இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இஸ்லாத்திற்கே உரிய தனித்தன்மைகள்

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவன் வகுத்து வழங்கும் வாழ்வியல் வழிமுறையே இஸ்லாம். ஏனைய மதங்களோடும் மனிதர்கள் உருவாக்கிய கொள்கைகளோடும் ஒப்பிடும்போது கீழ்கண்ட தனித்தன்மைகளை அது கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்:

1-இஸ்லாம் கடவுள் யார் என்பதற்கு எளிய மற்றும் தர்க்கரீதியான புரிதலை வழங்குகிறது - இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் கடவுள் அல்லது இறைவன் என்பவன் முழுமையானவன். - இறைவன் ஒரு மனிதரோ அல்லது மனிதனின் மகனோ அல்லது ஒரு கற்பனை உருவமோ சிலையோ அல்ல. மூன்றில் ஒன்றோ அல்லது ஒன்றில் மூன்றோ அல்ல. அவனது படைப்பினங்களைப் போல அல்லாமல் இறைவன் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவன். இறைவனின் இலக்கணம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரேஇறைவன் என்பது பொருள்) 

2. சக மனிதன் சகோதரனே தனக்கு சரி சமமே என்பதை ஆணித்தரமாக பறை சாற்றி அதை உலகளாவ நடைமுறைப்படுத்தியும் வருகிறது இஸ்லாம்.  இனம், நிறம், இடம், மொழி அடிப்படையில் பிரிந்துகிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறது இஸ்லாம்.  மனிதகுல ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் பின்னால் உள்ள உறுதியான காரணத்தை  இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளான் இறைவன்:

 மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
3 -இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவனின் அனைத்து தூதர்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். யாரையும் நம் மனோ இச்சைப் படி மறுப்பதற்கு இடமில்லை. உலகிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1,24,000 இறைத்தூதர்கள் அனைவரையும் நேசிக்கிறோம். அவர்களில் யாரையும் நாம் மறுக்க முடியாது. சில மதங்களில் உள்ளதுபோல - உதாரணமாக யூதர்கள் இயேசு மற்றும் முஹம்மது நபியை நிராகரிக்கிறார்கள் - மேலும் கிறித்துவத்தில் முஹம்மது நபியை ஏற்பதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரையும் ஏற்றாக வேண்டும். அவர்களில் பாகுபாடு காட்டுதலும் கூடாது.
 (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) இறை விசுவாசிகளும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (திருக்குர்ஆன் 2:285)
4 -இஸ்லாத்தில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை -- இறைவனை நேரடியாக தொழலாம் - இடையில் ஒருவர் தேவை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
5 -ஏதேனும் தனிநபரின் பெயராலோ குழுவின் அல்லது இனத்தின் அல்லது நாட்டின் பெயராலோ அறியப்படாத மார்க்கம் இஸ்லாம். அது தன் பண்பின் பெயரால் அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் உண்மையான இறைவனுக்கு கீழ்படிதல் என்பதே. அவ்வாறு கீழ்படிந்து வாழ்பவரே முஸ்லிம் என்று அறியப்படுகிறார். இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் சரி... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.
6- இஸ்லாத்தில் வழிபாடு என்பது வெறும் சடங்குகளைச் சார்ந்தது அல்ல. இறைவனுக்கு விருப்பமான எந்த ஒரு செயலும் இங்கு வழிபாடே! அனைத்து நல்ல செயல்களும் வழிபாடே. புன்னகை, வேலையில் அல்லது வியாபாரத்தில் நேர்மையாக இருத்தல், நல்ல வார்த்தை கூறுதல், வாழ்க்கைத் துணையை மென்மையாக நடத்துதல், பணியாட்களிடம் பண்போடு நடத்தல் என அனைத்தும் வழிபாடே! இவை அனைத்தும் கடவுளால் பெரிதும் வெகுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அதற்கு எதிரானவை - அதாவது இறைவனுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு செயலும் பாவமே. மக்களை தவறாக நடத்துதல், ஏமாற்றுவது, பொய் சொல்வது, அவதூறு பரப்புதல், அப்பாவி மக்களை காயப்படுத்துவது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பது என அனைத்தும் பாவங்களில் சேரும்.  

  நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.( திருக்குர்ஆன் 2:177)

7. இறைவன் எப்போதும் மன்னிப்பவனாக இருக்கிறான். நீங்கள் எப்போதும் (மரணத்திற்கு முன்) மனந்திருந்தி உளமார மன்னிப்பு கேட்டால் அவன் உங்களை கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். பாவமன்னிப்பு கேட்டபின் மீண்டும் அந்தப் பாவத்திற்குத் திரும்பக் கூடாது. இதைத் தவிர பாவமன்னிப்புக்கு குறுக்கு வழிகள் இல்லை. இறைவனின் மன்னிப்பு பெறுவதற்காக எந்த விலையும் கொடுக்க வேண்டியதில்லை. எந்த மனிதரின் அல்லது இறைத்தூதரின் பெயரினாலோ, இரத்தத்தினாலோ இரட்சிப்பு உண்டாக வாய்ப்பில்லை என்கிறது.
8-இஸ்லாம் ஒரு வாழ்வியல் வழிமுறை - அது உங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துறையிலும் செயல்பாடுகள் ஒழுங்குள்ளதாக அமைக்க உதவுகிறது. உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் தெய்வீக வழிகாட்டல்களும் இஸ்லாத்தில் கிடைக்கின்றன.
9--இஸ்லாத்தின் ஆதார நூல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் விதமும் ஆச்சரியமானதே! வரலாற்றில் திருக்குர்ஆனைப் போல எந்த புத்தகமும் இவ்வளவு நேர்த்தியாகப் பாதுகாக்கப்படவில்லை. நபிகளாரின் காலம் தொட்டு இன்றுவரை கோடிக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்டும் அடிக்கடி ஒதப்பட்டும் வரும் நூல் இதுபோல எதுவும் இல்லை. உலகம் முழுக்க அன்றுமுதல் இன்றுவரை ஒலிவடிவிலேயே சற்றும் மாற்றமில்லாமல் உலாவரும் ஒரே புத்தகமும் இதுதான்! இறைவனே இதன் பாதுகாப்பை உறுதி செய்கிறான்:
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம் (திருக்குர்ஆன் 15:9)

திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் வாழ்க்கை குறிப்புகளும் நபிமொழிகளும் அடங்கிய ஹதீஸ் தொகுப்பும் அறிவிப்பாளர் வரிசை உட்பட மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தப் பட்டு வருவதும் இஸ்லாத்தின் தனித்தன்மைகளில் ஒன்று.  

10-இஸ்லாம் மார்க்கம் ஆதாரங்கள் மற்றும் தர்க்கத்தின் (logic) அடிப்படையில் அமைந்தது. இஸ்லாம் அறிவில்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைத் தடைசெய்கிறது மற்றும் அது உண்மையை அறிய நமது பகுத்தறிவை பயன்படுத்த நம்மை அழைக்கிறது,
 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (திருக்குர்ஆன் 47:24)
11-இஸ்லாம் கற்பிக்கும் ஒழுக்க விழுமியங்கள் உயர்வானவை. நடைமுறை சாத்தியமானவை. அதனால் அவை வெற்று போதனைகளாக நில்லாமல் இஸ்லாமிய்ர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக மதுவிற்கு அடிமையாதல், கருக்கொலை, சிசுக்கொலை, வரதட்சணை, பாலியல் கொடுமைகள், ஜாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் போன்றவற்றிலிருந்து இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு பெற்றிருப்பதை இங்கு குறிப்பிடலாம்.

12 - இஸ்லாம் கூறும் சொர்க்கம் என்பது ஒரு கற்பனையோ மாயையோ அல்ல. அல்லது வெறும் ஆன்மீக ரீதியிலான அனுபவமோ அல்ல. ஒரு உண்மையான உடல்ரீதியான வாழ்க்கையைத்தான் சொர்க்கத்தில் நீங்கள் அனுபவிக்க உள்ளீர்கள். உண்ணுதல், பருகுதல், இன்னும் இன்ன பிற இன்பங்களை குறைகளற்ற முறையில் திடகாத்திரமான உடலோடு அனுபவிக்கும் இடமே சொர்க்கம்.

------------------------------ 

அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக