இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும் அரசு உயர் பதவிகளிலும் பின்தங்கி இருப்பது ஏன்????
(Source:- சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்??? என்ற நூலில் இருந்து)
- MAA Yasar அவர்களின் முகநூல் பதிவு)
பதில்:-
இந்த கட்டுரை மிகுந்த சிரமத்துக்கு இடையில் தேடி எடுக்கப் பட்டது, அனைவரும் பொறுமையாக சிரமம் பார்க்காமல் படியுங்கள் இன்ஷா அல்லாஹ்
ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போராட்டங்களில்
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம், கதர் ஆடை இயக்கம், அந்நியத் துணி பகிஷ்கரிப்பு இயக்கம், கள்ளுக் கடை மறியல், உப்புச் சத்தியாக்கிரகம் என நடத்தப்பட்ட இவற்றில் அதிகமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, ஏற்றுக் கொண்டாலும் கடைப்பிடிக்கப்படாத ஒன்று ஆங்கில அரசின் கல்வி மற்றும் வேலையைப் புறக்கணியுங்கள் என்ற அறிவிப்பு.
கல்வி எதிர்கால வாழ்வின் அடிப்படை. வேலை நிகழ்கால வாழ்வுக்கு உத்திரவாதம். இரண் டையும் இழப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குடும்பம் சமூகம் என ஒருவன் சார்ந்திருக்கிற அவனைச் சார்ந்திருக்கிற யாரும் இதை ஏற்க முன் வரமாட்டார்கள்.
கண்ணெதிரே ஆயிரம் வாய்ப் புகளைக் காண்பவர்கள்கூட இருக்கும் வேலையை இழந்துவிட்டு இன்னொரு வேலையைத் தேடுவதற்கு கடுமையாக யோசிப்பார்கள். புதிய வேலை எப்படி அமையுமோ? என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். ஒருவேளை நஷ்டப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் அலைமோதும். அது கூட இருப்பதைக் கொடுத்து விட்டு இல்லாமல் போவதற்கு அல்ல. அதை விட சிறந்ததைப் பெறுவதற்குத் தான்.
இங்கே நிலைமையோ தலைகீழ். கையில் இருக்கும் அரசாங்க வேலையை விட்டு விட்டால் அதைவிட சிறந்த வேலை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேலையை விடுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? சரி, ஒருவேளை சிறந்தது அமையாவிட்டாலும் பரவாயில்லை. கால் கஞ்சி குடிப்பதற்காவது காசுக்கு வழி கிடைக்குமா என்றால் அதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படிப்பட்ட மரணப் பரீட்சைக்கு யார்தான் முன்வருவார்? இருப்பதை விட்டு பறப்பதை விரும்பலாம். பறப்பதற்கு ஆசைப்பட்டு இருக்கக் கூட முடியாமல் போனால்....?
அதனால்தான் இந்தத் திட்டத்தை காந்தி முன்வைத்த போது விரல் விட்டு எண்ணுகிற மிகச் சிலரைத் தவிர இந்தியாவின் அனைத்து சமுதாயத்தினரும் அதை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை எண்ணிச் சொல்லுகிற இரண்டொருவரைத் தவிர அனைவருமே அதை அங்கீகரித்தார்கள். அப்படியே கடைப்பிடித்தார்கள். இது அப்பழுக்கற்ற வரலாற்று உண்மை.
ஒத்துழையாமை போராட்டத்தின் ஒரு வடிவமாக
கல்வியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.
எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன. ஆனால், முஸ்லிம்களோ முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.
ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல் களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.
இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம் கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.
முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
உதாரணத்திற்கு ஒரு சில...
ரஃபி அஹமது கித்வாய்
மௌலானா முஹம்மதலி நடத்தி வந்த காம்ரேட் ஆங்கிலப் பத்திரிக் கையில் பம்பூக் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதி தேசியக் கனல் வெடிக்கக் காரணமாக இருந்தார். அலிகர் முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் பி.ஏ. முடித்து விட்டு அரசின் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வந்தார். காந்தியின் அறிவிப்பு காதைக் கிழிக்க, கண நேரம் கூட தாமதிக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.(விடுதலைப் போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி பக் 460)
டாக்டர் ஜாகிர் ஹுஸைன்
ஆப்கானிஸ்தானத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஹைதராபத்தில் பிறந்து உ.பி. மாநிலம் குயாம் கஞ்சில் வளர்ந்தவர். 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் பாரத ரத்னாவாகி 1967ல் இந்திய ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ஜாகிர் ஹுஸைன்.
அலிகர் முஹம்மதின் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் பி.ஏ. முடித்துவிட்டு எம்.ஏ.படித்துக் கொண்டிருந்தார். 1920 ஆம் ஆண்டு அக்டோபர் 12ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காந்தி ஆங்கில அரசின் பள்ளி கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும், அதே நேரம் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேசியக் கல்லூரிகளை நாமே உருவாக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பேசி முடித்து விட்டு காந்தி கல்லூரியை விட்டுச் சென்றார். அவரது பேச்சைக் கேட்ட ஜாகிர் ஹுஸைன் அவருக்குப் பின்னாலே சென்றார் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு.
கல்லூரியை விட்டு வெளியேறியவர் கால நேரத்தை விரயம் செய்யாமல் காந்தி சொன்னபடியே தேசியக் கல்வி நிறுவனத்தை உருவாக்க பெரும் முயற்சியெடுத்தார்.
வெளியேறிய 17 நாட்களில் அதாவது 29.10.1920 அன்று அதே ஊரில் ஜாமியா மில்லிய்யா என்ற தேசியக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அலிகரில் இருந்து பின்னர் அது டில்லிக்கு இடம் மாறியது. கல்லூரியானது தொடர்ந்து பல்கலைக் கழகமாக உருவெடுத்து தற்போது ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
22 ஆண்டுகள் நிறுவனரையே துணை வேந்தராகக் கொண்டு இயங்கிய டில்லி ஜாமியா மில்லிய்யா பல்கலைக் கழகம் இஸ்லாமியர்களின் தியாக வாழ்வையும், தேசிய உணர்வையும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்பதற்கு எந்தச் செவிகளும் இல்லை என்பது தான் மிகுந்த வலியைத் தருகிறது.(வி.போ.மு, வி.என்.சாமி பக் 470-476)
முஹம்மது அப்துர் ரஹ்மான்
கேரள மாநிலம் கொடுங்களூருக்கு அருகில் உள்ள அழிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர். அல் அமீன் என்ற பெயரில் வாரம் மும்முறை வெளியான மலையாளப் பத்திரிக்கையின் ஆசிரியர். கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர். நகராட்சி மற்றும் சட்டமன்றங்களில் பலவருடங்கள் உறுப்பினராக இருந்தவர் முஹம்மது அப்துர் ரஹ்மான்.
ஒத்துழையாமை இயக்கம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது காந்தியின் அழைப்பை ஏற்று தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே நிறுத்தினார். தேசியப் போராட்டத்தில் குதித்தார். அதற்காகப் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.(வி.போ.மு, வி.என்.சாமி பக் 603)
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில்
நெல்லை மாவட்டம் பேட்டையைச் சேர்ந்தவர். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பிறந்தார். எனவே அந்நாளின் நாயகர்களான இருவரில் இரண்டாமவரான இஸ்மாயீல் நபியின் பெயரைச் சேர்த்து முஹம்மது இஸ்மாயீல் என்று பெயரிடப்பட்டார்.
சிறு வயதிலே சகோதரர்களோடு சேர்ந்து பால்ய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தினார். 1936 ஆம் ஆண்டுவரை தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர். அதன் பிறகு அதிலிருந்து விலகி முஸ்லிம் லீகில் இணைந்து போராடினார். 20 ஆண்டு காலம் சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் மக்கள் பிரதி நிதியாகப் பணியாற்றினார்.
தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டு கேரளா மஞ்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கிருந்து 1962, 1967, 1971 ஆகிய மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
அரசியல் அமைப்பு நிர்ணய சபையிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபு அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது காந்தியின் "கல்லூரியைப் புறக்கணியுங்கள்" என்ற அறிவிப்பு வருகிறது. உடனே தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காங்கிரசில் கைகோர்த்து களம் பல கண்டு 5.4.1972 ஆம் ஆண்டு கண்ணியமான முறையில் காலமானார். (வி.போ.மு, வி.என்.சாமி பக் 742-744
கூடுதலாக ஒரு விஷயம் சொல்வதாக இருந்தால் காயிதே மில்லத் அவர்கள் காலத்தில் படித்து வந்த அவர் வயதை ஒட்டிய அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், கிருஷ்ணசாமி, பேராசிரியர் அன்பழகன் ஆகிய எவரும் கல்வியை கைவிடாமல் படித்து அந்தக் காலத்திலேயே பட்டம் பெற்றவர்களாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
அப்துல் சத்தார் சாஹிப்
சுதந்திரம் நமது பிறப்புரிமை பூரண சுயராஜ்ஜியமே லட்சியம் என்று முழங்கிய கலகக்காரர் திண்டுக்கல் அப்துல் சத்தார் சாஹிப்.
1941 ஆம் ஆண்டு தொடங்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தை நடத்தி 500 ரூபாய் அபராதமும் ஒராண்டு கால சிறைத் தண்டனையும் அனுபவித்தவர். விடுதலை பெற்று வெளியில் வந்த சில நாட்களிலே, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதாகி தஞ்சை, வேலூர், கண்ணனூர் என பல ஊர் சிறைகளைப் பார்த்து வந்தார்.
1915 ஆம் ஆண்டு பூரண சுயராஜ்ஜியம் கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மதுரையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முன்னோடியாக செயல்பட்ட அப்துல் சத்தார் சாஹிப் அவர்கள் மதுரையில் இண்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது காந்தியின் அறிவிப்பைக் கேள்விப்பட்டார்.
மகன் படித்து பட்டதாரியாக வருவான் என அவரது தந்தை காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தந்தையின் ஆசையைப் பொய்யாக்கி விட்டு கல்லூரிப் படிப்பை கை கழுவி விட்டு காந்தியின் இயக்கத்தில் கால் பதித்தார் காலம் முழுக்க அதிலே கரைந்து போனார்.(வி.போ.மு, வி.என்.சாமி பக் 749-750)
இவ்வாறு நாட்டு விடுதலைக்காக கல்வியை இழந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம். அரசின் கோப்புகளிலும் அந்தக் கால நூல்களிலும் காலத்தின் வெளிச்சம் படாமல் கரையான் அரித்துக் கிடக்கின்றன இதுபோன்ற இன்னும் பல தகவல்கள்.
1920 - 21 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசின் அறிக்கையில்,
இந்தக் கல்வியாண்டில் கிலாபத் இயக்கத்தின் தாக்கத்தால் முஸ்லிம் மாணவர்கள் 4,420 பேர் குறைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
1922 ஆம் ஆண்டு கல்வித்துறை இயக்குனர் அறிக்கையில்..
(1918 ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களைக் கருத்தில் கொண்டு சென்னை மாகாண அரசால் சென்னையில் துவங்கப்பட்ட) மதரஸாயே ஆஸம் கல்வி நிறுவனத்தில் 1922 ஆம் ஆண்டில் வெறும் 21 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் மூடி விடுவதே சிறந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.((ஆஸம்) தியாகத்தின் நிறம் பச்சை பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 90-91)
கல்விச் சாலைப் புறக்கணிப்பில் முஸ்லிம்கள் காட்டிய கடுமையை இவ்விரண்டு அறிக்கையின் மூலம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வே மிகக் குறைவாக இருந்த காலகட்டம். குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியுள்ளவர்களின் எண்ணிக்கையும் அப்போது மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஒரே ஒரு ஆண்டில் சென்னையில் மட்டும் 4,420 மாணவர்கள் பள்ளி கல்லூரிகளை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய தியாகம்? எப்படிப்பட்ட புரட்சி?
மற்ற சமூகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த புறக் கணிப்பைப் போல இதை எடுத்துக் கொள்ள முடியுமா? முஸ்லிம்கள் குறைவாக இருந்த சென்னையிலே நிலைமை இப்படியிருந்தால் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்த வங்காளம் போன்ற இடங்களில் போராட்டமும் புறக்கணிப்பும் எந்த அளவிற்கு உக்கிரமாக இருந்திருக்கும்? என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
முஸ்லிம்கள் தாமாகவே விரும்பி வலிய சுமந்து கொண்ட சுமை இன்றும் கூட அவர்களின் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கிறது. அதனை அகற்றுவதற்கு மனமற்றவர்கள் தான் இந்தியாவின் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று தலைவர்களின் அறை கூவலை தரைமீது வீசிவிட்டு கல்வி நிலையங்களுக்குள் கருத்தூன்றி படித்தவர்கள் இன்று வளமான வாழ்வுக்கு வாரிசாகிப் போனார்கள். ஆலம் விழுதென நாட்டைத் தாங்கிப் பிடித்தவர்கள் ஆழக் குழிதோண்டி அதற்குள்ளே அமிழ்ந்து போனார்கள்.
சுதந்திர கமிஷன் அறிக்கைகளே இதற்கு ஆதாரம்.
சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் குறித்து ஆராய்வதற்காக இந்திரா காந்தியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட கோபால் கமிஷன், 1995 ஆம் ஆண்டு போலீஸ் இராணுவப் பணிகளில் சிறுபான்மையோரின் பங்கு குறித்து ஆராய்ந்த தேசிய சிறுபான்மையினர் ஆணைய அறிக்கை, திட்டக் குழுவின் சிறுபான்மையினர் துணைக்குழு 1996 ஆம் ஆண்டு வழங்கிய சிறுபான்மையினர் குறித்த தகவல் திரட்டு, 2005 மார்ச் 9 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார ஆய்வுக் குழு, 2005 மார்ச் 15 இல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட மொழி மற்றும் மதச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். (இழப்பதற்கு ஏதுமில்லை. அ.மார்க்ஸ், பக் 32-52 வெளியீடு பெருவளநல்லூர் மற்றும் லால்குடி சாந்தி நகர் முஸ்லிம் ஜமாஅத்)
இந்த அனைத்து அமைப்புகளுமே முஸ்லிம்களின் பிந்தங்கிய நிலையை அரசுக்குப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. படங்கள் எத்தனை வந்தாலும் முஸ்லிம்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் புறக்கணிப்பில் முஸ்லிம்கள் முன்னோடிகளாக விளங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அறைகூவலாக மட்டும் முஸ்லிம்கள் கருதவில்லை. அதையும் தாண்டி இஸ்லாமிய மார்க்கத்திற்குச் செய்யும் தொண்டாக - கடமையாக நினைத்தார்கள். ஆங்கிலேயர்களை தமது மார்க்கத்தையே அழிக்க வந்த விரோதியாகப் பார்த்தார்கள்.
மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு பிரகடனங்களை வெளியிட்டார்கள். ஆங்கிலேயர்களால், இந்தியாவிற்கு அறிமுகமாகிய அனைத்தையும் மார்க்கத்தின் பெயரால் தடை செய்தார்கள். அவனது மொழி, உடை, சிகையலங்காரம் அனைத்துமே ஆபத் தானது என்று அச்சமூட்டினார்கள்.
ஆங்கிலம் கற்பதும், பேண்ட் அணிவதும் கிராப் வெட்டி- முடியை அலங்கரித்துக் கொள்வதும் ஹராமானது (தடுக்கப்பட்டது) என்று கூறினார்கள்.
ஆங்கிலேயர்களின் கல்வி நிலையங் களைப் புறக்கணித்த மாணவர்களுக்கு மாற்றுக் கல்வித் திட்டமாகத்தான் நாடு முழுவதும் மதரஸாக்கள் எனும் மார்க்கக் கல்விக் கூடங்கள் முளைத்தன.
இந்த மதரஸாக்களில் ஆங்கிலேயர் வெறுப்பும், எதிர்ப்புமே அதிகமாக ஊட்டி வளர்க்கப்பட்டது. மாதம் ஒருமுறை மொட்டையடிப்பது வலியுறுத்தப்பட்டது, பேண்ட் அணிவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு கைலி உடுத்துவது கடமையாக்கப் பட்டது, ஆங்கிலத்தின் வாடை கூட வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. இவையனைத்தும் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.
அன்று தொடங்கிய இந்தப் பயணம் இன்றும் கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து வெளியாகும் ஆலிம்களிடம் இன்றும் அதன் தாக்கத்தை உணர முடியும். கைலி கட்டுதல், ஜுப்பா அணிதல், மொட்டையடித்தல் ஆகிய அனைத்தும் அதன் பிரதி பிம்பங்களே.
இந்தப் போர் துவங்கி 90 ஆண்டுகள் ஓடி விட்டன. அது முடிந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இப்போதும் அதன் தாக்கம் தொடர்கிறது என்றால் முஸ்லிம்கள் சுதந்திரப் போரில் எந்த அளவிற்கு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உண்மை விசுவாசத்துடன் பங்கெடுத் திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நாட்டு விடுதலைக்காக உருவாகி, அன்பையும்அமைதியையும் போதித்துக் கொண்டிருக்கும் மத்ர ஸாக்களை தீவிரவாதக் கூடங்கள் என கொச்சைப்படுத்துபவர்களை என்ன வென்று சொல்வது?
பட்டம், பதவியைத் துறந்தவர்கள்.
12.8.1920 அன்று காங்கிரஸ் தலைவர்கள் முஹம்மதலி, ஷவ்கத் அலி, காந்தி ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டம் திருவல்லிக்கேனி கடற் கரையில் நடைபெற்றது. மறுநாள் 13-8-1920 அன்று திருவல்லிக்கேனி ஜும்ஆ மசூதியில் பெரும் திரளாக கூடியிருந்த முஸ்லிம்கள் மத்தியில் காந்தி உரை நிகழ்த்தினார்.
பட்டம் உள்ளவர்கள் பட்டத்தைக் கைவிட வேண்டும்; கௌரவ மாஜிஸ்திரேட்டுகள் தமது பதவி யிலிருந்து விலக வேண்டும்; வழக்கறிஞர்கள் தம் தொழிலை நிறுத்தி விட வேண்டும்; பள்ளிப் பிள்ளைகள் அரசின் படிப்பை உதறித் தள்ள வேண்டும்; தலைவர்கள் மோட்டார் வாகனங்களை ஒதுக்கி விட வேண்டும். கதர் ஆடை அணிந்து வெறுங்காலுடன் நடந்து வர வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் அரசு அலுவலர்களும் சிப்பாய்களும் நம் பின்னால் அணிவகுப்பதையோ உழவர்கள் வரிகொடா இயக்கத்தில் பங்கெடுப்பதையோ கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. எனவே பட்டம் பதவிகளைத் துறந்து வெளியேறுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மறு நாள் 14.8.1920 ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கிலாபத் இயக்க மாநாடு. ஆம்பூர் வந்த தலைவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் காந்தி, திருவல்லிக்கேணி மசூதியில் இட்ட கட்டளையை, மறுநாளே முடித்து விட்டு காத்திருந்தார்கள் முஸ்லிம்கள்.
ஆம்பூர் நகரில் கௌரவ மாஜிஸ் திரேட்டுகளாக பணியாற்றி வந்த ஹயாத் பாஷா சாஹிப், மாலிக் அப்துர் ரஹ்மான் சாஹிப், முஹம்மது காசிம் சாஹிப், ஹெச்.என்.செங்கலப்பா ஆகியோர் தமது பதவியின் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பி விட்டு வந்து காந்தியை வரவேற்றனர்.(இந்திய விடுதலை போரும், தமிழக முஸ்லிம்களும் - நா.முகம்மது செரீபு பக்.87)
ஜமால் இப்ராஹீம் சாஹிப்
தமிழக முஸ்லிம்களின் அரசியலில், முக்கியத்துவத்தோடும் வலம் வந்தவர் திருச்சி ஜமால் முஹம்மது சாஹிப். விடுதலை வரலாற்றில் வள்ளலாகவும் கல்வி நிறுவனங்களின் தந்தையாகவும் கருதப்பட்டவர். இவரது சகோதரர் ஜமால் இப்ராஹீம் சாஹிப். இவரும் ஆங்கில அரசில் கௌரவ மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். காங்கிரசின் அறிவிப்பை ஏற்று 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.(தி.நி.ப, பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 84-85)
பீர் முஹம்மது பாவலர்
விடுதலை நெருப்புக்கு தம் கவிதை வரிகளால் கனல் வார்த்தவர் கம்பம் பீர் முஹம்மது பாவலர். காந்தியின் கதர் இயக்கத்திற்காக தன் காலம் முழுவதையும் அர்ப்பணித்தவர். திருச்சி கல்லூரியில் இண்டர் மீடியட் வரை படித்த பாவலர், ஆங்கில அரசின் காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கையிலெடுத்து குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து குறுகிய காலத்தில் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தார்.
இந்த நிலையில் நாட்டு விடுதலைக் காக உங்கள் பட்டம் பதவிகளைத் துறந்து விடுங்கள் என்ற அறிவிப்பைக் கேட்டு, 1923 ஆம் ஆண்டு தனது பதவியைத் துறந்தார். அதன் பிறகு அவரைத் தேடி வந்த தாசில்தார் பதவியையும் வெறுத்து ஒதுக்கினார். அதன் பின் ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரப் பேச்சுப் போராளியாக உருவெடுத்தார்.
அவரது பேச்சினால் எழும் பிரளயத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் பேசுவதற்கு தடை விதித்தனர். உடனே வாயில் துணியைக் கட்டிக் கொண்டு தன் உடல் மொழியால் மக்களுக்கு உணர்ச்சியூட்டினார்.
1941 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவருடன் மைதீன் பிள்ளை இராவுத்தர், எஸ்.எஸ். மரைக்காயர், போடி கான் முஹம்மது புலவர், கே.சி. முஹம்மது இஸ்மாயீல், வழக்கறிஞர் எம்.கே. மீரான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆறு மாத சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. அபராதம் கட்ட மறுத்ததால் ஒராண்டு காலம் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது எழுத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பதை ஆங்கிலேயர்எடுத்த நடவடிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பாவலரின் 13 கையெழுத்துப் பிரதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சேறுவதற்கு முன்பே தேசத்துரோக புத்தகங்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நெருப்பிலிட்டுக் கொளுத்தப்பட்டது.((வி.போ.மு) வி.என்.சாமி பக் 649-654, (இ.வி.போ.த.மு) நா.முகம்மது செரீபு பக்.123, (தி.நி.ப) பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 95-96)
தாவூத் பாஷா
தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் தாருல் இஸ்லாம் எனும் மாத இதழைத் துவக்கி அதன் ஆசிரியராக இருந்தவர். குத்பா உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதால் முஸ்லிம்களிடம் கலகக்காரராக அறியப்பட்டவர். தஞ்சை மணியாற்றங்கரையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த பா.தாவூத் பாஷா அவர்கள்.
இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டிய தாவூத் பாஷா அரசியலிலும் அதே அளவிற்கு ஈடுபாடு கொண்டவர். இவர் சென்னை நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதுதான் மா.பொ.சிவஞானம் பொதுச் செயலாளராக இருந்தார்.
1917 ஆம் ஆண்டு துணை நீதிபதியாகப் பொறுப்பேற்று பணி யாற்றிக் கொண்டிருந்த தாவூத் பாஷா மாவட்டத் துணைக் கலெக்டராக பதவி உயர்வு பெறும் நேரத்தில் விடுதலை உணர்வால் உந்தப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நாட்டுப் பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.((வி.போ.மு) வி.என்.சாமி பக் 591-598
(இ.வி.போ.த.மு) நா.முகம்மது செரீபு பக்.123)
ஏ.டி.கே.ஷெர்வானி
உத்திரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் பிலோனா கிராமத்தின் மிகப்பெரிய ஜமீன் குடும்பம். விடுதலையின் வேட்கையை மிகுந்த வீரியத்தோடு வெளிப்படுத்திய ஷெர்வானி குடும்பம்.
குடும்பத்தின் மூத்தவர் தஸ்ஸதக் அகமத் கான் ஷெர்வானி (ஏ.டி.கே.ஷெர்வானி) லண்டனில் நேருவுடன் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1914 ஆம் ஆண்டு நாடு திரும்பியதிலிருந்து காங்கிரசே தன் கதியென்று மாறிப் போனவர். ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டிற்காக ஆங்கில அரசிடமிருந்து சிறைத் தண்டனையைப் பரிசாகப் பெற்றார்.
ஏ.டி.கே.வின் அடுத்த தம்பி நிசார் அஹம்து கான் ஷெர்வானி தபால் தந்தி துறையில் நல்ல ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை ஒத்துக் கொண்டதற்காக பொன்முட்டையிடும் வாத்தைப் பலி கொடுத்தார். பதவியைத் துறந்ததற்காக பிரிட்டிஷாரால் பலவிதத் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்.
ஏனெனில் ஒத்துழையாமை இயக்க அழைப்பின் பேரில் ஆங்கில அரசின் பதவியை முதன் முதலாக ராஜினாமா செய்தவர் நிசார் அஹமத் கான் ஆவார்.
அதே நேரத்தில் அலிகரில், இண்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்த ஏ.டி.கே. வின் இரண்டாவது தம்பி ஃபிடா அஹமத் கான் ஷெர்வானி போராட்ட அறைகூவலில் அவரும் தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு வெளியேறி விட்டார்.((வி.போ.மு) வி.என்.சாமி பக் 258)
இதே போன்று காங்கிரஸின் அனைத்து வகைப் போராட்டங்களிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
இவை உதாரணத்திற்கு மட்டுமே இப்படி இன்னும் பல உண்டு அவைகளை சொல்ல பக்கங்கள் போதாது...
கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம்’ என்று கூறினார்கள்.
இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதலைப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.
வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.
· வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,
· நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள்,
· மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி
போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.
ஆனால், நாடு விடுதலையடைந்த பிறகு தான் அடிப்படைக் கல்வியிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.
ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.
சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.
இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்!
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.
1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி
2) புதுக்கல்லூரி, சென்னை
3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்
11) முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
12) மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
14) கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
உட்பட 18 கலைக்கல்லூரிகள், 5 பெண்கள் கலைக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 8 பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப் பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங் களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.
இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.....
Source:- சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்??? என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக