'அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க' என்பது நாம் அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை!
வலியின் முக்கியத்துவத்தை யே இது உணர்த்துகிறது.
வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை! வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்!
அவ்வளவு ஏன்? வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான்! வலி உணரும் நரம்புகளைத் (pain receptors) தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்!
தோல் என்ற அற்புதத்தைப் படைத்த இறைவன் தன் திருமறையில் வெளிப்படுத்தியுள்ள பிரபஞ்ச இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பது வேறு விடயம்.
4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
நமது உடலின் பாதுகாப்பிற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடே வலி!
= வலி உணர்வலைகள் 0.61 m/ s வேகத்தில் காயம் அல்லது எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் இருந்து மூளைக்கு செல்கின்றன. உடலில் தோல்களிலும் மூட்டுகளின் மேற்பரப்பிலும் சிறப்பு வலி உணரும் நரம்புகள் (pain receptors) உள்ளன. உடலில் எங்காவது அடி விழுந்ததும் தானியங்கியாக இந்த நரம்புகள் தூண்டப்படுகின்றன. தண்டுவடம் மூலம் இவை மூளைக்கு உணர்வலைகளாக கொண்டுசெல்லப் படுகின்றன. மூளை அவற்றை வலியாகப் பதிவு செய்து உடனேயே அடிவிழுந்த பகுதிக்கு தற்காப்புக்கான கட்டளை இடுகிறது. உதாரணமாக ஒரு சூடான பொருளின் மீது வைத்த கையை எடுக்க வைக்கிறது. அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. பலமான அடி அல்லது வெட்டுகள் விழும்போது வலி உணரும் நரம்புகள் வீரியமாக செயல்படுகின்றன... வீரியமாக வலியைத் தூண்டும் இரசாயனங்களை வெளிப்படுத்த மூளை தூண்டுகிறது.
மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை.அதனால் மூளை வலியை உணருவதில்லை. மூளையின் செயல்பாடுகள் தடைபடுவதில்லை. வலி உணர்வு மூளைக்கு செல்வதன் முன்னால் அதைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ மைய நரம்பு மண்டலத்தால் முடியும். மூளை பல்வேறு வேலைகளை கவனித்துக்கொண்டு இருக்கும் போது அவற்றிலிருந்து மீண்டு வரும்வரை அவ்வாறு நிகழ்கிறது. உதாரணமாக போர் முனையில் அல்லது விளையாட்டில் ஈடுபடும்போது அலுவல் முடிந்தபின்னரே வலி உணரும் படலம் ஆரம்பிக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக