இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 மார்ச், 2021

போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!


இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம். இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் நீங்கள் பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.

1) நாடும் அதில் உள்ளதும் இறைவனுடையதே!

நாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

= வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

2) குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு:

மனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில்உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது. முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும்.

3) ஏற்றுக்கொண்ட பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவீர்கள்!

ஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்க இருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.

= நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நபிமொழி நூல்: புகாரி )

4) பொது சொத்துக்கள் கையாளுதல்:

நாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கைகாரியம் செய்தால் கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (லி) அவர்கள் நூல் : புகாரி (6177)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக