இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 மே, 2023

மறுமை பற்றிய பகுத்தறிவு பூர்வமான ஆய்வு!


 மரணத்துக்குப் பின் நம் நிலை என்ன? மக்களிடையே மூன்று கருத்துக்களை நாம் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

1. நாம் இருக்கமாட்டோம். மண்ணோடு மண்ணாகப் போய்விடுவோம்.
2. ஆத்மாவிற்கு அழிவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்போம்.
3. இறைவேதங்கள் கூறுவது போல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல்: நம் செயல்களுக்குக் கூலி கொடுக்கப் படுவோம். நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நமக்கு நிரந்தர நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கும்.
மேற்படி கருத்துக்களில் நமது கருத்து எந்த ஒன்றாகவும் இருக்கலாம் .ஆனால்...
• மேற்கண்ட மூன்று கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் மூன்றுமே ஒரே நேரத்தில் சாத்தியப்படுவது முடியாத ஒன்று.
• நமது கருத்துக்காக அல்லது ஊகங்களுக்காக உண்மை அல்லது வாஸ்தவம் வளைந்து கொடுக்கப் போவது இல்லை.
• முதல் இரண்டில் எது நடந்தாலும் நாம் தப்பிக்க வாய்ப்புண்டு.
• மூன்றாவது விஷயம் நடக்குமானால் நாம் தப்பிக்க வழியில்லை.
எனவே பகுத்தறிவு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் அந்த மூன்றாவது நிலையை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் செய்து கொள்வதுதான் பாதுகாப்பான வழிமுறை என்பதுதான். மனித இயற்கையும் அதுவே.
உதாரணமாக ஜெர்மனி அல்லது சுவீடன் நாட்டிலிருந்து உங்களுக்கு ஒரு இன்டர்வ்யூ அல்லது ஒரு வேலைவாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? உடனே அந்நாட்டைப் பற்றி ஆராய ஆரம்பிப்பீர்கள் அல்லவா? ஆராய்ந்து அந்நாட்டின் பொருளாதார சீதோஷ்ண மற்றும் அரசியல் சூழ்நிலைகளை தீரவிசாரித்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்தானே! நாளை நாம் நிரந்தரமாகத் தங்கவுள்ள இடத்தைக் குறித்து நாம் அலட்சியம் காண்பிக்க முடியுமா? அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதில் நாம் தாமதம் செய்யலாகுமா?
பகுத்தறிவு கொண்டு இறைவேதங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தாலும் நமக்கு அதுதான் நாளை நடக்கும் என்பதையும் அறியலாம்.
நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
"நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர்." (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)
''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)
இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணரும்வண்ணம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

நபிகளாரிடம் கேட்கப்பட்ட கேள்வி:
ஒருமுறை நபிகளாரிடம் மக்கிப்போன மனித எலும்புகளைக் கொண்டு பொடித்துக் காட்டி அதை ஊதிச் சிதறடித்து இவையெல்லாம் மீண்டும் உயிர்பெற்று வரும் என்றா போதிக்கிறீர் என்று ஏளனமாகக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இறைவன் கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை அருளினான்:
36:77-83. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு பபடைப்பையும் அறிந்தவன்'' என்று நபியே கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள். வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அனைத்தும் அறிந்தவன்.
ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும். எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!"
மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் சற்று சிதித்தால் இதற்கான விடை காணலாம் என்கிறது திருக்குர்ஆன்.
"22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்:
75:3. 4 "(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்."
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக