இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2019

திருக்குர்ஆனில் வன்முறையைப் புகுத்தும் முயற்சி


Image result for highlight scriptures இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைப்பவர்கள் பலர் திருக்குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை  தாக்கத் தூண்டும் பல வசனங்கள் இருப்பதாக வாதிடுகிறார்கள்.  அதற்காக அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். உதாரணமாக:

= "ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்." (திருக்குர்ஆன் 2:191)
= "சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (திருக்குர்ஆன் 9:5)

வசனங்களும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடும்
எந்த ஒரு வசனத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த வசனம் பயன்படுத்தப்பட்ட  சந்தர்ப்ப சூழலை அறிவது மிகவும் அவசியமாகும். உதாரணமாக 'நான் உன்னை கொன்னுடுவேன்'  என்று ஒருவர் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இந்த வாசகம் நகைச்சுவையாக சொல்லப்பட்டதா அல்லது சீரியஸாக சொல்லப்பட்டதா என்பதை அறிய, இந்த வாசகம் யார் யாரைப் பார்த்து சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற சந்தர்ப்ப சூழ்நிலை (context)  அறிவது மிக மிக முக்கியம் ஆகும்.
 எந்த ஒரு புத்தகம் ஆனாலும் அது மத நூலே ஆனாலும் சரி இல்லாவிடினும் சரி,  சந்தர்ப்ப சூழலை ஒப்பிடாமல் வாசித்தால் தவறான பொருளையே தரும் அல்லது தவறாகவே புரிந்து கொள்ளப்படும். இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சில உதாரணங்களை இங்கு கவனிப்போம்:
பைபிள்:
பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 
50 ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். 
51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 
52 எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 
53 தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார் இயேசு.  லூக்கா 12:49-53
"யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." லூக்கா 14:26
"அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை  இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்றார்" லூக்கா 19:27
ஒருவர் மேல் உள்ள வசனங்களை மட்டும் வாசிப்பதாக இருந்தால், இயேசு அனைவர் மீதும் வெறுப்பையும் வன்முறையையும் ஊக்குவித்ததாகவே புரிந்து கொள்வார். கிறிஸ்தவர்கள் இந்தப் புரிதலை ஒப்புக் கொள்வார்களா?
பகவத் கீதை:
"ஆத்மா நிலையானது, அழியாதது! உடல் வடிவம் தான் முடிவடையும். ஆதலால் பாரதா, போர் செய்!" 2:18
"(போரில்) கொல்லப்பட்டால் சொர்க்கம் செல்வாய், வென்றால் உலகம் ஆள்வாய். ஆதலால் போர் செய்ய துணிந்து எழுந்து நில்."  2:37
"வேத வன்னியே! வேதங்களை விமர்சிப்போரை, வெட்டி, கிழித்து, தீயால் சுட்டெரித்து தீக்கிரைக்காக்கி சாம்பலாக்கு!" அதர்வ வேத மந்திரம்  12/5/62
யாராவது மேல் உள்ள வசனத்தை மட்டும் படித்தால், கிருஷ்ணன் போரையும் வன்முறையையும் ஊக்குவித்ததாகவே புரிந்து கொள்வார்.  இந்துக்கள் இந்தப் புரிதலை ஒப்புக் கொள்வார்களா?
கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் காப்பிடல்
கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் காப்பிடல் (மூலதனம்) ஒரு மத நூல் அல்ல. கம்யூனிச சித்தாந்த நூல். அந்த நூலில், கார்ல் மார்க்ஸ் இவ்வாறு எழுதுகிறார்:
"வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மகப்பேறு மருத்துவர்." அத்தியாயம் 31, பக்கம் 534 (ஆங்கில பதிப்பு).
யாரேனும் மேல் உள்ள வசனத்தை மட்டும் வாசித்தால் காரல் மார்க்ஸ் வன்முறையைத் தூண்டினார் என்று புரிந்து கொள்வார்கள். ஒரு கம்யூனிஸ்ட் இதை ஒப்புக் கொள்வாரா?

சரி இனி திருக்குர்ஆனுக்கு வருவோம்.
மற்ற புத்தகங்களைப் போலவே திருக்குர்ஆனையும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு செய்து வாசித்தால் மட்டுமே அவற்றின் சரியான விளக்கங்களைப் பெற முடியும். ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
ஒரு முஸ்லிம் ஐவேளை தொழுகை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
திருக்குர்ஆனில் உள்ள ஒரு வசனம்:
"தொழுபவர்களுக்கு நாசம் தான்!" 107:4 
யாராவது  மேலுள்ள வசனத்தை மட்டும் வாசித்தால் தொழுகை செய்பவர்களுக்கு நாசம் காத்திருக்கிறது. அதனால் யாரும் தொழக் கூடாது என்ற தவறான முடிவுக்குத்தான் வருவார்.

இந்த வசனமும் சந்தர்ப்ப சூழல் ஒப்பீடும்
"தொழுபவர்களுக்கு நாசம் தான்! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள், அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகின்றார்கள்." (திருக்குர்ஆன் 107:4,5, 6)
4,5,6 வசனங்களை சேர்த்து பார்க்கும் போது, அலட்சியமாய் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகின்றவர்களை பற்றித் தான் நான்காம் வசனம் பேசுகிறது என்பது நமக்கு நன்றாக விளங்கும்.

திருக்குர்ஆனும் வன்முறையும்
எந்த புத்தகத்தை வாசித்தாலும், அந்த வசனங்களின் சந்தர்ப்ப சூழல் ஒப்பீட்டை  பார்க்காமல், நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. போர் தொடர்பான எல்லா திருக்குர்ஆன் வசனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். உதாரணமாக சில வசனங்களை காண்போம்.
ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். (திருக்குர்ஆன் 2:191)

சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு
இந்த வசனத்தின் சந்தர்ப்ப சூழலை அறிய வேண்டுமானால், நாம் இந்த வசனத்தின் மேலேயும், கீழேயும் உள்ள வசனங்களை பார்க்க வேண்டும்.
உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் எல்லை கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 2:190)
ஆகவே அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே! (திருக்குர்ஆன் 2:191)
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:192)
மேல் உள்ள வசனங்களை வாசிக்கும் எவரும் திருக்குர்ஆன் உண்மையில் முஸ்லிம்களை எதிர்த்தும் அவர்களின் வீடுகளை விட்டு துரத்தியும், கொன்றும் துன்புறுத்திய இறைமறுப்பாளர்களைப் பற்றியே இது பேசுகிறது என்பதை அறியலாம். மேலும் இறைமறுப்பாளர்கள் போரை நிறுத்தி விட்டால் முஸ்லிம்களும் போரை நிறுத்தி விட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் வரம்பு மீறக் கூடாது என்றும் இந்த வசனம் எடுத்துச் சொல்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லீமல்லாதவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை பற்றி திருக்குர்ஆன்:
இஸ்லாம் என்பது இறைவன் பரிந்துரைக்கும் ஒரு வாழ்வியல் கொள்கை. ஒன்றே மனித குலம் ஒருவனே இறைவன் என்பதையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்பதையும் இஸ்லாம் அடிப்படையாக போதிக்கிறது. இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாம் எப்போதும் எதிரியாக பாவிப்பதில்லை.  சக மனிதனோடு உள்ள சகோதர உறவு என்றுமே முறிவதில்லை என்று போதிப்பது இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்களோடும் சரி, அல்லாதவர்களோடும் சரி நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ளவே திருக்குர்ஆன் கூறுகிறது:
"(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்." (திருக்குர்ஆன் 60:8)

அரவணைக்கும்  அன்பு காட்டு
மேலே உள்ள வசனத்தில் 'நன்மை' என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட அரபி வார்த்தை "தபர்ருஹும்" என்பது. இதற்கான மூல அரபி வார்த்தை 'பிர்'.  பிர் என்ற சொல் பெற்றோர்களிடம் காண்பிக்கும் மிக உயர்ந்த நன்னடத்தையை குறிக்கும். உதாரணமாக: பெற்றோரை அரவணைத்தல் என்பதற்கு 'பிர்ருல் வாலிதைன்' என்று நபிமொழிகளில் குறிப்பிடப்படுகிறது.
நபித்தோழர் இப்னு மஸ்ஊத் ரவி அவர்கள் கூறினார்கள்:  இறைத்தூதர் அவர்களிடம்  "இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.  இறைவனின் தூதரே, செயல்பாடுகளில் மிகச் சிறந்தது எது?' என்று கேட்டேன்.
' தொழுகையை அதன் நேரத்தில் சரியாக தொழுவது' என்றார்கள்.
'அடுத்தது எது?' என்று கேட்டேன்.
' பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது (பிர்ருல் வாலிதைன்)' என்று கூறினார்கள்
(நபிமொழி நூல்: புஹாரி, முஸ்லீம்)
முஸ்லிம் அல்லாதவர்களுடன், பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்று நன்னடத்தையோடும் நேர்மையாகவும், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இதுவே, இஸ்லாத்தின் நிலைப்பாடு.
முடிவுரை
1. எந்தவொரு புத்தகத்திலும் ஏதேனும் ஒரு தனி வசனத்தை அல்லது வாசகத்தை எடுத்து சந்தர்ப்ப சூழல் ஒப்பீடு பார்க்காமல்  மேற்கோள் காட்டுவது அந்த புத்தகத்தை தவறாகவே சித்தரிக்கும். திருக்குர்ஆனும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
2. சந்தர்ப்ப சூழல் ஒப்பீட்டோடு திருக்குர்ஆனை படிக்கும் எவரும், வன்முறையை தூண்டும் வகையிலோ முஸ்லிமல்லாதவர்களுடன்  வெறுப்பைக் காட்டும் வகையிலோ திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
3. முஸ்லிம் அல்லாதவர்களுடன் பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது போன்று நன்னடத்தையோடும் நேர்மையாகவும், முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
4. திருக்குர்ஆன் என்பது நம்மைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதையும் இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்க அல்லது உயர்த்த வந்ததல்ல என்பதையும்,  தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதையும் உணர்ந்துவிட்டால், மேற்படி குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என்பது எளிதாக விளங்கிவிடும்.
==================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக