்களே! அந்த அளவுக்கு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் புலன்களும் மதிப்பு மிக்கவை.

பொதுவாகவே ஐம்புலன்களைப் பற்றிப் பேசும் போது மக்கள் அனைவரும் பார்வைப் புலனையே- அதாவது கண்களையே- மிக்க மதிப்பு மிக்கதாக முன்னிலைப்படுத்தி பேசுவதை நாம் அறிவோம்.  ஆனால் நம்மைப் படைத்தவன் பார்வைப் புலனைவிட செவிப்புலனை முதன்மைப்படுத்தி கூறுவதை நாம் திருக்குர்ஆனில் காணலாம். இதில் மிகப்பெரிய சூட்சுமம் இருப்பதை நீங்கள் காணலாம். திருக்குர்ஆன் நம்மைப் படைத்தவனின் வேதமே என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கீழ்க்கண்ட வசனங்களை படித்து விட்டு தொடரும் அறிவியல் உண்மைகளை கவனியுங்கள்..

= இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன் : 23:78)

= உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் அல்லாஹ்என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக. (திருக்குர்ஆன்: 10:31)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
= உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (திருக்குர்ஆன் : 16:78)


செவிப்புலன் செய்யும் முக்கியப் பணி:

காது அல்லது செவிப்புலன்களின் பணி ஒலி உணர்தல் மட்டுமல்ல. நம் உடலை சமநிலையில் வைத்திருத்தல் என்ற அதி முக்கியமான பணியும்தான். நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்குக் காரணம், நம் காதுதான். மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த உதவுவது செவிப்புலன்தான்.

ஒரு இறந்துபோன சடலத்தை நாம் செங்குத்தாக நிறுத்தவோ அல்லது உட்காரவோ வைக்க முடியுமா சிந்தித்துப்பாருங்கள். ஒரு சைக்கிளை நாம் அதன் சக்கரங்களின் மீது நிறுத்தி வைக்கவும் ஒரு ஸ்டான்ட் இல்லாமல் ஆகாது. ஆனால் ஒரு உயிருள்ள மனிதனால் நிற்கவும் குனியவும் குதிக்கவும் எல்லாம் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் செவிப்புலனில் அமைந்துள்ள புலன் உணர்வுக்கான கட்டமைப்புதான். மட்டுமல்ல, அவனால் கயிற்றின் மீது நடத்தல், உயரத்திலிருந்து நீருக்குள் குதித்தல், நீந்துதல் போன்ற சாகசங்களையும் நிகழ்த்த முடிகிறது. இந்தப் புலன் உணர்வை equilibrioreception என்கிறார்கள்.

உடல் எந்த வாட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு தன்னைத்தானே சமநிலைப் படுத்திக்கொள்வது இதன் மூலம்தான். கண்பார்வை , தசைகளின் இறுக்கம் அல்லது தளர்வு நிலை இதைத்தவிர , உடலின் பிரத்தியேக சென்சார் நம் செவிப்புலனில்தான் உள்ளது.  அந்த சென்சார் தரும் உள்ளீட்டை , பார்வை மற்றும் தசைகளின் நிலை இவற்றோடு கோர்த்துப்பார்த்து மூளை புரிந்துகொள்கிறது. செவிப்புலனில் அமைந்துள்ள காக்லியா (cochlea) திரவம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போது யோசித்துப்பாருங்கள், செவிப்புலன் இப்பணியைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று. பார்வை இல்லாமல்கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் மேற்படி சமநிலை தவறிய மனிதனால் எவ்வளவு நாள் வாழ்ந்திட முடியும்? யோசியுங்கள். 

ஒலி உணரும் பணி:

ஒலி அலைகளை காது மடல்கள் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

காதின் மடல்கள் அல்லது சோனைகள் மிக அற்புதமான வடிவம் கொண்டது,. மண்ணெண்ணெய் அடுப்பில் புனல் வைக்காமல், அப்படியே எண்ணெயை ஊற்றினால் எப்படி சிதறி போகும். அதே போன்றுதான், காது மடல்கள். இல்லாவிடில், ஒலி அலைகள் நேரடியாக மண்டைக்குள் மோதி, அதுவே நம்மை கொன்று விடும் அளவுக்கு வலுவானவை. அதைத்தான், காது மடல்களும் அதை சுற்றியுள்ள சிக்கலான அமைப்புகளும வடிகட்டும் வேலையை செய்கின்றன.

இனி படைத்தவன் கூறும் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்போம் வாருங்கள்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் 95:4)

 = (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2) 

மேற்படி வசனத்திலும் இறைவன் செவிப்புலனை முதன்மைப்படுத்தி இருப்பதை கவனியுங்கள். ஆம், இந்த செவிப்புலனும் பார்வைப் புலனும் நமக்கு வழங்கப்பட்டு இருப்பது முக்கியமாக இந்தக் குறுகிய வாழ்க்கை என்ற பரீட்சையை செவ்வனே நிறைவேற்றுவதற்காகவே. இந்தப் பரீட்சையின் நோக்கம் என்ன?

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இஸ்லாத்திற்கே உரிய தனித்தன்மைகள்

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் வழிமுறையே இஸ்லாம். ஏனைய மதங்களோடும் மனிதர்கள் உருவாக்கிய கொள்கைகளோடும் ஒப்பிடும்போது கீழ்கண்ட தனித்தன்மைகளை அது கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்:

1-இஸ்லாம் கடவுள் யார் என்பதற்கு எளிய மற்றும் தர்க்கரீதியான புரிதலை வழங்குகிறது - இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் கடவுள் அல்லது இறைவன் என்பவன் முழுமையானவன். - இறைவன் ஒரு மனிதரோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு கற்பனை உருவமோ சிலையோ அல்ல. மூன்றில் ஒன்றோ அல்லது ஒன்றில் மூன்றோ அல்ல. அவனது படைப்பினங்களைப் போல அல்லாமல் இறைவன் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவன். இறைவனின் இலக்கணம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்பது பொருள்) 

2. சக மனிதன் சகோதரனே தனக்கு சரி சமமே என்பதை ஆணித்தரமாக பறை சாற்றி அதை உலகளாவ நடைமுறைப்படுத்தியும் வருகிறது இஸ்லாம்.  இனம், நிறம், இடம், மொழி அடிப்படையில் பிரிந்துகிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறது இஸ்லாம்.  மனிதகுல ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் பின்னால் உள்ள உறுதியான காரணத்தை  இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளான் இறைவன்:

 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
3 -இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவனின் அனைத்து தூதர்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். யாரையும் நம் மனோ இச்சைப் படி மறுப்பதற்கு இடமில்லை. உலகிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1,24,000 இறைத்தூதர்கள் அனைவரையும் நேசிக்கிறோம். அவர்களில் யாரையும் நாம் மறுக்க முடியாது. சில மதங்களில் உள்ளதுபோல - உதாரணமாக யூதர்கள் இயேசு மற்றும் முஹம்மது நபியை நிராகரிக்கிறார்கள் - மேலும் கிறித்துவத்தில் முஹம்மது நபியை ஏற்பதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரையும் ஏற்றாக வேண்டும். அவர்களில் பாகுபாடு காட்டுதலும் கூடாது.
 (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) இறை விசுவாசிகளும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (திருக்குர்ஆன் 2:285)
4 -இஸ்லாத்தில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை -- இறைவனை நேரடியாக தொழலாம் - இடையில் ஒருவர் தேவை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
5 -ஏதேனும் தனிநபரின் பெயராலோ குழுவின் அல்லது இனத்தின் அல்லது நாட்டின் பெயராலோ அறியப்படாத மார்க்கம் இஸ்லாம். அது தன் பண்பின் பெயரால் அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான இறைவனுக்கு கீழ்படிதல் என்பதே. அவ்வாறு கீழ்படிந்து வாழ்பவரே முஸ்லிம் என்று அறியப்படுகிறார். இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் சரி... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.
6- இஸ்லாத்தில் வழிபாடு என்பது வெறும் சடங்குகளைச் சார்ந்தது அல்ல. இறைவனுக்கு விருப்பமான எந்த ஒரு செயலும் இங்கு வழிபாடே! அனைத்து நல்ல செயல்களும் வழிபாடே. புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தை கூறுதல், வாழ்க்கைத் துணையை மென்மையாக நடத்துதல், பணியாட்களிடம் பண்போடு நடத்தல் என அனைத்தும் வழிபாடே! இவை அனைத்தும் கடவுளால் பெரிதும் வெகுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அதற்கு எதிரானவை - அதாவது இறைவனுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு செயலும் பாவமே. மக்களை தவறாக நடத்துதல், ஏமாற்றுவது, பொய் சொல்வது, அவதூறு பரப்புதல், அப்பாவி மக்களை காயப்படுத்துவது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பது என அனைத்தும் பாவங்களில் சேரும்.  

  நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.( திருக்குர்ஆன் 2:177)

7. இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக இருக்கிறான். நீங்கள் எப்போதும் (மரணத்திற்கு முன்) மனந்திருந்தி உளமார மன்னிப்பு கேட்டால் அவன் உங்களை கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். பாவமன்னிப்பு கேட்டபின் மீண்டும் அந்தப் பாவத்திற்குத் திரும்பக் கூடாது. இதைத் தவிர பாவமன்னிப்புக்கு குறுக்கு வழிகள் இல்லை. இறைவனின் மன்னிப்பு பெறுவதற்காக எந்த விலையும் கொடுக்க வேண்டியதில்லை. எந்த மனிதரின் அல்லது இறைத்தூதரின் பெயரினாலோ, இரத்தத்தினாலோ இரட்சிப்பு உண்டாக வாய்ப்பில்லை என்கிறது.
8-இஸ்லாம் ஒரு வாழ்வியல் வழிமுறை - அது உங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துறையிலும் செயல்பாடுகள் ஒழுங்குள்ளதாக அமைக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் தெய்வீக வழிகாட்டல்களும் இஸ்லாத்தில் கிடைக்கின்றன.
9--இஸ்லாத்தின் ஆதார நூல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் விதமும் ஆச்சரியமானதே! வரலாற்றில் திருக்குர்ஆனைப் போல எந்த புத்தகமும் இவ்வளவு நேர்த்தியாகப் பாதுகாக்கப்படவில்லை. நபிகளாரின் காலம் தொட்டு இன்றுவரை கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டும் அடிக்கடி ஒதப்பட்டும் வரும் நூல் இதுபோல எதுவும் இல்லை. உலகம் முழுக்க அன்றுமுதல் இன்றுவரை ஒலிவடிவிலேயே சற்றும் மாற்றமில்லாமல் உலாவரும் ஒரே புத்தகமும் இதுதான்! இறைவனே இதன் பாதுகாப்பை உறுதி செய்கிறான்:
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம் (திருக்குர்ஆன் 15:9)

திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் வாழ்க்கை குறிப்புகளும் நபிமொழிகளும் அடங்கிய ஹதீஸ் தொகுப்பும் அறிவிப்பாளர் வரிசை உட்பட மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தப் பட்டு வருவதும் இஸ்லாத்தின் தனித்தன்மைகளில் ஒன்று.  

10-இஸ்லாம் மார்க்கம் ஆதாரங்கள் மற்றும் தர்க்கத்தின் (logic) அடிப்படையில் அமைந்தது. இஸ்லாம் அறிவில்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைத் தடைசெய்கிறது மற்றும் அது உண்மையை அறிய நமது பகுத்தறிவை பயன்படுத்த நம்மை அழைக்கிறது,
 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (திருக்குர்ஆன் 47:24)
11-இஸ்லாம் கற்பிக்கும் ஒழுக்க விழுமியங்கள் உயர்வானவை. நடைமுறை சாத்தியமானவை. அதனால் அவை வெற்று போதனைகளாக நில்லாமல் இஸ்லாமிய்ர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக மதுவிற்கு அடிமையாதல், கருக்கொலை, சிசுக்கொலை, வரதட்சணை, பாலியல் கொடுமைகள், ஜாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் போன்றவற்றிலிருந்து இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு பெற்றிருப்பதை இங்கு குறிப்பிடலாம்.

12 - இஸ்லாம் கூறும் சொர்க்கம் என்பது ஒரு கற்பனையோ மாயையோ அல்ல. அல்லது வெறும் ஆன்மீக ரீதியிலான அனுபவமோ அல்ல. ஒரு உண்மையான உடல்ரீதியான வாழ்க்கையைத்தான் சொர்க்கத்தில் நீங்கள் அனுபவிக்க உள்ளீர்கள். உண்ணுதல், பருகுதல், இன்னும் இன்ன பிற இன்பங்களை குறைகளற்ற முறையில் திடகாத்திரமான உடலோடு அனுபவிக்கும் இடமே சொர்க்கம்.

------------------------------ 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

புதன், 23 மார்ச், 2022

அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

 


அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

-    முஹம்மது கத்தாபி MISc.

இவ்வுலகத்தில் வாழக்கூடிய கோடான கோடி உயிரினங்களில் மனித படைப்பை இறைவன் உயர்ந்த படைப்பாக ஆக்கி இருக்கிறான்.

= மற்ற படைப்புகளைப்போல் அல்லாமல் மனித படைப்பை இறைவன் தன்  கரங்களால் படைத்து தன்னுடைய (ரூஹால்) ஆன்மாவால் உயிர்கொடுத்தான்.

= அதன் விலா எலும்பிலிருந்து அதன் துணையை படைத்து அவ்விருவரையும் சுவனத்தில் முதன்முதலாக வாழவைத்தான்.

= அனைத்து ஏனைய படைப்பினங்களின் மீதும் ஆளும் வல்லமையும் இறைவன் கொடுத்தான்!

இப்படி மனிதனுக்கு பல்வேறு விதமான உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கியதை திருமறைக் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் : 95:4)

= நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (திருக்குர்ஆன் : 17:70)

இவ்வாறான சிறப்பை ஏனைய உயிரினங்களுக்கு வழங்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

திருமணம் என்ற சிறப்பு கட்டமைப்பு

மற்ற உயிரினங்களுக்கு திருமணம் என்கின்ற கட்டமைப்பு கிடையாது ஆனால் மனித சமூகத்திற்கு மட்டுமே இந்த திருமணம் என்ற பந்தம் உள்ளது.

நாத்திகம் விளைவித்த நாசங்கள்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற அறவே நிரூபிக்கப்படாத டார்வினின் ஊக சித்தாந்தத்தை அறிவியல் சாயம் பூசி பரப்பினார்கள் நாத்திகர்கள். இன்னும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவாக மனிதனின் சிந்தனையில் ‘நீ ஒரு மிருகம். அது போல உன் மூதாதையர்களும் மிருகமே. அதனால் உனக்கென்று திருமணமோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை. உன் விருப்பம் போல யாரோடும் உறவு கொள்ளலாம். பிரியலாம்’ என்கிற சிந்தனை பொதுப்புத்தியில் புகுத்தப்பட்டது.

இவ்வாறான சிந்தனையின் மூலம் மனிதனுக்குள் மிருகத்தனமான சிந்தனைகள் வருவது இயல்பானது. உணவு தேவைகளை நிறைவேற்றுவதிலும் பாலியல் தேவைகளை அடைவதிலும் மிருகங்கள் எவ்வாறு அடைகின்றன அவ்வாறே மனித சிந்தனையும் இருக்கும். இந்த மிருகத்தனமான சிந்தனை விளைவித்து வரும் நாசங்களைத்தான் இன்று கண்டு வருகிறீர்கள்.. கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள், பாலியல் வன்கொடுமைகள், காதலித்துக் காமப் பசியாறிவிட்டு காணாமல் போகும் காமுகர்கள், கருக்கொலைகள், சிசுக்கொலைகள், கள்ளக்காதல் விபரீதங்கள், தந்தைகளற்ற பிள்ளைகள் என கணக்கில்லாத சீர்கேடுகளை இந்த “மிருக சிந்தனை” விளைவித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.   

கண்ணியமிக்க படைப்பினத்துக்கு நேர்ந்த இழிவு:

மனிதனை உயர்ந்த கண்ணியமிக்க அழகிய படைப்பாக படைத்தவன் அவனிடமிருந்து உயர்ந்த நெறிகளையும் பண்புகளையும் செயல்களையும் எதிர்பார்க்கிறான். அதற்காகவே தன் வேதங்களையும் தூதர்களையும் அவ்வப்போது மனிதர்களுக்கு அனுப்பிவைத்தான். அந்த வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் ‘மனிதர்களே  நீங்கள் உயர்ந்த படைப்பினம். உங்கள் கண்ணியத்தை இழந்து விடாதீர்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்’ என்பதை மீண்டும் மீண்டும் இறைவன் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளான்.

இதற்கு மாற்றமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் ஊக சித்தாந்தம் உண்மையில் மனிதனை ஒரு தாழ்வான எண்ணத்திற்கு அவனை அழைத்துச் செல்கின்றது. அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் இறைவனையும் மறுமையையும் ஏற்காத சமூகங்களில் கண்டு வருகிறோம். அடிப்படையில் எண்ணங்களே நம்மை வாழ வைக்கின்றன. எண்ணங்களே நம்மை உயர்த்தவும் செய்கின்றன தாழ்த்தவும் செய்கின்றன. தாழ்ந்த எண்ணங்கள் தவிர்த்து உயர்ந்த எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் ஆணித்தரமாக அவன் படைப்பின் துவக்கத்தை நினைவூட்டி புரியவைக்கிறது.

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில் மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (திருக்குர்ஆன் 95:4-6)

இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் இறைவனுடைய வார்த்தைகளான இறை வேதத்தை ஏற்று கட்டுப்படக்கூடிய மனிதர்களாக  வாழ்வோர் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கும் நல்ல சிந்தனைகளையும் உயர்ந்த நெறிகளையும் விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட இறைசிந்தனை ஏற்று வாழ்வதே இவ்வுலகத்தின் உயர்ந்த பண்பாட்டுக்கு வித்திடும். இதனடிப்படையில் செயல்படுவோர் மறுமையில் உயர்வான சொர்க்கத்தை அடைகிறார்கள்.

==================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?


செவ்வாய், 15 மார்ச், 2022

ஹிஜாபிற்கு மீள்வோம் சொர்க்கம் செல்வோம்!


நமது ஆதித் தந்தையும் ஆதித் தாயுமான ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியினர் இங்கு பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கு சொர்க்கத்தின் அருமையை உணராத காரணத்தினாலும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான காரணத்தினாலும் அவர்கள் அங்கு இறைகட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். அதன் காரணமாக அங்கு இறைவன் அவர்களுக்கு இயற்கையாக அமைத்திருந்த ஆடையைக் களையும் நிலை உண்டானது. அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பூமியில் குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர்தான் நாம்.

= நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லைஅவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்துஎம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! (திருக்குர்ஆன் 2:38,39)

அதாவது இந்த பூமி வாழ்க்கையை ஒரு குறுகிய பரீட்சை போன்றதாக இறைவன் அமைத்துள்ளான். இதில் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் மறுமை வாழ்வில் சொர்க்கம் கிடைக்க உள்ளது. ஆனால் யார் ஷைத்தானின் தூண்டுதல்களுக்கு ஆளாகி இறைகட்டளைகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மாறாக நரகமே அவர்களின் புகலிடமாக அமைகிறது.

ஆடை ஒழுக்கம் பேணுவோம்

= ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோமேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும்அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாகஇறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.  (திருக்குர்ஆன் 7:27) 

எனவே நாம் இந்த வாழ்க்கை என்ற பரீட்சையை வென்று மறுமையில் சொர்க்கம் செல்லவேண்டுமானால் ஆடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளைப் பேணுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மேற்படி வசனத்தில் இருந்து அறியலாம்.

செவ்வாய், 1 மார்ச், 2022

ஹிஜாப்- சமூகத்தின் பாதுகாப்புக்கும் அரண்!

 


 - அந்நியனின் கருவை அநியாயமாக கற்பத்தில் சுமந்தார்கள் அந்த அபலைகள்...

- சுமந்த கருவை கொன்றொழிக்க மருத்துவமனைகளுக்கு இரகசியமாகச் சென்றார்கள்..

- அனுபவித்த வேதனைகளை உள்ளுக்குள் புதைத்து மூடினார்கள்..
- அரவணைத்திருந்த பெற்றோர்கள் அவர்களை வீடுகளை விட்டுத் துரத்தினார்கள்...
- கருவைப் புதைத்த காமுகர்கள் காணாத தூரம் போனார்கள்...
- அனைத்தையும் மீறிப் பிறந்தவற்றை தந்தைகளின்றி வளர்க்கும் நிலைக்கு ஆளானார்கள்...
- உடல் ரீதியாக அனுபவிக்கும் வலிகளுக்கும் மன உளைச்சலுக்கும் அப்பால் சமூகத்தின் ஏச்சும் பேச்சும், அவமானமும் இவர்களை அலைகழித்தது. ...
- மன உளைச்சல், கண்ணீர், விரக்தி, நிராசை, தற்கொலை என அனைத்தும் அரங்கேறின...

இன்னும் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன...
(தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக (NCRB) அறிக்கைப் படி 2020 ஆம் ஆண்டு காதல் தோல்வி காரணமாக காவல் நிலையங்களில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 6734. ஆனால் பதிவாகாதவை இதைவிட ஆறுமடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். ஆக வருடம் ஒன்றுக்கு 40000 தற்கொலைகள் இவ்வாறு நடக்கின்றன என்பது புலனாகிறது.)

எல்லாம் எதனால்?
= பெண்களின் உடலை விளம்பர மற்றும் வியாபாரச் சரக்காக பாவித்து தங்கள் சுயநல லாபங்களை ஈட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கும்பல்கள் ஒருபுறம்..
= முற்போக்கு, பெண்விடுதலை, பெண்ணியம் என்ற பெயரில் பெண்ணின் ஆரோக்கியமான இயற்கையை - நாணத்தை, வெட்க உணர்வை, மென்மையைக் களைந்து இயந்திர மயமாக்கி அவளை ஆண்களோடு தாராளமாக கலக்கவைக்கும் வஞ்சகம் ஒருபுறம்.
= ஆடைகளைக் குறைப்பதுதான் அல்லது அறவே களைவதுதான் பெண்விடுதலை அல்லது பெண்களின் முன்னேற்றம் என்று கட்டமைக்கப்படும் மாயை ஒருபுறம்..
= அதன் காரணமாக ஆபாசத்தையும் “கலாச்சார முன்னேற்றம்” என சித்தரிக்கும் ஊடகவஞ்சனை ஒருபுறம்..
= பெண்ணின் ஆளுமைக்கு அடையாளம் கவர்ச்சிகரமான ஆடையிலும் உதட்டுச்சாயத்திலும் அழகு சாதனங்களின் பயன்பாட்டிலும்தான் உள்ளது என்ற சபலமூட்டும் விளம்பர உத்திகள் ஒருபுறம்..
= இன்னும் இவைபோன்ற பல சதிவலைகளுக்கு நடுவே பயணிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு உட்படுத்தப் படுகிறது பெண்ணினம்.
முழு சமூகத்துக்கும் பாதிப்பு:
இவ்வாறு தங்களைச் சுற்றி வஞ்சக வலைகள் சூழ்ந்திருக்கும் நிலையில் கல்விக்காகவும், தொழிலுக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் வெளியே வரும்போது ஆணாதிக்க சக்திகளின் வஞ்சக வலைக்குள் விழுந்து தங்கள் கற்பையும் நிம்மதியையும் வாழ்க்கையையும் தொலைத்து நிற்கிறார்கள் அந்த அபலைகள்! இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல.. மாறாக அந்த அபலைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், கணவர்கள், பிள்ளைகள், உறவினர் என சமூகம் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

#ஹிஜாப்_பாதுகாப்புக்கவசம்
பெண்ணை இந்த ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து காப்பாற்ற அவளைப் படைத்த அவளது உணர்வுகளை நன்கறிந்த அவளது நலனில் பேரார்வம் கொண்ட அவளது இரட்சகன் அவளுக்கு பரிந்துரைக்கும் பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம்!
#பெண்மையின்_புனிதம்:
மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நன்மை, தீமை, நியாயம், அநியாயம், சக மனிதர்களோடு கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற பலவும் அங்கு கற்பிக்கப்பட்டால்தான் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள். இங்கு தந்தையை விட தாயின் தாக்கமே மிக அதிகம் என்பதை நாம் அறிவோம். இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில் இருந்து அவள் திசைதிருப்பப்பட்டால் அங்கு நடைபெறும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மேலும் சமூகத்தில் ஆண் பெண் இரு பாலாரும் கல்வி, தொழில், வணிகம் போன்ற விடயங்களில் அன்றாடம் கலந்துறவாடுவது என்பது தவிர்க்க முடியாததாகும். அப்போது அவர்களுக்கு இடையே அமைந்த பரஸ்பர கவர்ச்சி அவர்களின் செயல்பாட்டில் இருந்து திசை திருப்பாமல் இருப்பது முக்கியமாகும். இவைபோன்ற பல விடயங்களையும் கருத்திற்கொண்டே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

#ஹிஜாப்_என்றால்_என்ன? #ஹிஜாப்_ஏன்?
தாய்மை என்ற உலகிலேயே உயர்ந்த விலைமதிக்கமுடியாத பதவியை அவளுக்கு வழங்குவதற்காகவும் அப்பதவியை அவள் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவும் அதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை சமைத்திடவும் அடித்தளமிடுவதே ஹிஜாப்!
ஹிஜாப் என்னும் அரபிச் சொல்லுக்கு திரை, தடுப்பு என்று பொருள்படும். ஹிஜாப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது...
' (நபியே ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக )வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தமது முக்காடுகளை (நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்துக்) கொள்ளட்டும்'(அல்குர்ஆன் 24:31)

மேலும் ஒரு வசனத்தில் குறிப்பிடும் போது...
'நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக !அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும் (அல்குர்ஆன் 33.59)

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கு ஏற்றவாறு அந்நிய ஆண்கள் அல்லது பெண்களின் முன்னிலையில் வரும்போது கட்டாயமாக மறைக்கவேண்டிய உடலின் பகுதிகளை வரையறை இட்டுக் கூறுகிறது இஸ்லாம். ஆண்களைப் பொறுத்தவரை மறைக்க வேண்டிய பகுதி முழங்காலுக்கும் தொப்பிளுக்கும் இடைப்பட்ட அனைத்தும் ஆகும். பெண்களுக்கு அது முகமும் முன்கையும் தவிர உள்ள அனைத்தும் ஆடைகொண்டு மறைக்கப்பட வேண்டியதாகும்.

#ஹிஜாப்_பெண்ணடிமைத்தனமா?
பெண்ணுக்கு கண்ணியத்தை கொடுப்பதற்கு இறைவன் பரிந்துரைத்த இந்த உயர்ந்த ஆடை ஒழுக்கத்தைத்தான் சிந்திக்காதவர்கள் பெண்ணடிமைத்தனம் என்று விமர்சித்தார்கள். உண்மைதான் என்ன?
தாய்மை என்ற பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்று முடக்கிப் போடவில்லை இஸ்லாம். கல்வி, தொழில், சம்பாதித்தல் போன்ற அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு முறைப்படி வழங்கி அவற்றை பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் ஹிஜாப் என்பதை சிந்திப்போர் யாரும் அறியலாம். பெண்ணின் உடலழகும் கவர்ச்சியும் அவளுக்கு எதிரியாக மாறாமல் இருக்க ஹிஜாப்தான் பாதுகாப்புக் கவசம்.

பெண்ணுக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு முழு சமூகத்தையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது என்பதை சிந்திப்போர் அறியலாம்!
"நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக !அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும்" (அல்குர்ஆன் 33.59)

சமூகத்தின் பாதுகாப்பு என்ற பொறுப்புணர்வு

இனி ஹிஜாப் தேவையில்லை, ஆடை அணிவதும் அரைகுறையாக அணிவதும் அல்லது அறவே அணியாது இருப்பதும் அவரவர் உரிமை அல்லது விருப்பம் என்ற கருத்து கொண்டவர்களுக்கு பொது சமூகத்தின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள்.. பெண்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும்போது பொது இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது. தொடர்ந்து சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன. இந்த சீர்கேடுகளுக்கு நீங்களும் காரணமாகிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மேலும் இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்விலக்கல்களை பேணியே ஆகவேண்டும். இறுதித்தீர்ப்பு நாளன்று நாம் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட உள்ளோம்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

நீங்கள் கேட்கக் கூடும். யார் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்று. உண்மையில் நீங்கள் உங்கள் முகத்தில் தாங்கி நிற்கும் இரு கண்களும் CCTV போன்றவை என்பதை மறந்து விடாதீர்கள். இதோ இறைவனே கேட்கிறான் பாருங்கள்:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.

= .....அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)

கட்டுப்பாடுகள் உங்களின் நன்மைக்கே!

ஆம் சகோதர சகோதரிகளே, மேற்கூறப்பட்டவை மனித வார்த்தைகளோ ஊகங்களோ அல்ல. இவ்வுலகைப் படைத்தவனின் மறுக்க முடியாத வார்த்தைகள். நாளை நடக்க இருப்பவற்றை இங்கேயே எச்சரிக்கிறான். சமூக நலன் கருதியே அவன் நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். அவற்றைப் பேணி வாழ்ந்தால் இங்கு நமது தனி நபர் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் அமைதி மிக்கதாக மாறும். அந்த கட்டுப்பாடுகளைப் பேணி வாழும்போது ஒரு சில மன இச்சைகளைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அல்லவா தயார் செய்து வைத்துள்ளான்.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் மறுப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் இறைவனுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்ஆன் 4:170)
================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
நாம் ஏன் பிறந்தோம்?