பெரும்பெரும் இயற்கை வளங்களும் பெரும் நிலப்பரப்பும் கொண்ட ஒரு நாடு அதைப் படைத்தவனுக்கு எவ்வளவு நன்றிக் கடன் பட்டதாக இருக்கவேண்டும்? ஆனால் அதைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் படைத்தவனையே மறுக்கும் ஒரு சித்தாந்தத்தைக் கொள்கையாகக் கொண்டு அந்நாடு ஆளப்பட்டால் அது சீரழிவை சந்திக்காமல் இருக்குமா? அதைத்தான் இன்று சீனா என்ற கம்யுனிச நாட்டின் உதாரணத்தில் காண்கிறோம்.
இன்று சீனா ஒரு தொழில் முன்னேற்றம் கொண்ட வல்லரசு நாடாக உலகுக்குக் காட்சியளிக்கலாம்.
ஆனால் அது நிலைக்காது என்பதை அதன் உள்நாட்டு நிலைமையை ஆராய்பவர்களுக்கு புரிய வரும். என்ன வளம் இருந்தும் என்ன ஆதிக்கம் இருந்தும்
அதன் பலனை அனுபவிப்பதற்கு ஆள் இல்லையென்றால் என்ன பயன்?
ஒரு குழந்தை கொள்கை என்ற கொடூரம்!
பரவலாக அறியப்பட்டது போல, கம்யூனிச சீனா, 1980ம் ஆண்டு ஒரு குழந்தைக் கொள்கையை அறிவித்தது. மணமான
தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், மீறினால் அபராதம்,
சலுகைகள் இரத்து என்றபடி நடைமுறைக்கு வந்தது இக்கொள்கை.
டெங் ஜியோபிங் (Deng
Xiaoping ) அதிபராக இருந்த போது, இந்த கட்டுப்பாடு கொண்டு
வரப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை 100 கோடியை நெருங்கிக்
கொண்டிருந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம்
பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் எனும் அச்சத்தில் இக்கட்டுப்பாடு கொண்டு
வரப்பட்டது.
நீங்கள்
வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும்
உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களைக்
கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
என்ற இறைவனின் கட்டளை அப்பட்டமாக ஒரு நாட்டை ஆள்பவர்களால் மீறப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டது
கடும் கட்டுப்பாடுகள்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், குடும்பத்திற்கு ஒரு
குழந்தை எனும் கட்டுப்பாட்டை சீன அரசு கடுமையாக செயல்படுத்தியது. குறிப்பாக
நகர்புறங்களில் இந்த கட்டுப்பாடு தீவிரமாக இருந்தது. ஒரு குழந்தைக்கு மேல்
பெற்றுக்கொண்ட தம்பதியருக்கு அபாராதம் விதிக்கப்பட்டதோடு, கட்டாய கருக்கலைப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். குறிப்பாக ஏழைகளுக்கு
பாதிப்பு மோசமாக இருந்தது.
அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு பொருளாதார
நோக்கில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. சீன மக்கள் இந்த கட்டுப்பாட்டை வேறு
வழியில்லாமல் ஏற்றுக்கொண்ட நிலையில்,
அரசு தரப்பில்
இந்த கொள்கை வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு குழந்தை கொள்கை மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த
முடிந்ததோடு, உணவு மற்றும் குடிநீர்
ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடிந்ததாகவும் சீன அரசு தரப்பில்
பெருமிதத்தோடு தெரிவித்து வந்தது.
உச்சகட்ட கொடூரங்கள்
ஆனால் இதன் பின்னால் நடந்த கொடூரங்கள் உலகத்தின் பார்வையில் இருந்து
மறைக்கப்பட்டன.
= பிறப்பது பெண் குழந்தை என்றால் –அதை ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டால் –
உடனே கருவிலேயே கொல்லப்பட்டாள்.
= தப்பித்தவறி பிறந்துவிட்டால் பெற்றோர்களாலேயே உயிரோடு கொல்லப்பட்டாள்.
= பெற்றவர்களுக்கு கொல்ல மனம் வரவில்லை என்றால் அவளை அரசு காப்பகங்களில்
சேர்த்தார்கள். பெற்றோர் உயிருடன் இருந்தும் அனாதையாகவே வளர்ந்தது அந்தப் பெண்
குழந்தை. ஏனெனில் ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தையை மட்டும் வைத்துக்கொள்ளத்தானே
அனுமதி உள்ளது.
= அதுவும் ஆண்குழந்தைதானே வேண்டும் அனைவருக்கும்! அதனால் தொடர்ந்து பிறந்த
பெண்குழந்தைகள் காப்பகங்களுக்குச் சென்றன.
= என்ன ஒரு கொடுமை! எத்தனை கருக்கொலைகள்? சிசுக்கொலைகள்? கருக்கலைப்புகள்? எவ்வளவு
மன உளைச்சல்களை இவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.. மனித மனம் கொண்டவர்களே
சிந்தித்துப்பாருங்கள்.
40 வருடங்களாக நடந்த கொடுமைகள்
இக்கொடுமைகள் ஏதோ ஊரில் ஏதோ மூலையில் ஏதோ ஒரு குடும்பத்தில் எங்கோ நடந்தவை
அல்ல.. சீனா என்ற பெரும் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான குடும்பங்களில் 40
வருடங்களாக இக் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின. தட்டிக்கேட்க யாரும் இன்றி, எதிர்க்கட்சிகள்
ஏதும் இன்றி, இக்கொடுமைகள் கம்யூனிஸம் என்ற
இரும்பு கரத்தின் ஒடுக்குமுறைகளுக்கு கீழ் ஈவிரக்கமின்றி நடந்தன. நாட்டின்
பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மனித உணர்வுகள் இவ்வாறு மழுங்கடிக்கப்பட்டன.
தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குடும்பம், அன்பு, பாசம், நேசம், சொந்தம்
பந்தம், என அனைத்து உறவுகளையும் உணர்வுகளையும் கம்யுனிசவாதிகள் கால்களுக்குக் கீழ்
போட்டு நசுக்கினார்கள். இவர்களைப் பொறுத்தவரை மனிதன் இன்னொரு குரங்குதானே?
கொடூரங்களின் முடிவில்..
= மக்கள்தொகைக் குறைப்பை வெற்றிகரமாக அடைந்தார்கள்.
ஆனால்...
= ஒரு குழந்தைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், சீன சமூகத்தில் பெண்கள் விகிதத்தை விட ஆண்கள் விகிதம் அதிகமானது.
= மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது சீன மக்கள் தொகை மிகவும் வேகமாக வயோதிகத்தை
அடையவும் இது வழிவகுத்து. அதாவது மக்கள் தொகையில் இளம் வயதினரைவிட வயதானவர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உண்டானது.
= மக்கள் தொகையில் இளம் வயதினர் குறைவாக இருப்பது, பொருளாதார நோக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உழைப்பதற்கு ஏற்ற மனிதவளம்
குறைந்து போயுள்ளது. வயோதிகர்களை கவனிக்க ஆளில்லா நிலை உருவானது.
இதன் விளைவாக கடந்த 2016ம் ஆண்டு சீன அரசு ஒரு
குழந்தைக் கொள்கையை தளர்த்தி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
ஆயினும் எதிர்பார்த்த மாற்றங்களைக் காணமுடியவில்லை.
அதைத் தொடர்ந்து தற்போது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது
சீன அரசு. இனி முழு கட்டுப்பாட்டையும் தளர்த்தி மக்களே இனி எவ்வளவு வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ளுங்கள் என்று சீன அரசு அறிவித்தாலும் பிறப்பு விகிதம் 1.12 என்ற
நிலையை அடைந்துள்ள நிலையில் இன அழிப்பிலிருந்து சீனா மீண்டு வர வாய்ப்பே இல்லை
எனலாம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது..
ஆம், மனித உணர்வுகளை இரும்புக் கரம் கொண்டு இவர்கள் அடக்கி ஒடுக்கியதால்
இதயங்கள் கல்லாகிவிட்ட நிலையில் இவர்களின் பெண்கள் கேட்கிறார்கள்..
நாங்கள் என்ன உங்களுக்கு பிள்ளைபெறும் இயந்திரங்களா?
இறை எச்சரிக்கை
எது எப்படியானாலும் இது இறைவனுக்கு சொந்தமான உலகம். அவனை கண்டுகொள்ளாது
தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அழிவையே தரும். மறுமையில் அவனது
தண்டனையையும் பெற்றுத்தரும். கீழ்கண்ட இறைவசனத்தில் கூறப்படும் விஷயங்கள்
இவர்களுக்கும் பொருந்திப்போவதை நாம் காணலாம்:
= (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 6:70)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
-------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக