இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மண்ணோடு மண்ணான பின் மீண்டும் வாழ்க்கையா?


Image result for grave inside viewகொலை செய்தாலும் கொள்ளையடித்தாலும் கற்பழித்தாலும் என யார் எதைச் செய்தாலும் எவர் மீதும் யாதொரு பழியுமில்லை, அவற்றைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற நிலை நீடிக்கும் வரை நாட்டில் அமைதி என்பதே இராது. இந்நிலை மாறி நாட்டுமக்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாற வேண்டுமானால் அவர்களின் மனங்களில் இறைவன், வாழ்க்கையின் நோக்கம், இறுதித்தீர்ப்பு நாள், மறுமை, சொர்க்கம் நரகம் பற்றிய உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக விதைக்க வேண்டும். அப்போதுதான் நம் செயல்களுக்கு விசாரணையும் அதற்கேற்ற பரிசும் தண்டனையும் உள்ளது என்ற பொறுப்புணர்வு ஏற்படும். மக்கள் ஒழுக்கம் பேணி வாழ முற்படுவார்கள். அந்த வகையில்  இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மறுமை வாழ்க்கை என்பது முழுக்கமுழுக்க சாத்தியமே என்பதை மனிதனுக்கு உணர்த்த பகுத்தறிவு பூர்வமான வாதங்களை முன்வைக்கிறது.   
எது பகுத்தறிவு ?
திருக்குர்ஆன் முன்வைக்கும் வாதங்களை அறியும் முன் எது பகுத்தறிவு என்பதை அறிவது நலம்.
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவுகிறது என்பது நாம் உறுதியாக அறியும் சத்தியமாகும். இது எதற்காக என்பது நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய விடயம். அதை இறைவனே பின்வருமாறு கூறுகிறான்:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
அதாவது இந்தக் குறுகிய வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது என்பதும் இறுதியில் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக மீண்டும் அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட உள்ளார்கள் என்பதும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் உண்மைகளாகும்.
இயற்கையில் உள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
 வறண்டு கிடந்த பூமியில் மழைநீர் விழும்போது அதிலிருந்து செடி கொடிகளும் தாவரங்களும் பச்சைப் பசேல் என முளைத்து செழித்து வளர்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். அவ்வாறு நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:
= பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற்பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். (திருக்குர்ஆன் 41:39) 

 = அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்;  இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 30:19)
நமது உடலே ஒரு சான்று!
இவ்வுலகைப் படைத்தவன் நம்மை மீண்டும் படைப்பான் என்பதை உணர நாம் ஒவ்வொருவரும் குடிகொண்டுள்ள நமது உடலே போதுமான சான்றாக உள்ளது. நாம் எவ்வாறு உருவானோம்? நாம் கடந்துவந்த பல்வேறு கட்டங்கள் என்னென்ன? என்பதை சற்று ஆராய்ந்தாலே போதுமானதாகும்.
= மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும்பின்னர் விந்தாலும்பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போதுஅது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன் 22: 5)

நபிகளாருக்கு முன்வைக்கப்பட்ட கேள்வி
நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்நாளின் போது மக்கா நகரில் சத்தியப் பிரச்சாரம் செய்து மக்களை நேர்வழிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒழுக்கத்தைப் பேணி வாழுமாறு மக்களை அழைத்தார்கள். அவ்வாறே ஒழுக்கம் பேணாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு மறுமையில் நரக தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்தார்கள். அப்போது அம்மக்கள் அக்கூற்றை மறுத்தார்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகளையெல்லாம் கொண்டுவந்து இவையெல்லாம் மீண்டும் உயிரோடு வர முடியுமா என்று கூறி எள்ளிநகையாடினார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்களே கீழ்கன்டவை:
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)
மரணமும் உயிர்தெழுதலும் அன்றாட நிகழ்ச்சி!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்.; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. (திருக்குர்ஆன் 39:42 )
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
மக்கள் சந்தேகத்தில் இருந்தாலும் சரி, அவர்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதும் இறுதி விசாரணையும் மறுமை வாழ்க்கையும் எல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விடயங்களாக உள்ளன. எனவே அவை அனைத்தும் கண்டிப்பாக நிகழ உள்ளன. அவை மிகவும் பக்குவமான முறையில் நிகழும் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான் இறைவன்:
= மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.  இவர்களிடம் கூறும்: உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (திருக்குர்ஆன் 32: 10,11)
= (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானாஅன்றுஅவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (திருக்குர்ஆன் 75:3, 4 )   

மறுமையை நம்பாது வாழ்ந்தவர்களின் நிலை:
இன்று நம்மால் இறைவனையோ தீர்ப்பு நாளையோ சொர்க்கம் நரகத்தையோ காண முடியாது. ஆனால் மறுமையில் அவற்றைக்  காணும்போது இறைவனையும் மறுமையயும் அனைவரும் நம்புவர். ஆனால் அப்போது அந்த நம்பிக்கை ஒருவருக்கும் பயனளிக்காது. தேர்வு எழுதுவதற்கான நேரம் முடிந்த பின் எப்படி தேர்வு எழுத முடியும்இறைவனைக் காணமுடியாதபோது அவனை நம்ப வேண்டும் என்பதில்தான் நாம் சோதிக்கப்படுகிறோம்.
= அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது! (திருக்குர்ஆன் 32:12) 
=============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக