இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 மார்ச், 2017

உங்கள் விசாலமான முகவரி

Image result for video icon 
வாழ்க்கைப் பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள் உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின் பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே?
உதாரணத்துக்கு இதுதான் உங்கள் முகவரி..
ராஜா, 13, சந்நிதி தெரு, கருமத்தம்பட்டி, கோவை 641659, தமிழ்நாடு
அதே சமயம் முகவரியைக் கேட்டவர் இன்னொரு நாட்டிலேருந்து கேட்டால் கூடுதலாக  இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான் நாமறிந்தது. அதை மீறி நம்மில் பெரும்பாலோரது கவனம் செல்வதில்லை. 
உண்மையில் இவ்வளவுதான் நம் முகவரியா? நம் முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா?
நமது முகவரியின் விசாலத்தைப் பற்றிய அறியாமையும் கவனமின்மையும் மனிதனை குறுகிய சிந்தையுள்ளவனாக ஆக்குகிறது. நம்மைப் படைத்தவனின் உள்ளமையையும் வல்லமையையும் பறைசாற்றும் சான்றுகளின்பால் கவனத்தை செலுத்தினாலே மனிதனின் அகங்காரமும் அகந்தையும் அறியாமையும் அகலும். இறைவனுக்கு தன் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவனை ஆட்கொள்ளும்.
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்று கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 3:190,191) 
வாருங்கள் நம் முகவரி இன்னும் எவ்வளவு விசாலமானது என்பதைக் கண்டுவர முயல்வோம்...
பூமி என்ற உருண்டை
இந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து தொடர்வது.. ஆசியாக் கண்டம்... தொடர்ந்து  இந்த பூமி என்ற உருண்டை. பாமரர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் இதை கற்பனை செய்து கூட  பார்க்க முடிவதில்லை.
இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது.
சூரியக் குடும்பம்
அடுத்து நம் முகவரியில் தொடர்வது நம் சூரிய குடும்பம். சூரிய குடும்பம் என்பது சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தையும் அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும். நம்முடைய சூரிய  குடும்பத்தில்  சூரியன் நமது  நட்சத்திரமாக உள்ளது - 8 கிரகங்களும், அதனதன்  துணைக்கோள்களும் , குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும் எரிகற்களும்   மற்றும் Comets எனும்  வால் நட்சத்திரங்களும்  மற்றும் Meteoroids எனப்படும் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. (சூரியன் என்பது நாம் விண்ணில் காணும் நட்சத்திரங்களில் ஒன்றுதான். நமக்கு அருகாமையில் உள்ளதால் அது நமக்கு பெரிதாகத் தெரிகிறது.) மேற்கண்ட படத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாகத் தென்படும் பட்டாணி போன்ற உருவமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.
ஒளியாண்டு
நம் சூரியனுக்கு அடுத்தது என்ன என்பதை அறியும் முன் ஒளியாண்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.  (நமக்குத் தெரியும் 1 கி.மீ. – 1,000 மீட்டர்)
விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி என்று  சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ஒளி ஆண்டுஎன்ற அளவையை பயன்படுத்துகிறார்கள்.
ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்  ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ). அப்படியென்றால் ஒரு  வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12) கிமீ.  இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒருஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)

= நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood). ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) தான்  சூரியனிலிருந்து அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள். அதாவது இந்த ஆல்பா நட்சத்திரத்திலிருந்து புறப்படும் வெளிச்சம் நமது பூமிக்கு வந்து நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றால் 4 வருடம் 3 மாதம் ஆகும். நாம் இங்கு காணும் அந்த  நட்சத்திரத்தின் ஒளி 4.24 வருடத்திற்கு முன் புறப்பட்ட ஒன்றுதான். (சூரியனிலிருந்து வரும் ஒளி நம் பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது. நமக்கும் சூரியனுக்கும் 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)
பால்வெளி அண்டம் (Milky Way galaxy) விண்மீன் திரள் 
நம் சூரியன் போல 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதுதான்  நமது அடுத்த பெரிய குடும்பம். இதையே  “பால்வெளி அண்டம் ” (Milky Way galaxy) என்று அழைக்கிறோம்.  இக்குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை பரவி இருக்கின்றன. 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் நம் சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சிறு புள்ளிதான் நம் கிழக்கே உதிக்கும் சூரியன். அதற்க்குள்தான் நாம் வாழும் இப்பூவுலகும்! உங்கள் முகவரி எப்படி விரிவாகி உள்ளது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்!
பால்வெளி அண்டத்தில் பூமியும் சூரியனும் கேனிஸ் மஜோரிசும்
= இந்த சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த மையத்தை ஒரு முறை நம் சூரியன் குடும்பம் சுற்றிவர 25 கோடி வருடங்கள் ஆகும்!
= பால்வெளி அண்டத்தில் உள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று  V Y Canis Majoris. நம் பூமியில் இருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரியனைவிடப் பன்மடங்கு பெரியது.
= நம் பூமியின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர்.
= நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீச்சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.
= ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர்!
பால்வெளி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)
= நம் குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள்களை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group”
= நமது பால்வெளி திரள் தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் திரள் குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் திரள் அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. நமது பால்வெளி அண்டத்தைவிட அண்ட்ரோமேடாமிகப்பெரியது.
=  நமது பால்வெளி அண்டத்தின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)
= அண்ட்ரோமேடா விண்மீன் திரளின் குறுக்களவு 25 லட்சம்  ஒளி ஆண்டுகள் தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி. (1 ட்ரில்லியன்)
விர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)
= சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம் பால்வெளி அண்டம் போல உள்ள 100 விண்மீன் திரள்களின் தொகுப்பே விர்கோ அண்டங்களின் தொகுப்பு.
= இந்த இரண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பின் பெயர் அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு (Local Super Clusters)
= இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு. (Observable Universe) 9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.
= இவ்வளவு அண்டங்களின் தொகுப்பும் (Observable Universe) ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா? வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே. முழுமையாக ஒரு சதவீதம் கூட இல்லை.  அண்டங்களுக்கிடையேயான வாயு வெற்றிடம் வெளி   3.6 சதவீதமாகும். மீதி 96 சதவீதமும் அறிவியல் அறிவுக்குத் தட்டுப்படாத கரும்பொருளும் (23%dark matter) கருஞ்சக்தியும் (73% dark energy) ஆகும்.
இவ்வ்வளவும் மனிதன்  என்ற அற்ப ஜீவியின் பார்வைக்கு எட்டிய பிரபஞ்சத்தின் நிலை! இந்த அறிவியலின் அறிவுக்கு எட்டிய  அண்டங்களின் தொகுப்பானது (Observable universe) இறைவன் தன் திருமறையில் கூறும் முதல் வானத்தின் எல்லைக்குள் மிக மிக அற்பமான ஒன்று. இதற்கப்பாலும் வானங்கள் இருப்பதாக இறைவன் கூறுகிறான்:
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்!  ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

இந்த வீடியோவில் இருந்து எவ்வளவு விசாலமானது உங்கள் முகவரி என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்களோ உங்கள் கருமத்தம்பட்டிதான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்! இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன்! அவன் நம்மை வீணுக்காகப் படைத்திருப்பானா?
51:47. நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம்  மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கின்றோம்.
இறைவனை மறுக்கும் நாத்திகர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது:
52:35. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா?
52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை!
மறுமையில் மனிதனை இறைவன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள். 

ஆறடி மனிதா உன் விலையென்ன?

 அமெரிக்க நகரம் ஒன்றில் அன்று ஒரு கருத்தரங்கு...

 “தூய்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்க இறைவன், மதம் ஆகியவற்றின் அவசியம்என்னும் தலைப்பில் ஒரு பாதிரியார் மாணவர்களிடம் உரையற்றிக் கொண்டிருந்தார்.

IAS officer caught taking Rs 12 lakh bribe in Thaneதுடிப்புள்ள ஒரு மாணவன் எழுந்து பின்வரும் கேள்வியை வீசினான், “ஐயா, நான் மதச்சார்பற்ற மனிதத்தன்மைஎனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். மனித குலத்துக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். எல்லா விதமான தீமைகளிருந்தும் விலகி நிற்கின்றேன்; எவருக்கும் தொல்லை கொடுபதில்லை; யாரையும் மோசடி செய்வதில்லை; பொய்யுரைபதில்லை; திருடுவதில்லை; இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன், பலவீனமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேன், சுருக்கமாகக் கூறினால் நன்மையை விரும்புகிறேன்; தீமையை வெறுக்கிறேன்; நற்செயல்களைப் புரிய, தீமைகளைத் தடுக்க, மனிதர்களிடம் உயர்ந்த பண்புகளை தோற்றுவிக்க, ஒரு சிறந்த தூய்மையான சமுதாயத்தை உருவாக்க என்னுடைய நடைமுறையும், கொள்கையும் போதுமானவையாகும். இதற்காகக் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

மாணவனின் இக்கேள்விக்கு பாதிரியார் பல பதில்கள் தந்தார். இறைவன் இருக்கிறான் என்பதைப் பற்றியும், அவன் மீது திடமான நம்பிக்கை கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பல ஆதாரங்களை எடுத்துரைத்தார். ஆயினும் பாதிரியார் கூறிய பின்வரும் உவமானம் மிகவும் சிந்தனைக்குரியதாக அமைந்தது:  

இரண்டாம் உலகப் போரின்போது பனாமாக் கால்வாயின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்குப் பருத்தி போககூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. அங்கு சாவடிகளையும் அமைத்து, இந்தத் தடையை யாரும் மீறாதிருக்க அதிகாரிகளையும் நியமித்திருந்தது.

வடபகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த பருத்தி தடை செய்யப்பட்டு விட்டதால் , தென்பகுதியில் பருத்தியின் விலை கிடுகிடுவென பலமடங்கு உயர்ந்து விட்டது. பனாமாக் கால்வாயின் இருபகுதியுலும் பருத்தியின் விலையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதைப் பார்த்த சில வியாபாரிகளுக்கு பேராசை உண்டாயிற்று. ‘திருட்டுத்தனமாகப் பருத்தியைப் பனாமாக் கால்வாய் வழியாக கடத்திச் செல்லலாம்; அரசு அதிகாரிகள் பிடித்தால் இலஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்’ என்று அவ்வியாபாரிகள் திட்டமிட்டனர்.

திட்டத்தின்படி வியாபாரிகளின் ஒரு குழு படகில் பருத்தியை ஏற்றிக்கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றது. இந்தக் குழு சோதனைச் சாவடியை நெருங்கியது, அதிகாரிகளிடம் பேசி விவகாரத்தை முடித்துக் கொள்ள சாவடிக்குள் வியாபாரிகள் சென்றனர்.

அப்பொழுது அங்கு நியமிக்கப்படிருந்த அதிகாரி மிகவும் நேர்மையானவர்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்; வாய்மையுடன் சட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்; அதை நடைமுறையுலும் பின்பற்றுபவர்.

வியாபாரிகள் அவரைச் சந்தித்து நாங்கள் இவ்வழியில் தடை விதித்திருப்பதை அறியாமல் பருத்தியைக் கொண்டுவந்து விட்டோம்; இதை எடுத்துச் செல்ல அனுமதி தாருங்கள்என்று கெஞ்சினார்கள்.

கண்டிப்பாக அனுமதியளிக்க முடியாது!என்று அதிகாரி பதில் கூறிவிட்டார் .

பிறகு அவர்கள் அதிகாரிக்கு ஏதேனும்தருவதாக ஆசைகாட்டினார்கள். ஆனால் தங்களின் இம்முயற்சிகள் பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர்கள் பேரம் பேசத் தொடங்கினார்கள். ஏலத்தில் விலை குறிப்பதைப் போல அவர்கள் படிப்படியாக பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.

பேரம் மேலும் சூடு பிடித்தது. 6000,  10,000,  20,000,  40,000  என்று பேரம் தொடர்ந்தது. அதிகாரி கண்டிப்பு காட்டக் காட்ட , ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பேரம் ஏறிக் கொண்டே சென்றது . 5௦,௦௦௦ டாலர்கள் தருகிறோம் என்றார்கள். வியாபாரி ஒருவர் துணிந்து, ஒரு இலட்சம் டாலர் தருவதாக ஒரேயடியாகத் தாவி விட்டார் .

மனப்போராட்டம்
இதைக் கேட்டதும் சுங்க அதிகாரியின் உணர்ச்சிகள் பொங்கின; பலவிதமான சிந்தனைகள் அவர் உள்ளத்தில் உதித்தன . வாழ்நாள் முழுவதும் நேர்மையில் நிலைதிருந்தாய்; சட்டத்துக்கு உட்பட்டிருந்தாய்! இன்று அந்தத் தூய வழிமுறையைக் கைவிட்டு விடப் போகிறாயா?” என்று அவர் மனசாட்சி இடித்துரைத்தது.

இன்று உன்னுடைய ஊதியம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்! இப்பொழுது உன்னை எந்த மேலதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார்? “சரிஎன்று ஒரு வார்த்தை சொல்லி இலட்சம் டாலர்களின் உரிமையாளனாக மாறி விடு. அது மட்டுமல்ல , நாளை மேலும் பல வாய்புகள் வரலாம். உன்னுடைய கையில் மேலும் செல்வம் குவிந்து கொண்டே வரும்! அந்தச் செல்வமோ மிக அதிகமாகும். கற்பனையிலும் நினைத்துக்கூடப்  பார்க்க முடியாத அளவுக்கு செல்வம் உன் காலடியில் வந்து விழும். உன் வாழ்நாள் முழுவதும் நீ சம்பாதிக்கும் வருமானத்தை விட, பல மடங்கு அதிகமான இந்தத் தொகையைச் சில வினாடிகளில், சில நாட்களில் நீ அடைந்து விடலாம். வறட்டுத் தத்துவத்தில் உழலாதே; இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடாதே!என்று பல ஆசைகளைக் காட்டி அவருடைய மன இச்சைகளும் ஷைத்தானும் அவரை மயக்கி மறுதிசையில் இழுத்தன.

இவ்வாறு மனசாட்சிக்கும் மன இச்சைக்கும் இடையில் அவரின் உள்ளத்தில் கடும் போர் நிகழ்ந்தது. அவருடைய மூச்சு திணறத் தொடங்கியது. பாவிகளே, நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதேஎன்று முழங்கிக் கொண்டே  வியாபாரிகளை அறையிலிருந்து  வெளியே தள்ளிக் கதவுகளை ஓங்கி அடைத்துவிட்டார் அந்த அதிகாரி.

இதைச் சொல்லிய பாதிரியார் , மதசார்பற்ற மனிதத்தன்மையில் நம்பிக்கை கொண்டு கேள்வி கேட்ட அந்த மாணவரை நோக்கிப் பின்வருமாறு கூறினார் :

“நேர்மையான , சட்டத்துக்குட்பட்ட அதிகாரியின் நாவு முழங்கிய வாக்கியங்களைக் கவனித்தீர்களா? ‘ நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே’.

மனிதன் எத்துணை வாய்மையான பண்புகளைக் கொண்டவனாயிருந்தாலும் சரியே – ஓர் எல்லையைக் கடக்கும் போது அவனுக்கும் ஒரு விலைஏற்படுகிறது. குறிப்பாக கொடுக்கப்படும் விலை அவனுடைய தகுதிக்கு அதிகமாக இருந்தால் அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் புயல் தோன்றுகிறது; மயக்கத்தினால் தலைசுற்றித் தொடங்குகிறது. இதற்கு நேர்மாறாக, இறைவன் மீது திடமான நம்பிக்கை கொண்டபின், இறை உவப்பைப் பெறுவதே தனக்குரிய விலை என்று மனிதன் கண்டு கொண்டுவிட்டால் படைத்தவனைத் தவிர படைப்பினங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து முயன்றாலும் இந்த விலையை வழங்க முடியாது. எனவேதான் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைக்கும் மனிதனை விலைக்கு வாங்க எந்தப் படைப்பினங்களாலும் முடியாது!.

அவனுடைய விலையை நிர்ணயிப்பதற்கு எந்தப் படைப்பினத்திற்கும் வலிமையில்லை. உண்மையான இறை நம்பிக்கையாளன் எப்பொழுதும் விற்கப்படுவதில்லை. ஊழலின் நிழல் அவன் மீது சிறிதும் படுவதில்லை . நேர்மை நீதி ஆகியவற்றின் மீது உறுதியாக நிலைத்து நிற்க , படைப்பினங்களைவிட,  மேன்மை வாய்ந்த , வலிமை வாய்ந்த , மிக உன்னதமான, உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஓர் இறைவன் மீது திடமான நம்பிக்கை கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்”.


ஆக்கம்: ஷிஹாப் 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்
இந்த இதழின் மின் பதிப்பை கீழ்கண்ட இணைப்புகளில் வாசிக்கலாம் :
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusQlFkVE02azVjclE/view?usp=sharing


சனி, 18 மார்ச், 2017

ஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்


ஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது..
= 17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது. இதன் மீதுதான் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். எதிர்காலத் தலைமுறைகள் வாழக் காத்திருக்கின்றன.
= பூமியை உங்களை அணைத்துக் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். (திருக்குர்ஆன் 77:25-27)
 = “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 20:53,54)
 அதே பூமியில் தோன்றி மறைந்த அனைத்து மனிதர்களும் அதிலிருந்தே  மீண்டும் விசாரணைக்காக இறைவனால் எழுப்பப்பட உள்ளார்கள்:
= இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (திருக்குர்ஆன் 20:55)
இந்த நிலப்பரப்பின் பின்னணியில் இதன் மீது சுமார் ஆறடி உயரமும் ஒன்றரை அடி குறுக்களவும் கொண்ட மனிதன் என்பவன் எவ்வளவு அற்பமான படைப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதன் மீது நீர்க்குமிழி போல தோன்றி மறையும் அவனது  ஆயுளும் அற்பமானது என்பதை நாம் அறிவோம். நமக்கு இவ்வளவு பிரம்மாண்டமானதாகத் தெரியும் இந்த பூமியை இன்னபிற கோள்களோடும் சூரியனோடும் ஒப்பீடு செய்யும்போது இந்த பூமி எவ்வளவு அற்பமானது என்பது புரியும். நம் சூரிய குடும்பம் அது சார்ந்த பால்வெளி மண்டலத்தில் எவ்வளவு அற்பமானது என்பதையும் பால்வெளி மண்டலம் அது சார்ந்த அடுத்த மண்டலங்களின் தொகுப்பில் எவ்வளவு அற்பமானது என்றும் அடுத்தடுத்து ஒப்பீடு  செய்யும்போது மனிதனின் அற்பநிலையின் உண்மை விளங்கும். அத்துடன் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் நம் இறைவனின் உள்ளமையும் வல்லமையும் பற்றி உணர முடியும்.
உணராதோர் நிலை
ஆனால் இவை எதையுமே கண்டு கொள்ளாமல்  இந்த பூமியின் மீது அகங்காரம் கொண்டும் கர்வம் கொண்டும் நடந்து கொண்டவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. இறைவனின் தூதர்களும் நல்லோரும் அவர்களுக்கு மரணத்தைப்பற்றியும் இறைவனைப்பற்றியும் மறுமையில் விசாரணை பற்றியும் எச்சரித்தபோது அவற்றைப் புச்சமாகக் கருதினார்கள். தங்கள் அநியாயங்களில் அத்துமீறல்களில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
= ஆறடி உயரம் நின்று கொண்டு தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டவர்களும் அவர்களில் உண்டு.
= தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் கையாண்டவர்களும் அவர்களில் உண்டு.
= தங்கள் வாழ்வு இங்கேயே நிலைக்கும் என்று நினைத்து மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தவர்களும் மாட மாளிகைகளும் இரும்புக் கோட்டைகளும் கட்டி அழகு பார்த்தவர்களும் அவர்களில் உண்டு.
= இங்கு நிலையாக இருப்போம் என்ற நினைப்பில் அப்பாவிகளைப்  படுகொலைகளை செய்தும் நாடுகளையும் கண்டங்களையும் சூறையாடியும் வல்லரசுகளை நிருவி மற்றவர்களை மண்டியிடச் செய்வதில் சுகம் கண்டவர்களும்  அவர்களில் உண்டு.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் பூமிக்கடியில் ஆறு அல்லது ஏழடி நீளமும் இரண்டு அடி அகலமும் இரண்டு அடி ஆழமும் கொண்ட ஒரு இடம்தான் இறுதி இருப்பிடமாக - இறுதி முகவரியாக – அமைந்தது. ஆனால் அந்த இடங்களில் இன்று அவர்களுடைய உடலும் கூட காணப்படுவதில்லை. அவர்களில் சிலர் அந்த இறுதி இருப்பிடத்தையும் அடையவில்லை. சிலரின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இன்னும் சிலரின் உடல்கள் மீன்களுக்கும் பறவைகளுக்கும் உணவாயின. ஆனால் இறுதிவரை அவர்கள் செய்த அத்துமீறல்களை படுகொலைகளை சூறையாடல்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு வாழ்ந்தார்கள் இறைவன் அனைத்தையும் காண்கிறான் என்ற உணர்வு இல்லாமலேயே! அன்றைய குற்றவாளிகளுக்கு ஒப்பான அல்லது அதைவிட கொடூரமான குற்றவாளிகள் இன்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாராயினும் இறைவனின் நீதிவிசாரணையில் இருந்தும் தண்டனைகளில் இருந்தும் தப்ப முடியாது எனபதை கீழ்கண்ட இறைவசனங்கள் எச்சரிக்கின்றன:
14:42. இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்.
14:43. அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்!
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
தாங்கள் இந்த பூமியில் உயிரோடு உலவிய காலத்தில் செய்த அத்துமீறல்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை அவர்கள் மீது விதியாக்கப் படும்போது அந்த முன்னாள் ராஜாதிராஜர்களும் கொடுங்கோலர்களும் இறைவன் முன் மண்டியிட்டுக் கதறுவார்கள்.  அவற்றிற்கு இறைவன் கொடுக்கும் பதில்களையும் பாருங்கள்: 
14:44. வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) எங்களுக்கு அழிவே இல்லைஎன்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள் அல்லவா நீங்கள்!
14:45. உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்!
14:46. அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது.
இறைவன் குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டிக்காததற்குக் காரணம் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சைப் போலவும் இந்த தற்காலிக உலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதாலேயே. உடனுக்குடன் தண்டித்தல் என்பது பரீட்சையின் நோக்கத்திற்கு எதிரானது. அதிபக்குவமான முறையில் இவ்வுலகைப் படைத்துள்ள இறைவன் நீதி செல்த்துவதிலும் பக்குவமானவன். அவன் தன் தூதர்கள் மூலமாக வாக்களித்துள்ளபடி குற்றவாளிகளுக்குரிய தண்டனைகள் நிறைவேறியே தீரும் என்பதை இறைவன் நினைவூட்டுகிறான்:

14:47. (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான்.
14:48. அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள்
14:49. அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர்.
14:50. அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும்.

14:51. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்)! திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான்.

வெள்ளி, 17 மார்ச், 2017

மாறும் முகவரிகள்...

 Related image
உங்கள் முகவரி என்ன? என்ற கேட்டவுடன் சட்டென உங்கள் தற்போதைய முகவரியைக் கூறி விடுவீர்கள்.
இதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்று உங்கள் முந்தைய முகவரிகளைப் பற்றிக் கேட்டால்?
ஒவ்வொன்றாகக் கூறுவீர்கள்...
அதற்கு முன், அதற்கு முன் என்று கேட்கக் கேட்க ... அது ஒரு தொடர்போல நீளலாம்...
இறுதியில் அது உங்கள் தாயின் கருவறையை அடையும் என்பதை அறிவீர்கள்...
அதற்கும் முன்?
கருத்தரிக்கும் முன் நீங்கள் கடந்து வந்த பாதையின் கட்டங்கள் உங்கள் முகவரித் தொடரில் இடம்பெறலாம்..
அதற்கும் முன் என்று கேட்டால்...
இறுதியாக முகவரியே இல்லாத நிலை ஒன்றை அறிவீர்கள்... திருக்குர்ஆனில் உங்களைப் படைத்தவன் அந்நிலையை நினைவூட்டுகிறான்:
76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
மேலும் கேட்கிறான் :
2:28. நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்
இப்பூவுலக முகவரிகள்
தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பின் தாயின் மடி, தொட்டில், கட்டில் என உங்கள் முகவரிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. உங்கள் வளர்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றைப் பொறுத்து இந்தப் புவியின் மீது உங்கள் முகவரியானது தொடர்ந்து பல மாற்றங்களுக்குள்ளாகி இறுதியில் கல்லறைக்குள் சென்று அடங்க உள்ளது என்பதை அறிவீர்கள். ஆனால் கல்லறையில் இருந்து தொடங்கி கருவறையில் முடியும் இந்தப் பயணத்தின் உண்மை நோக்கம் பற்றிய சிந்தனை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அதை நினைவூட்டுவதற்காகவே இப்பயணத்தை நிர்வகித்து வரும் இறைவன் தன் தூதர்களையும் வேதங்களையும் அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகிற்கு இறுதியாக வந்த வேதமாம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதைக் கேளுங்கள்:
= 56:57-59    நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களாஅதை நீங்கள் படைக்கிறீர்களா?அல்லது நாம் படைக்கின்றோமா?
படைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து அவன் கேட்கிறான்:
= 52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களாஅல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களாஅல்லது வானங்களையும்பூமியையும் அவர்களே படைத்தார்களாஅவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்
அவ்வாறு படைத்தவன் நமக்காக அயராது வழங்கிவரும் அருட்கொடைகள் பற்றி நினைவூட்டுகிறான்.
78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
இன்னும் இங்கு பட்டியலிடப்படாத எண்ணற்ற அருட்கொடைகள்... இவை அனைத்தும் இங்கு நடப்பது மனிதன் என்று முக்கியமான ஜீவியாகிய உங்களை வாழவைப்பதற்குத் தானே?
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே உங்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நீங்கள் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்பீர்களா?
இதையே இறைவன் கேட்கிறான்:
23:115. “
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” 
அவ்வாறு பகுத்தறிவோடு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
ஆக, கருவறை தொடங்கி கல்லறையில் முடியும் இப்பயணத்தின் வெற்றி இவ்வுண்மைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதில்தான் உள்ளது.
இறுதி முகவரி:   
இப்பூவுலக முகவரிகளைப் பொறுத்தவரையில் நமக்கு பொருத்தமானவாறு அவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும். ஓரிடம் ஒத்துவராவிட்டால் வேறிடம் தேடிச் செல்ல முடியும். ஆனால் கல்லறைக்குப் பின்னருள்ள முகவரி அவ்வாறல்ல. அதுவே நம் நிரந்தர வாழ்விடம்- மேற்படி சாய்ஸ் என்பது அங்கு கிடையாது. திரும்பி வருதலும் தப்பித்துக் கொள்வதும் அங்கு சாத்தியமில்லை. அங்கு இரண்டே இடங்களே உண்டு.. ஒன்று சொர்க்கம்... மற்றது நரகம். அந்த இறுதி முகவரி சொர்க்கமாக அமை யவேண்டுமானால் அதற்காக முயற்சியும் உழைத்தலும் இன்றே கைகொள்ள வேண்டும்.... மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்!


= 3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

செவ்வாய், 7 மார்ச், 2017

பாரதம் காப்போம் (உத்தம அரசியல்)

Image result for ஆன்மீக அரசியல்
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இணக்கத்தோடு வாழநினைக்கும் பன்மை சமூகங்களுக்குள் வீண்பகை மூட்டி வன்முறைகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம்! ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம்!  மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை!
ஒருபுறம் தேசத்தை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் நாட்டுமக்களுக்கு வஞ்சகம் இழைக்கும் வண்ணம் நாட்டுவளங்களையும் நீர்நிலைகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் அந்நிய முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கிறார்கள். அதன் காரணமாக ஏழை விவசாயிகளின் அல்லது வியாபாரிகளின் பிழைப்பில் மண்விழுந்து அவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் அவலம்! 

இந்த அவல நிலையிலிருந்து பாரதத்தை மீட்க ஆக்கபூர்வமான வழிகளைப் பரிந்துரைக்கிறது இந்நூல்.. 

இந்த நூலின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusN1BwODJDYzhoVUE/view?usp=sharing