கடவுள் வழிபாடு என்பதை ஒரு தனி சடங்காகக் கற்பித்து வாழ்வின் மற்ற
துறைகளில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று கற்பிப்பவை மனிதர்களால்
உண்டாக்கப்பட்ட மதங்கள். கடவுளுக்கென்று சில சடங்குகளையும் காணிக்கைகளையும் செய்தால் எப்படிப்பட்ட பாவங்களுக்கும் பரிகாரம்
ஆகிவிடும் என்று மூடமாக அவை கற்பிப்பதால் மனிதர்கள் மேலும்மேலும் பாவங்களில் ஈடுபட
அவை ஏதுவாகின்றன. கடவுளின் பெயரால் ஏய்த்துப் பிழைக்கும் இடைத்தரகர்களையும் அவை
வளர்த்து விடுகின்றன.
ஆனால் உண்மை இறை மார்க்கம்
என்பது மதங்கள் என்று அறியப்படும் வீண்சடங்குகளின் தொகுப்பு அல்ல,
இடைத்தரகர்களுக்கு இடமளிப்பதும் அல்ல. ஆன்மீகத்தை மனித வாழ்விலிருந்து பிரிப்பதும்
அல்ல. மாறாக அது படைத்த இறைவனின்
வழிகாட்டுதலின் படி அமைந்த ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. மனித வாழ்வின் அனைத்து
துறைகளுக்கும் வழிகாட்டுவது. மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிப்பதோடு
அனைத்துத் தரப்பினரதும் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய சாசனங்களையும்
அறிவுறுத்தல்களையும் உட்கொண்டது. வாழ்க்கை முழுக்க இறைவனின் எவல்விலக்கல்களைப்
பேணி வாழ்வதே இறைபொருத்தத்தைப் பெற்றுத்தரும் என்றும் அவற்றை மீறுவோருக்கு
மறுமையில் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன என்றும் இம்மார்க்கம்
கற்பிப்பதால் மக்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல்கள், வியாபாரம், ஒப்பந்தங்கள்,
உறவுகள் அனைத்திலும் நேர்மை பேணும் பண்பு அங்கு உடலெடுக்கிறது.
கொடுக்கல் வாங்கல்களில் வியாபாரங்களில் உடன்படிக்கைகளில் அளவு மோசம்
செய்பவர்களை நோக்கி விடுக்கப்படும் இறைவனின் எச்சரிக்கைகளைப் பாருங்கள்:
83:1-3 அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்! அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து
வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள். அவர்களுக்கு
அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக்
கொடுக்கின்றார்கள்.
83:4.-6 திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில்
எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? ... ஒரு மாபெரும்
நாளில், அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும்
நின்றுகொண்டிருப்பார்கள்.
தொழுகை நோன்பு போன்ற
ஆன்மீக சடங்குகளை எவ்வளவுதான் பக்குவமாக ஒரு மனிதன் நிறைவேற்றினாலும் அவனது
கொடுக்கல் வாங்கல்களில் நேர்மை பேணப்படவில்லை என்றால் அவனுக்கு அந்த ஆன்மீக சடங்குகளால் பயனில்லை. மறுமையில்
இறுதித்தீர்ப்பு நாளன்று இறைவனிடம் என் அத்துமீறல்களுக்கு பதில் சொல்லியாக
வேண்டும் என்ற பொறுப்புணர்வை உண்டாக்குவது தொழுகையின் நோக்கங்களில் முக்கியமான
ஒன்றாகும்.
நபிகளாரின்
முன்மாதிரி நடவடிக்கைகள்
நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் வெறும் போதனைகளோடு நிறுத்திவிடாமல் தான் போதிப்பதை தனது வாழ்க்கையில்
நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். நேர்மை பேணக்கூடிய ஒரு சமுதாயத்தையே
உருவாக்கவும் செய்தார்கள். மோசடி எந்த உருவத்தில் வந்தாலும் அதை உடனடியாகக்
கண்டித்துத் திருத்தினார்கள்.
=
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன்
கையை நுழைத்தார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப்
பார்த்து) ”உணவுக்குச்
சொந்தக்காரரே! இது என்ன?” என்று
கேட்டார்கள். அதற்கு அவர், ”இறைத்தூதரே!
மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு
அவர்கள், ”மக்கள்
பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ
அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 164
=
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை
வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, ‘இது இன்னாருடைய மகன்
இன்னாரின் மோசடி’ என்று
கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்:
புகாரி 6177
வியாபாரிகள்
மற்றும் குடிமக்களிடம் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் தவறு செய்யும்போதும் தவறாமல்
கண்டித்தார்கள்.
= ‘நபி (ஸல்)
அவர்கள் ‘அஸ்த்’ என்னும்
குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத்
வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது
உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின்
வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு
அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று
பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில்
யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில்
இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில்
சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள்
பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா!
(உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636,
6679)
நேர்மையாளருக்கு இறைவனே கூட்டாளி!
=
இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர்
தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி)
ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 2936
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக