இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மார்ச், 2020

நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள்


Image result for coronoமனித உடலை விட்டு வெளியேறக் கூடிய தும்மல், எச்சில், கபம், சிறுநீர், மலம் என அனைத்தும் உடல் தனக்கு வேண்டாம் என்று வெளியேற்றும் கழிவுகளே. இவை பெரும்பாலும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. இவற்றை முறையாகக் கட்டுபடுத்துவது நோய்கள் பரவலைத் தடுக்கும். இக்கழிவுகள் மற்றவர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக மக்கள் பேணவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இறைவன் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக கற்றுத் தருவதை நாம் காணலாம். தொழுகை போன்ற கட்டாயக் கடமைகளோடு நபிகளாரின் அன்றாட வழிமுறைகளைப் பின்பற்றுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
தூய்மை - நம்பிக்கையில் பாதி
 இஸ்லாம் தூய்மைக்கு முதலிடம் கொடுக்கிறது
 "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ நூல் : (முஸ்லிம்)
= திண்ணமாக இறைவன், தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன்.2:222)
= இறைவன் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள். மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள். (திருக்குர்ஆன். 5:88)

நோய்கிருமிகள் பரவாமலிருக்க   
= நபி (ஸல்) அவர்கள் தும்மினால், தம் கையைக் கொண்டு அல்லது தன் துணியை வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்துக்) கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), அபூ தாவூத்,. திர்மீதி)

தும்மலின்போது காற்றில் வெளியேறும் வைரஸ் கிருமி நீர்த்திவலைகள், மணிக்கு 100 மைல் வேகத்தில் வெளியேறும். இதன் மூலமாக எதிரில் இருக்கும் நபர்களுக்கு வைரஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே தும்மலின் வேகத்தை குறைப்பதற்கு கையை அல்லது துண்டை வைத்து மறைப்பதை இஸ்லாம் சுன்னத்தாக ஆக்கிவைத்துள்ளது. இது போன்று தான் கொட்டாவி விடுதலையும் இஸ்லாம் மறைக்கக் சொல்கிறது.

= உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், தன் கையால் வாயை மூடட்டும். நிச்சயமாக, ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), முஸ்லீம்.
துயில் எழுந்ததும் தூய்மை
.காலையில் தூங்கி எழுந்தவுடன் முகம், வாய், மூக்கை சுத்தம் செய்ய மார்க்கம் கட்டளையிடுகிறது.
= உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்கை மூன்று முறை சிந்தி சுத்தம் செய்யட்டும் ஏனெனில் ஷைத்தான் அவர் உள் மூக்கில் தங்குகின்றான்., என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லீம்)
எச்சிலை மண்மூடி மறைத்தல்
வெளி இடங்களில் எச்சில் துப்பினால் அதை மண்ணைப் போட்டு மறைக்கும் படி இஸ்லாம் ஏவுகிறது.
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” (முஸ்லிம்)
சிறுநீர் மற்றும் மலம் இவற்றிலிருந்து சுத்தம் பேணுதல்
இறைவிசுவாசிகளுக்கு  கடமையாக்கப்பட்ட தினசரி ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு உடல், உடை, இடம் இவை அனைத்தும் மலம் மற்றும் சிறுநீரில் இருந்து தூய்மையாக இருக்கவேண்டும் என்ற வரையறை உள்ளது.  ஆண் குழந்தைகளுக்கு செய்யப்படும் 'கத்னா' எனப்படும் பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சைக்கு  வேறு சில காரணங்கள் இருந்தாலும் அது முக்கியமாக சிறுநீரில் இருந்து உடலையும் உடையையும் தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டே நிறைவேற்றப் படுகிறது. 

சிறுநீரைப் பொறுத்தவரையில் அது அசுத்தமான ஒன்று என்ற உணர்வு பெரும்பாலானோருக்குக் கிடையாது. உடலிலோ உடையிலோ இருப்பிடங்களிலோ மலம் பட்டுவிட்டால் பொதுவாக அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் சிறுநீருக்கு இதே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.  பள்ளிகளிலும் சரி, வீடுகளிலும் சரி, பொதுமக்களுக்கு இடையிலும் சரி இதுபற்றி போதிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக வீடுகளில் குழந்தைகள் சிறுநீர் கழித்தாலோ பெரியவர்கள் சாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக வீடுகளிலும் சாலைகளிலும் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது.  ஆனால் தூய இறைமார்க்கமோ வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது.   குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள். 

= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ''இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்லித் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: நஸயீ)

பொது இடங்களில் கழிவுப்பொருள் 
பொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் நோய் பரவலுக்கு துணைபோகிறார்கள் என்பது மட்டுமல்ல பல மக்களின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள்.. இந்தத் தீய செயலை இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கண்டிக்கிறார்கள். 

ஒருமுறை அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல். அல்லது அவர்கள் நிழலாறக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 448

பொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக்  கொட்டுவோருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

கொள்ளை நோயின்போது வழிகாட்டுதல் 
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
= "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள் ' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) - புகாரி)
= “வியாதி பீடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்”
(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – புகாரி)
==============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக