Search This Blog

Tuesday, January 8, 2019

அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு


நெரிசல் நிறைந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் பயணி ஒருவரிடம் கண்டக்டர் வந்து, “அய்யா, எங்கே போகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
அந்தப் பயணியோ, “எங்கே போகிறேன்?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பேந்தப்பேந்த விழிக்கிறார்.
தொடர்ந்து கண்டக்டர், “நீங்கள் எங்கே ஏறினீர்கள்?” என்கிறார்.
“தெரியாது”
“சரி, நீங்கள் யார்?” என்கிறார் கண்டக்டர்.
“தெரியாது” என்று மீண்டும் சொல்கிறார் பயணி.
இவரைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை நாம் அறிவோம். இதைப் போலவே இருக்கிறது இன்று மக்களில் பலருடைய நிலையும்.
ஆம் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்..
= ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் தலைவர் சங்கர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். எல்லா முன்னணிப் பத்திரிகைகளிலும் வந்த செய்தி இது.
நாள்: அக்டோபர் 11, 2018.
தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர்.  முக்கியமாக இந்தியாவெங்கும் கலெக்டர்களாகவும், போலீஸ் கமிஷனர்களாகவும், எஸ் பிக்களாகவும், வெளியுறவுத்துறை செயலர்களாகவும் இருப்பவர்களில் பல பேர் சங்கரின் மாணவர்கள். இப்போது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வருடத்துக்கு பல ஆயிரம் மாணவர்களுக்கும் மேல்  படித்து வருகிறார்கள்.

IAS
அகாடமி வைத்து நாளைய ஆளுமைகளை உருவாக்கும் பணி செய்து வந்த சங்கர், குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார் என்பது எவ்வளவு வேதனையான ஒரு நிகழ்வு! நாட்டில் உயர்ந்த ஒரு பதவிக்காக வைக்கப்படும் பரீட்சையில் தேர்வதற்காக மாணவர்களுக்குப் பயிர்ச்சி கொடுக்கும் ஒரு நபர் வாழ்க்கை என்ற அதிமுக்கியமான பரீட்சையில் தோல்வி அடைவது மிகமிக சோகமான ஒன்றல்லவா?
வாழ்க்கையின் முக்கியத்துவம் அறியாமல் வளரும் மாணவர்கள்
= இவர் மட்டுமல்ல வருடாவருடம் பரீட்சை முடிவுகள் வெளியாகும் பல மாணவர்கள் மிகவும் அற்பமான காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதை அவ்வப்போது செவியுறுகிறோம். பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள் வரை அவர்களில் அடங்குவர்.  தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான். பலருக்கும் பல காரணங்கள்!
வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா? அவர்கள் மீது உயிரையே வைத்து இராப்பகலாக உழைத்து சம்பாதித்து வளர்த்ததும் அதற்காகத்தானா? படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று? என்ன காரணம்?
"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு... இறந்து விட்டால் எல்லாமே முடிந்துவிடும்" என்ற சிந்தனை தான் இதற்குக் காரணம். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பற்றிய தெளிவு கிடையாது என்பதே உண்மை!
தேவை வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வி
உண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள்தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும். கல்விக்கூடங்களில் வெறுமனே உயர்ந்த பதவியும் வருமானமும் பெறுவதற்கான கல்வி அறிவு மட்டும் போதிக்கப்பட்டால் போதாது. அவர்கள் கல்விக்கூடங்களில் செலவிடும் அவர்களின் இளமைக் காலம்தான் அவர்களின் உண்மையான ஆளுமைகளை வடிவமைக்கும் காலகட்டமாகும்.  மாணவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மரணம் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் ஆராய்தலை ஊக்குவிக்கும் முகமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றியாவது பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
= அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 67:2)
==============
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.in/2014/05/blog-post_15.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.in/2016/09/blog-post_12.html

No comments:

Post a Comment